பிள்ளைகளுடன் ஒருநாள் - 2009 PDF அச்சிடுக மின்னஞ்சல்
one day with children-2009விபுலானந்தா சிறுவர் இல்லம்   -  திருப்பழுகாமம்
கதிரொளி சிறுவர் இல்லம்  -   கொக்கட்டிச்சேலை
சக்தி சிறுவர் இல்லம்  -   அரசடித்தீவு
மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம் -   சந்திவெளி

தங்கள் அமைப்பின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் மட்டக்களப்பு, இலங்கையிலுள்ள மேற்குறிப்பிட்ட இல்லங்களுக்குச் சென்று அவ்வில்லங்களை அவதானித்ததன் மூலமும் அவ்வில்லங்களிலுள்ள சிறுவர் சிறுமியர்களுடன் உரையாடியதன் மூலமும் கண்டுகொள்ள முடிந்தவற்றை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுகமாக சிறு அறிக்கையாக வரைகிறேன்.

நோக்கம் :

குறிப்பிட்ட இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் நிலைமைகளைத் தெரிந்து கொள்ளல்.

செயற்பாடு :

25.04.2009 – விபுலானந்தா
02.05.2009 – கதிரொளி
02.05.2009 – சக்தி
05.05.2009 – மாணிக்கவாசகர்

குறிப்பிட்ட திகதிகளில் இவ்வில்லங்களுக்குச் சென்று அங்குள்ள சிறுவர் சிறுமிகளுடனும் அவர்களைப் பராமரிக்கும் நபர்களுடனும் உரையாடியதுடன் அவர்கள் வாழும் சூழலையும் அவதானித்தமை, இவ்வுரையாடல், அவதானத்தின் போது

1.    பரஸ்பர அறிமுகம்
2.    விளையாட்டு
3.    அவர்களுடன் சேர்ந்து உணவருந்துதல்
4.    குழுவாக்கலும் அதுனூடு அவர்களின் தேவைகளை அறிதலும்
5.    'அவர்களுக்கான நேரம்' – கொடுத்தல்

என்பன போன்ற செயற்பாடுகள் இடம் பெற்றன.

விளைவு :

மேற்கூறிய செயற்பாடுகளின் மூலமாக என்னால் பின்வருவனவற்றை அறிந்து கொள்ள முடிந்தது.

விபுலானந்தா  -  58
கதிரொளி  -  32
சக்தி  -  35
மாணிக்கவாசகர்  -  35

இருக்கின்ற போதிலும் நான்கு இல்லங்களிலுமே பிரத்தியேக வகுப்புக்களுக்குச் செல்லல் (குறிப்பாக சாதாரணதரம், உயர்தரம்) விளையாட்டுப் போட்டிகளுக்காக தம்மைத் தயார் படுத்தல் என்ற காரணங்களால் அனைத்து சிறுவர்களையும் சிறுமியர்களையும் சந்திக்க முடியவி;ல்லை. இருப்பினும் அதிகளவானோர் சிறுவகுப்புக்கு உரியவர்களாக இருந்ததனால் அவர்களை சந்திக்கவும உரையாடவும் முடிந்ததது.

நான்கு இல்லங்களுமே தமக்கான சொந்தக்கட்டடிடங்களில் இயங்கிவருவது குறிப்பிடத் தக்கதாகும். சில போதாமைகள் இருக்கின்ற போதிலும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். நான்கு இல்லங்களிலுமே சொல்லி வைத்தாற் போன்ற வணக்கங்கள் வரவேற்கின்றன. அங்குள்ளவர்களுக்கு எனது வருகை தெரியப்படுத்தப் படாத போதிலும் புதியவர்கள் தம் சூழலுக்குள் வருகை தந்தால் வணக்கங்களால் வரவேற்க வேண்டுமென்ற வழிமுறை அவ்வில்லங்களில் பின்பற்றப் படுவதனால் வந்தனங்கள் வரவேற்பின் அடையாளமாயின. சிலரிடம் இயல்போடும் பலரிடம் இயல்பற்று இயந்திரத்தனமாயும் வெளிப்பட்ட வரவேற்புக்களை ஏற்றவண்ணம் நானும் உள்நுழைந்தேன்.

