உதவி தேடி உதவி அச்சிடுக மின்னஞ்சல்

ui0109"என்ர அப்பா என்னை கண்ணே குஞ்சு செல்லம் எண்டெல்லாம் கூப்பிடுவார்" என்னை அவர் நிறைய அன்புகாட்டி வளர்த்தார்.

"அவர் ஒரு விவசாயி. ஒருநாள் காலம வயலுக்குப் போகேக்க ஆமி பிடிச்சு அவர கொண்டிட்டுது... அம்மா என்னை 15 வயசு மட்டும் வளத்தா. அதுக்குப் பிறகும் தட்டத்தனிய என்னை வளர்க்கிறதுக்கான அம்மாட கஸ்ரங்கள என்னால தாங்க முடியேல்ல. அப்ப நான் அவட்ட சொன்னன், என்ன ஒரு சிறுவர் இல்லத்தில கொண்டே விடச் சொல்லி"

"இங்க வந்த பிறகுதான், எனக்கு விளங்கிச்சு. என்னை மாதிரி தாங்கள் நேசிக்கிற ஆக்கள இழந்த கன பேர் இருக்கினம் எண்டிறது. இப்ப நான் என்ர பெற்றோரிட நல்லாசிகளையும் இந்த இல்லத்துக்கு உதவிற ஆக்களிட ஆதரவையும் தான் என்ர எதிர்காலத்துக்காய் நம்பி இருக்கிறன்"

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிற "உதவி" இதுபோன்ற வேதனை மிகுந்த சில குரல்களுக்கு செவிசாய்த்து, அதற்கு, தன்னால் இயன்றவரையான உதவிகளை வழங்க முயலுகிறது. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுள்ள மிக மோசமான நிலையிலுள்ள ஐந்து சிறுவர் இல்லங்களுக்கே அவ்வாறான உதவிகளை வழங்குகிறது. அவ் இல்லங்களாவன: திருப்பலுங்காமத்திலுள்ள விபுலானந்தா சிறுவர் இல்லம், மொறக்கட்டாஞ்சேனையிலுள்ள மாணிக்கவாசகர் சிறுவர் இல்லம், சிற்றண்டியிலுள்ள யோகஸ்வாமி மற்றும் கொக்கட்டிச்சோலையிலுள்ள கதிரொளி மற்றும் சக்தி சிறுவர் இல்லங்கள்.

ஆண்களும் பெண்களுமாயுள்ள ஏறத்தாழ (5 வயது முதல் 20 வயதுவரையான) 150 சிறுவர்களும் யுத்தத்தில் தாய்தந்தையை இழந்தவர்களாகவோ, பெற்றோர்களில் ஒருவரையே உடையவர்களாகவோ அல்லது வறுமை, நோய், போன்ற காரணங்களால் அவர்களை வளர்க்க இயலாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவோ உள்ளார்கள். பொதுவாக இவர்களில் அனைவருமே போரிலிருந்து உயிர்தப்பிய பிள்ளைகள் ஆவர்.


உதவி நவம்பர் 4 2002இல் உருவாக்கப்பட்டது. அது - சில நண்பர்களால் - அன்றாட பொருளாதார உதவி கிடைக்காமலிருந்த 5 சிறுவர் இல்லங்களுக்கு உதவும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. ஆனால் நன்கொடையாளர்களால் நிரம்பி வழியும் பல இல்லங்கள் போல உதவி அதிர்ஸ்டம் செய்யவில்லை.  வெளிநாடுகளில் -முக்கியமாக ஐரோப்பாவில்- வாழும் தனிநபர்களால் தரக் கூடியதாய் இருக்கும் சில ஈரோக்களே உதவிக்கு கிடைக்கும் நன்கொடைகளாகும். உதவிக்கான நன்கொடை சேர்க்கும் தளம் (வெளிநாடு) பெரியதாக இருப்பினும், அதன் நிதி வரவு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாக இருக்கிறது.

ஆயினும், உதவி இணையத்தளம் உருவாக்கப்பட்ட பிறகு, அது பல நன்கொடையாளர்களை ஈர்ப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. உதவி இணையத்தளத்தைப் பார்வையிடுகிற, வெளிநாடுகளைச் சேர்ந்த மனிதநலன்விரும்பிகளும், மற்றும் உதவிக்கான நிதி சேகரிப்பாளர்களால் தொடர்புகொள்ளப்படுபவர்களும், இவ் இல்லங்களுக்கான தமது பங்களிப்புகளைச் செய்கிறார்கள்; எனிலும் அவ் நிதி இவ் இல்லப் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதுக்கு மிகக் குறைவானதாகவே உள்ளது.

ui209(உதவியின்) இறுக்கமற்ற அமைப்பு முறையினதும், அதுக்குக் கிடைத்த தொடர்ச்சியற்ற (நிதி) பங்களிப்புகளதும் விளைவு, உதவிக்குக் கிடைக்கும் நிதிகளை நிதியளிப்பவர்களே தெட்டத் தெளிவாகக் கண்காணிக்கும் மிகவும் வெளிப்படையான முறையை அறிமுகப்படுத்துவதில் முடிந்தது.  இணையத்தளம் கிடைக்கும் நிதிகளது வரவு செலவுகளை பதிவுசெய்கிறது. முக்கியமாக, நிதி தருபவர்களுக்கு ஒரு கடவுச்சொல் தரப்படும்; அக் கடவுச்சொல்லைப் பாவித்து, உள் நுழையும் நிதி தருபவர், நிதிகள் எவ்வாறு செலவளிக்கப்படுகின்றன என்பதைப் பார்வையிடலாம். மேலும் நம்பகத்தன்மையைப் பேண, நிதிப் பங்களிப்பாளருக்கு, அவரது நிதியில் இல்லப் பிள்ளைகளுக்கு வாங்கப்பட்டவற்றை அவர்கள் உபயோகிப்பதை நிரூபிக்கும் புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன.