வெற்று வெளிகள் கட்டிடங்களாகி பின்னர் வாழும் சூழலை வழப்படுத்தும் முயற்சியாக சுற்றுச்சூழலை பசுமையாக்கும் முயற்சிகளை சக்தி தவிர்ந்த மற்றய இல்லங்களில்அவதானிக்க முடிந்தது. இம்முயற்சியில் மாணிக்கவாசகர் இல்லம் அண்மையிலேயே இறங்கியுள்ளதனால் (ஒரு வருடமாக சொந்தக் கட்டிடத்தில் வாழ்கின்றனர்) சுற்றிவர சூனியமாக இருக்கும் சூழலில் பிள்ளைகளின் பாடு பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. மற்றய இல்லங்கள் போன்றன்று மாணிக்கவாசகர் மக்கள் புழக்கமற்ற வெளியில் தான் மட்டுமாய் தனித்திருக்கின்றது. இதனால் மக்களின் தொடர்பு மட்டுமன்றி மரங்களின் தாலாட்டும் இப்பிள்ளைகளுக்கு எட்டுவது கடினமாகவே உள்ளது. வாயிற் கதவுக்கும் வாழுமிடத்துக்கும் இடையிலான பெருவெளி அவர்களை பெரிதும் பாதிக்கின்றது. வீட்டை அடைத்தால் வரும் இயல்பான சுவாசமற்ற எரிச்சலே மேலோங்குகிறது. வெளியின் தூரம் மட்டுமன்றி வெய்யிலின் புழுக்கமும் இதனை அதிகப்படுத்துகின்றது. காற்றாடிகளற்ற கட்டிடங்களில் காற்றினை எதிர்பார்க்கும் அவர்கள் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன. இதனால் இச்சூழலை பசுமையாக்கும் முயற்சி தீவிரமடைகின்றது. ஆனாலும் இது நிறைவேற நீண்ட நாட்கள் தேவை என்பது அவர்களுக்கும் தெரியும்.

'சக்தி' வீடுகள் அமைந்துள்ள சூழலில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இதனால் வெளிகள் மட்டுப்படுத்தப்பட்டு உலாவும் சூழல் கட்டிடங்களாலானதாக மட்டுமே உள்ளது.

யாரோ எனத் தெரியாத தேடல் அவர்கள் முகங்களில் பளிச்செனத் தெரிய, இல்லப் பொறுப்பாளர்களின் அறிவுறுத்தலை சிரமேற்கொண்டு அனைவரும் என் முன்னால் வாத்தியாரிடம் பாடம் கேட்கும் மாணவர்களாக வரிசையாக வந்தமர்ந்தனர். நான்கு இல்லங்களிலுமே ஒரு சில தெரிந்த முகங்கள் இருந்த போதிலும் தெரியாத முகங்கள் பல இருந்தன. புது முகங்கள் யாவற்றிலும் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, பயம், கூச்சம் யாவும் கலந்த ஒரு பார்வை. இதனைப் போக்கி நானும் அவர்களுள் ஒருத்தியாக நினைத்தேன். வரிசைகள் கலைந்து வட்டமாகினோம். அவர்களோடு அவர்களருகில் வெற்றுத் தரையில் நானும் அமர அத்தனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தது. அவர்களுக்குள்ளும் ஒரு நெகிழ்வு ஏற்பட்டது. முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அவர்கள் ஆளுக்காள் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். இதனை இன்னும் நெகிழ்த்த நினைத்து அதன் தொடக்கமாக எங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.

இந்நிகழ்வு எங்களை இயல்பான நிலைககு இட்டுச் சென்றது. ஒருத்தரையொருத்தர் தெரிந்தவர்கள் என்ற நிலையை ஏற்படுத்தியது மட்டுமன்றி பல விடையங்களை அறிய முடிந்தது.

1. அவர்களின் குடும்ப நிலை அல்லது சூழல்.
2. அவர்களின் உடல்சார் நிலைமைகள்.

எடுத்துக்காட்டாக பழுகாமம் விபுலானந்தா இல்லத்தில் இரு சிறுவர்கள் இயல்பில் மாறுபட்டவர்களாக இருந்தனர். ஒரு சிறுவனால் one day with children - 2009கதைக்க முடியாது.(நோய்) இச்சிறுவன் ஆறாந் தரத்தில் கல்வி கற்கின்ற போதிலும் அதற்கேற்ற வளர்ச்சிகள் எதுவும் இல்லை. வாசித்தல், எழுதுதல் என்பன இயலாத காரியங்களாகவே உள்ளன. மற்றய சிறுவன் மூளை வளர்ச்சி குன்றியவராக உள்ளார். இதனால் வயதுக்கேற்ற செயற்பாடுகள் இல்லாதவராக தன்னைத் தானே பராமரிக்க முடியாதவராக உள்ளார். இச்சிறுவர்களுக்கு பிரத்தியேகமான வகுப்புக்கள் அவர்களின் வாசித்தல், எழுதுதல் என்பவற்றில் தேர்ச்சி பெறுவதற்காக இடம்பெறுவதாக பராமரிப்பாளரால் கூறப்பட்டது. இவர்களுக்கு இது மட்டும் போதுமானதல்ல.

ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்பட்ட சிறுவனின் குடும்பச் சூழலே அச் சிறுவனை இத்தகைய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. தாயற்ற சிறுவன், தந்தையின் பராமரிப்பு இன்மை, பெரியதாயின் கொடுமை என்பவற்றால் ஏற்பட்ட மனப்பாதிப்பினால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். கல்வி மட்டுமன்று அவர்களின் உளம், அதன் வடுக்கள் என்பனவும் கருத்தில் கொள்ளப்படுவதான ஒரு பயிற்சி அல்லது முறைமை கையாளப்பட வேண்டும்.

இவ்விதமாக ஏதோ ஒரு விதத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட சில சிறுவர்களை நான்கு இல்லங்களிலும் அவதானிக்க முடிந்தது.

இவ்விதம் அவர்களை அறிந்து கொண்ட பின்னர். அவர்களை என்னோடு நெருங்க வைக்கவும் அச்சூழலை கலகலப்பாக்கவும் எண்ணி விளையாட்டுக்களில் ஈடுபட்டோம். கலந்து பேசுவதும் விளையாடுவதும் மாறிமாறி இடம் பெற்றது.

இதுவரை இருந்த மந்தமான சூழலை மாற்றி உற்சாகமான சூழலை ஏற்படுத்தியது. இவ்வுற்சாகம் அவர்களைப் பேச வைத்தது. மனநிலை பிறள்வினால் ஒதுங்கியிருந்தவர்களும் விளையாட்டினால் ஆர்வமடைந்தனர். இதனால் தொடர்ந்து அவர்களோடு பேசுவதும் செயற்படுவதும் இலகுவாக அமைந்தது.

எனினும் முழுமையாக அவர்கள் தங்களின் மனதில் பட்டதை அல்லது தாங்கள் நினைத்ததை வெளிப்படுத்துவதற்கான சூழல் அவர்களுக்கு கிடைக்கவில்லை. காரணம்:

1. எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி
2. இல்லப் பராமரிப்பாளர்களில் ஒருவர் உடனிருந்தமை

இதனால் சந்தர்ப்பம்கிடைத்த போது அவர்கள் சில உணர்வுகளை என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

'இப்ப வயித்துக்கு சாப்பாடு இல்ல, ஆரம்பத்தில அப்படி இருந்தது பிறகு அப்படி இல்லாம நல்லா இருந்த நாங்க. இப்ப திரும்பவும் முதல் மாதிரி நிலமை வந்திருக்கு இப்ப வருமானம் குறைவு' (விபுலானந்தா)

'வீட்டில பீடி எடுத்துத் தா, என்றாங்கன்னு இங்க கொண்டு விட்டா இங்கயும் அப்படி என்றா எப்படியக்கா?' (மாணிக்கவாசகர்)

'நான் ஆறு வருசமா இங்க இருக்கிறன். பள்ளிக்குப் போய்வந்தாப் பிறகு கொள்ளிக்குப் போய் வந்து சமச்ச காலமும் இருக்கக்கா, அப்படியெல்லாம் கஷ்டப்பட்ட நாங்க இப்ப பறாவாயில்லாம இருக்கம். எங்களுக்கு இப்ப வந்த இவர் இப்படியெல்லாம் எப்பயக்கா கதைக்கேலும்? நாங்க எப்படி விடுவம்?' (மாணிக்கவாசகர்)

மாணிக்கவாசகர் இல்ல சிறுவர்களின் வெளிப்பாடுகள் மேலாளர் மீதானதாகும். என்னால் அவரைப் பார்க்க முடிந்ததே தவிர கதைக்க முடியவில்லை. நான் சென்று கிட்டத்தட்ட அறுபது நிமிடத்தில் புறப்பட்டுச் சென்றவரை மீண்டும் நான் காணவில்லை. ஜம்பது வயதுக்கும் மேற்பட்டவரான இம் மேற்பார்வையாளர் இங்குள்ள பிள்ளைகளுடன் எவ்வித சம்பந்தமும் அற்றவராக உலவுவதே அவதானிக்க முடிந்தது. உணவருந்தும் போது கூட பிள்ளைகளுடன் அன்றி வேறான ஒரு இடத்திலே உணவருந்திச் செல்கிறார். தனியாக இவருக்கென ஒதுக்கப்பட்ட அறையொன்றில் தங்கியிருக்கும் இவர் அதிகாலையில் தங்களை எழுப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை எனவும் அவ்வாறு எழுப்பும் போது தமக்கு கோபமான சிறுவர்களை அடிப்பதாகவும் பிள்ளைகள் கூறினர்.

மட்டுமன்றி, இல்லப் பொருட்களை இம் மேலாளர் இஷ்ட்டப்படி வெளியில் எடுத்துச் செல்வதாகவும் அதனை தாம் கண்டதோடு அவரை அவ்வாறு செய்யாமல் தடுப்பதனாலேயே தமக்கும் அவருக்குமிடையில் முரண்பாடுகள் ஆரம்பித்தன என அங்குள்ள வளர்ந்த பையன்கள் வெளிப்படுத்தினர். தினமும் குடித்துக்கொண்டு வரும் இந்நபர் தம்மைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுவதோடு பீடி, நெருப்பு எடுத்துத் தருமாறு ஏவுவதாகவும் கூறினர். இவற்றினைத் தட்டிக் கேட்க முயலும் வளர்ந்த பையன்களை (உயர்தர மாணவர்களை) பிரத்தியே வகுப்புக்களுக்குச் சென்று வரும்போது 'ஆள்' வைத்து அடிப்பதாகவும், 'சூனியம்' செய்வதாகவும் சொல்லி மிரட்டியுள்ளார். இவற்றினால் மேற்பார்வையாளர் மேல் மிகுந்த பயம் கொண்டவர்களாகவே இச்சிறுவர்கள் காணப்படுகின்றனர்.

இது பற்றி உங்கள் பொறுப்பாளருக்கு தெரியப்படுத்தினீர்களா எனக் கேட்டபோது தாம் தெரியப்படுத்தியுள்ளோம் எனவும், 'பொறுப்பாளரான ரமேஸ் அண்ணனுக்கு எல்லாமே தெரியும் அவருக்கும் இவரப் பிடிக்காது, ஆனா அவரால ஒண்டும் செய்ய ஏலாது' என்க் கூறினர். அது ஏன் என வினவியதற்கு மேற்பார்வையாளர் இல்லத் தலைவரின் மாமா எனவும், அவரால் நியமிக்கப்பட்டவர் எனவும் கூறினர். அவரிடம் இது பற்றிக் கூறீனீர்களா எனக் கேட்டதற்கு தாம் கூறியபோதிலும் அவர் இதில் அக்கறை காட்டாததோடு மேற்பார்வையாளருக்கு சார்பாகவே தம்மிடம் பேசியதாகவும் கூறினர்.

பொதுவா நான்கு இல்லங்களிலுமே நீண்ட நேரம் அவர்களுடன் அருந்து தனித்தனியாகப் பேசியிருப்பின் மேலும் பல விடயங்களை அறிந்திருக்க முடியும். ஆனால் அதற்கான நேரமின்மை அவ்வாறான அறிதலுக்கு இடம்கொடுக்கவில்லை. இதனாலும், பலர் மத்தியில் இதை பேசுவதற்குப் பயம், வெட்கம் போன்ற காரணங்களால் தயங்குவர் என்பதாலும் அவர்களைச் சிறு சிறு குழுக்களாக்கி விருப்பங்களை, தேவைகளை, பிரச்சினைகளை எழுதித்தருமாறு தூண்டினேன்.

இவ்வழிமுறை முழுமையாக செயற்பட்டது அல்லது பயன்பட்டது என சொல்ல முடியாது. ஏனெனில் பெரும்பாலானவர்கள் சிறுவர்களே. இவர்களால் சிலவற்றை உணர்ந்து அதனை எழுத்தில் வெளிப்படுத்தல் என்பது கடினமானதே. ஒரு சில பெரிய பையன்கள் இருந்த போதிலும் அவர்களிடம் தயக்கமே மேலோங்கி இருந்தது. அதே வேளை தம்மை சந்திக்க வருபவர்களிடம் தமது தேவைகளை எப்படியும் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர். அது அவர்களுக்கு ஊட்டப்பட்ட ஒரு விடயமாகவே இருந்தது. இதனால் இச் செயற்பாட்டின் போது பெரும்பாலும் அவர்களது தேவைகளை, குறைபாடுளையே வெளிப்படுத்தினர். அவற்றை எழுத்திலும் தந்துள்ளனர்.

இதே போன்று அவர்களுடன் சேர்நது உணவருந்தியமையானது இன்னும் சில விடையங்களை தெரியப்படுத்தியது. இன்னமும் உணவு சமயத்தோடு இணைந்ததாகவே உள்ளது. இருபது நிமிடம் முதல் முப்பது நிமிடம் வரை ஒதுக்கப்படும் உணவுவேளை அர்களுககு ஒருகடமையாகவே அமைகின்றது. சாப்பாட்டுக்கன வேளையில் குறித்த இடத்தில வரிசையாக வந்தமரும் இவர்கள் உணவுத்தட்டத்தை தம்முன்னால் வைத்து கை கூப்பியபடி 'அன்னம்பாலிக்கும் தில்லைச்சிற்றம்பலம்' எனும் தேவாரத்தைப் பாடத் தொடங்குகின்றனர் அப்பாடல் முடிவடைந்ததும் குனிந்த தலை நிமிராமல் உணவருந்துகின்றனர். இவ்வேளை மிகவும் நிசப்தமாகவே கழிகின்றது. உணவருந்தும்போது பேசக்கூடாது என்பது இல்லத்தின் நடைமுறைகளில் ஒன்றாகவே உள்ளது. பிள்ளைகளிடம் அவர்கள் உணவருந்தும் போது கைக்கொள்ளுகின்ற நடைமுறைக்கான காரணம் என்னவெனக் கேட்டேன், பலருக்குத் தெரியவில்லை. விபுலானந்தாவில், உயர்தர மாணவன் ஒருவன் 'இவ்வுலகிலுள்ள அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டுமென்றே இவ்விதம் செயகின்றோம' எனக் கூறினார்.

குறித்த நடைமுறையினூடு அவர்கள் கூறும்காரணம் எவ்வாறு சாத்தியமாகும். என்பது தெரியவில்லை. இதுமட்டுமன்றி one day with children - 2009மாணிக்கவாசகர் இல்லத்தில் தொடர்ந்தும் மரக்கறி உணவே வழங்கப்படுகின்றது. பொறுப்பாளரான ரமேஸ் என்னிடம் தற்போது மரக்கறி உணவு மட்டுமன்றி மீன் இறைச்சி போன்ற உணவுகளும் வழங்கப்படுவதாகக் கூறினார். ஆனால் பிள்ளைகளுடன் உரையாடும் போது தொடர்ந்து மரக்கறி உணவே வழங்கப்படுவதாக கூறினர். இதே வேளையில் அங்குளள்ள நாளாந்த உணவிற்கான அட்டவணையிலும் முழுக்க முழுக்க மரக்கறி உணவு வகைகளையே அவதானிக்க முடிந்தது. இவ்வுணவில் விருப்பமற்ற தன்மையை பிள்ளைகள் வெளிப்படுத்தினர்.

நான்கு இல்லங்களிலுமே உள்ள பிள்ளைகள் தம்மை வெளிப்படுத்துவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எல்லா இல்லங்களிலும் இறுதியில் அவர்கள் ஏதோ ஒரு நிகழ்வினை செய்து காட்டல் என்பதற்காக 'அவர்களுக்கான நேரம்' வழங்கப்பட்டது. இதில் அனைவருமே ஆர்வத்தோடு பங்கு பற்றினர். பலரின் திறன்களை கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆர்வங்களை ஆற்றல்களை ஓரளவு அறிய முடிந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இக்களத்தினை தமக்கான வெளிப்பாட்டுக் களமாகப் பயன்படுத்தினர். பாடுதல், ஆடுதல் என்பவற்றையே அவர்கள் நிகழ்த்திக் காட்டினர். தனியாகவும் சேர்ந்தும் ஈடுபட்டனர். இவ்விரு செயற்பாட்டிலும் அதாவது எல்லோரும் சேர்ந்து பாடி ஆடி பொழுதைக் கழிப்பது இவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. ஆனால் இதற்கான களம், வாய்ப்பு என்பன மிகமிக அரிதாகவே கிடைக்கின்றன. பொது நிகழ்வுகள் அல்லது விழாக்கள் இல்லங்களில் இடம் பெறும் போது இவ்வாய்ப்பைப் பெறுகின்றனர்.

1. நான்கு இல்லங்களிலுமே வானொலிப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி காணப்படுகின்றன. விபுலானந்தா இல்லத்தில் வளர்ந்த பையன்களால் வொனொலிப் பெட்டி குறித்த நேரங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. ஞாயிறு பகல் வேளையில் படம் பார்க்க அனுமதித்துள்ளனர்.

கதிரொளியில் சனி,ஞாயிறு இரு தினங்களிலும் தொலைக் காட்சிப் பெட்டியில் படம் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர். இரு இல்லங்களிலும் ஞாயிறு தினங்களில் 'இராமாயணம்' பார்ப்பதற்கும் அனுமதித்துள்ளனர்.

சக்தி இல்லத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கின்ற போதிலும் அதன் பாவனை இல்லாமலே போகின்றது. சிறுமிகள் அது பழுதடைந்து விட்டதாகக் கூறினர். பொறுப்பாளரோ அவ்வாறில்லை எனவும் அலைவரிசைகள் ஒழுங்காக இல்லை எனவும் கூறினார்.
மாணிக்கவாசகர் இல்லத்தில் இரவு நேரச் செய்தி அறிக்கையைப் பார்ப்பதற்கும் ஞாயிறு தினத்தின் படம் பார்க்க அனுமதித்துள்ளனர்.

2. நான்கு இல்லங்களில் விபுலானந்தாவில் மட்டும் செய்தித்தாள் வாசித்தல் இடம் பெறுகின்றது.
3. நான்கு இல்லங்களிலுமே நூலக வசதி இல்லாமல் உள்ளது. சில புத்தகங்கள் வைத்துள்ளனர். அவை யாவும் அவர்களது பாடசாலை கல்வி சம்பந்தப்பட்டதாகவும் புராண இதிகாச கதைகள் நீதிநெறிக் கதைகள் சம்பந்தப் பட்டாகவுமே உள்ளன.
4. இட்ட கட்டளைக்கு கட்டுப்படுதலன்றி குறித்த விடயம் பற்றி பிள்ளைகளுடன் உரையாடி அவர்களையே அவ் விடயம் தொடர்பான முடிவினை எடுப்பதற்கு தூண்டுவதான அணுகுமுறை மாணிக்கவாசகர் இல்லத்தில் காணப்படுகின்றது.
5. நான்கு இல்லங்களுமே 'உதவி' தவிர வேறு சில அமைப்புக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளுகின்றனர்.


விபுலானந்தா:

'ஒருநாள் உணவுத்திட்டம்' என்ற நடைமுறையை மேற் கொள்ளுகின்றனர்.
அதாவது அக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் விழாக்கள் அந்திரட்டி நிகழ்வின் போது அதனையொட்டி இல்லச் சிறுவர்களுக்கு உணவினை வழங்கு முகமான ஒழுங்கு படுத்தலை மேற்கொண்டுள்ளனர். இதனை முன்கூட்டியே திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளனர். இதில் விடுபடும் நாட்களிலேயே இல்லத்தின் நிதி, உணவிற்காக செலவிடப்படுகின்றது. இது பத்திரிகைகளில் வரும் அந்திரட்டி, வீட்டு விழாக்கள், மரண அறிவித்தல் இவற்றினை அவதானித்து அவர்களை தொடர்பு கொள்ளல் என்பதனூடாகவும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றனர். இந் நடைமுறையை நான்கு இல்லங்களுமே பின்பற்றுகின்றனர்.

'எகெட்', 'பி.பி.டி.ஆ.ஓ', 'சேவ்த சில்றன்' போன்ற சில நிறுவனங்கள் புத்தகங்கள், உடை, சில பொருட்கள் என்பவற்றை வழங்கியுள்ளன.

லண்டன் 'கனக துர்க்கா' அமைப்பினரிடமிருந்து மூன்று மாதங்களுக்கொருமுறை இரண்டு லெட்சம் ரூபாவினைப் பெற்றுக் கொள்ளுகின்றனர். தவிரவும் கதிரைகள் வாடகைக்கு விடுவதன் மூலம் சிறு வருமானத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றனர்.


கதிரொளி:

உணவுக்காக மேற்கூறிய பத்திரிகை முறையைக் கையாள்வதோடு கிராமத்திலும் அத்தகைய ஒரு நாள் வழங்கப்படும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளுகின்றனர்.

பொறுப்பாளர் இல்லாததனால் சரியான தகவலைப் பெறமுடியவில்லை. இங்கு குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலுள்ள நபருக்கு இவ்விடயங்கள் பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அவுஸ்ரேலியாவில்இருந்து வந்தவர்களிடமிருந்து இரண்டு லெட்சம் ரூபா இவ்வருடத்தில் பெறப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரினால் சமையற் பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. தவிர கதிரை வாடகைக்கு விடுவதன் மூலம் சிறு வருமானத்தை பெற்றுக் கொள்ளுகின்றனர்.



சக்தி:

கடந்த ஒரு வருட காலமாக புஸ்ப்பலிங்கம் அல்லாது புதிதான ஒரு நிருவாக சபையே இவ்வில்லத்தை நடத்தி வருகின்றனர். எவ்வித நிதியும் அற்ற நிலையிலேயே புஸ்ப்பலிங்கத்தினால் புதிய நிருவாகசபையிடம் சக்தி இல்லம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பின்வரும் வழிமுறைகளின் மூலம் பிள்ளைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

1. உலக உணவுத் திட்ட நிகழ்வினை (World Food Programe) மேற்கொள்வோரினால் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இக்கிராமத்தில் காணப்படும் கலைக் குழுவினரைப் பயன் படுத்தி சிரமதானங்களை மேற்கொண்டு அதற்காக கொடுக்கப்படும் உணவுப் பொருட்களை இல்லப்பிள்ளைகளின் உணவுத் தேவைக்கு பயன்படுத்துகின்றனர்.
2. மற்றய இல்லங்களைப் போன்று அந்திரட்டி, பிறந்ததின விழா, திருமண விழா போன்றவற்றை ஒட்டி உணவு வழங்ப்படுகின்றது.
3. இக்கிராமம் விவசாயக் கிராமமாதலால் 'போடி'மாரை அணுகி நெற்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை விடவும் தமது இல்லத்திற்கான நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொள்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக வெதுப்பகம் ஒன்றினை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதோடு அதற்கான வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர். இதற்காக பண உதவியினை இல்லத்துக்கு வருகை தந்த ஐரோப்பிய நாட்டினர் ஒருவர் தருவதாக கூறியிருக்கின்றார். தவிரவும் இன்னும் பல தேவைகள் இருப்பதாகவும் இவற்றினை நிறைவேற்ற முடியாமலிருப்பதாகவும், கடன் பெற்றே சித்திரை வருடப் பிறப்பன்று பிள்ளைகளுக்கு உடைகளை வேண்டியதாகவும் கூறினார்.

மாணிக்கவாசகர்:

1. இவர்களும் அந்திரட்டி, வீட்டு விசேஷங்களின் போது வழங்கப்படும் உணவினை இல்லச் சிறார்களுக்கு கிடைக்க வழி செய்துள்ளனர். அத்தோடு 'ஒரு நாள் உணவுத் திட்டத்தினையும் கைக் கொள்ளுகின்றனர்.
2. 'மனித நேமம்' என்ற அமைப்பினால் மாதம் ஒன்றிற்கு ஒரு லெட்சம் ரூபா வழங்கப்பட்டு வந்துள்ளது. எனினும் கடந்த நான்கு மாதகாலமாக கிடைக்கப் பெறவில்லை எனக் கூறினர்.
3. கடந்தகாலப் பகுதியில் 'ரீ.ஆர்.ஓ'வினால் வழங்கப்பட்ட பொருளுதவிகளினால் தம்மால் எட்டு லெட்சம் ரூபாவினை சேமிக்க முடிந்ததாகவும் அச்சேமிப்பில் தற்போது மீதியுள்ளதாகவும் கூறினர்.
4. 'ரீ.ஆர்.ஓ', 'தந்திரதேவா சுவாமிகள'; ஆகியோரால் வழங்கப்பட்ட பயிற்சிப் புத்தகங்கள் முதலானவற்றில் ஒருபகுதி தற்போதும் கையிருப்பிலுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
5. 'ஓப்கிமா' நிறுவனத்தினால் தைப்பொங்கலுங்காக பிள்ளைகளுக்கு உடைகளை வழங்குவதற்காக வழங்கப்பட்ட பணத்தில் மிகுதி இருந்ததாகவும் அம் மிகுதிப் பணத்திலேயே சித்திரை வருடப் பிறப்பை ஒட்டி உடைகளை வாங்கியதாகவும் கூறினர்.
6. இதே வேளை இவ்வில்ல வளாகத்தினுள் மாணிக்க வாசகருக்கான சிறு ஆலயம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றது.
7. இல்ல வளாகத்தின் ஒரு பகுதியின் தோட்டச் செய்கையிலும் ஈடு பட்டுள்ளனர். தற்போது அன்னாசி செய்கையை மேற்கொண்டுள்ளனர். இதைவிட மாடு ஒன்றினையும் வளர்த்து வருகின்றனர். இத் தோட்டத்தினையும் மாட்டினையும் பராமரிப்பதற்காக வயோதிபர் ஒருவரையும் அவரது மனைவியையும் குடிசை ஒன்றில் குடியமர்த்தியுள்ளனர். இவருக்கு மாதாந்தம் ஏழாயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது.


நான்கு இல்லங்களிலுமே ஒவ்வொரு வருடமும் தைப் பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் புத்தாடைகள் வழங்கப் படுகின்றன.

விபுலானந்தா இல்லத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அக்காலப் பகுதியில் பிறந்த தினங்களை உடையவர்களை ஒன்றிணைத்து பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதன் போதும் அக் குறிப்பிட்ட குழந்தைகளுக்கு மட்டும் புது உடைகள் வழங்கப்படும் வழக்கம் உள்ளது.

நான்கு இல்லங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் தமக்கான நிதிக் கையாள்கை பற்றி அதாவது எங்கிருந்து எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்பது தெரியாததாகவே உள்ளது. சில நிறுவனங்களால் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை பற்றி ஓரளவு தெரிந்துள்ளது. இல்லத்தில் பல வருடங்களாக இருக்கும் வளர்ந்தவர்களுக்கு தமது நிதியுதவி செய்பவர்கள் பற்றி தெரிந்துள்ளது. ஆனால் அது பற்றிய விபரங்கள் தெரிவதாக இல்லை. இந்நிலை மோசடிகளுக்கும் இட்டுச் சென்றுள்ளது.

சக்தி இல்லத்துக்கு கடந்த வருடம் கார்த்திகை மாதத்தில் வழங்கப்பட்ட பணம் அவ் இல்ல நிருவாகி புஸ்ப்பலிங்கம் அவர்களால் புதிய நிருவாக சபையிடம் கையளிக்கப்படவில்லை. இப்பணம் பற்றி பிள்ளைகளுக்கும் எதுவும் தெரியாது.
 
HINDO என்பது கதிரொளி, சக்தி, சிவயோகம் ஆகிய மூன்று இல்லங்களுக்கும் பொதுவான ஒருஅமைப்பு. 'கின்டோ' அமைப்பில் உள்ளடங்கியதாகவே மேற்கூறிய மூன்று இல்லங்களும் அமைந்துள்ளன. இவ்வமைப்பினை நடத்துபவர்களில் முக்கியமான ஒருவராக புஸ்பலிங்கம் இருந்து வருகிறார். இதனால் சக்தி இல்லத்திற்கென தனியான வங்கிக் கணக்கெதுவும் இல்லை. புதிய நிருவாக சபையிடம் இல்லம் ஒப்படைக்கப்பட்ட போதிலும் எவ்வித ஆவணங்களும் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. இந்நிலையில் அவ் இல்லத்திற்கென தனியான ஒரு வங்கிக் கணக்கினை திறப்பதென்பதும் முடியாததாகவே உள்ளது.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களும் 'கின்டோ'விடம் உள்ளதால் 'கின்டோ' அமைப்பே இவ் இல்லத்தை சுயமாக one day with children - 2009இயங்குவதற்கேற்றவாறு தன்னில் இருந்து விடுவிக்க வேண்டும். அவ்வாறு இடம் பெறாத காரணத்தினால் சக்தி இல்லம் சுயமாக இயங்குவது முடியாததாகவே உள்ளது.


எனது அவதானத்தில்:

இல்லங்கள் இருப்பதென்பதும், அதனை ஊக்கப்படுத்துவதென்பதும் விரும்பத்தக்கதல்ல. ஆனால் எமது துர்அதிஷ்டம் இல்லங்களை கட்டாயம் உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந் நிலையில் இல்லங்கள் தமக்குரியவர்களை மட்டும் உள்வாங்கிக் கொள்வது அவசியமானதாகும். இல்லாதவிடத்து இல்லத்தில் இருக்க வேண்டிய குழந்தை வீதியில்கிடந்து தவிப்பது தவிர்க்க முடியாததாகும்.

இல்லங்கள் இல்லாதவர்களின் இயலாமைக்கு உதவுவது மட்டுமல்ல, நல்ல மனிதர்களாக அவர்களை உருவாக்கவும் வேண்டும். வெவ்வேறு சூழல்கள், பழக்க வழக்கங்களில் இருந்து இங்கு வரும் குழந்தைக்கு தம்மை புடமிட்டு புதுமனிதராக்கும் புதியதோர் உலகத்தை நாம் தரிசிக்கவைக்க வேண்டும்.

பொதுவாக குறிப்பிட்ட நான்கு இல்லங்களிலுமே இதன் போதாமைகள் நிறையவே உள்ளன. இதனைக் கருத்திற் கொண்டு செயற்படுவதாக எந்தவொரு இல்லத்தின் செயற்பாடுகளும் அமையவில்லை. இல்லாதவர்களுக்கு உதவுதல் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது. எனவே இல்லங்களின் இலக்குகள் மறு வடிவம் பெறாதவிடத்து இல்லங்களின் அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.  

- ஜெயகலா (உதவி/இலங்கை)

08/2009
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது ( Friday, 05 February 2010 23:52 )
 

பேசும் படம்

3009.jpg

பேசும் படம்...

3109.jpg