"ஒரு சோடி சப்பாத்து வாங்கினாலும், அதை உபயோகிக்கும் இல்லப் பிள்யைன் படம் [நிதி வழங்குபரது பார்வைக்கு மட்டும்] இணையத்தில் பிரசுரிக்கப்படும்" என்கிறார் உதவியின் நோக்கத்துக்கு உயிரூட்டுகிறவரும், அதன் ஒருங்கிணைப்பாளருமான வெற்றிவேல் யசிகரன்.


மொத்தமாக உதவிக்குக் கிடைக்கும் நிதி அதன் தேவைகளுக்கேற்பவே செலவுசெய்யப்படுகிறது. இப்போது இந்த நொடி வரையில், நிதியின் பெரும்பகுதி உணவுத் தேவைக்கும், எஞ்சும் சிறு பகுதி பிள்ளைகளின் கல்வித் தேவைக்குமே உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, துரதிர்ஸ்டமான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இப் பிள்ளைகளது அன்றாட சாப்பாட்டுக்கான தேவைக்கே போதுமானதாயுள்ளது குறுித்து யசிகரன் வருந்துகிறார்.

"பிள்ளைகள் இப்படி வாழ வேண்டி இருப்பது நியாமில்லை. அதனால்தான் நாம் மேலும் நிதியுதவியை வேண்டி நிற்கிறோம்," என்கிறார் யசிகரன்.

அவர் மேலும் கூறுகிறார்: அவர்கள் மிகுந்த திறமைவாய்ந்த சிறுவர்கள் . சிலர் பாடகர்கள், சிலர் ஓவியர்கள், இன்னும் சிலரோ பள்ளிக்கூட இசைக்குழுக்களில் வாத்தியம் வாசிக்க விரும்புவர்கள். ஆனால் பணவசதியின்மையால் தமது கனவுகளை தொடர முடியாதிருப்பவர்கள்.

வீட்டில் வசிக்க நிர்ப்பந்திக்கபடும் பிள்ளைகளுக்கு, வெளியுலகத்துடனான தொடர்பு துண்டிக்கப்படுதல் தவிர்க்கமுடியாத விளைவு ஆகும். ஆதலால், மிச்சமுள்ள மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளில் சேகரதித்த நிதியுடன், உதவி, இல்லப் பிள்ளைகளை கற்குடா கடற்கரைப் பக்கம் (சுனாமிக்கு முன்னர்) சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் கொழும்புக்கு ஓர் உல்லாசப் பயணம் போனார்கள். அத்துடன் தமது அனுபவத்தை எழுதவும் ஊக்குவிக்கப்பட்டார்கள். அவர்களது எழுத்து இணையத்தளத்தில் பிரசுரிக்கவும் பட்டது.

இத்தகைய வெளியுலகத் தொடர்புகள், சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும் தமது இல்லத்தின் நான்கு சுவர்களுக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதையும் கற்றுக் கொள்ள உதவிற அதே சமயம், அவர்கள் தமது நிலையிலுள்ள மனிதர்களை சந்திப்பதற்கும் உதவுகிறது. மேலும், அவர்களுக்கு உதவக் கூடிய மனிதர்களைச் சந்திக்கின்ற வாய்ப்பையும் அது அளிக்கின்றது. தமது அனுபவங்களை எழுதுவதூடாக அவர்கள் உலகமெங்கிலுமுள்ள பிற சிறுவர்களுடன் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள அது உதவுகிறது; அதை வாசித்த பிற சிறுவர்கள் சகோதரத்துவ மற்றும் தோழமையுணர்வை உருவாக்கும்படியாய் கடிதங்கள் எழுதியுள்ளார்கள்.

பிள்ளைகள் தமது இல்லங்களின் சுற்றுவட்டாரங்களிலுள்ள பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். விடுமுறைக் காலங்களில், அவர்கள் தமது காப்பாளர்களையோ உறவினர்களையோ சந்திக்கச் செல்கிறார்கள்; அல்லாதுவிடில் இல்லங்களில் தங்குகிறார்கள். ஒவ்வொரு இல்லங்களுக்குமென பிரத்தியேகமான சீருடைகள் கொண்டுவருவது என்பது பரிந்துரைக்கப்பட்டபோதும், அது இல்லப் பிள்ளைகளை 'தாய் தகப்பன் அற்றவர்கள்' என்றோ 'உதவிப் பணத்தில் வாழ்பவர்கள்' என்றோ எதிர்மறையான முத்திரையை குத்த வழிவகுக்கும் என்பதால் அந்த எண்ணத்தை எதிர்க்க வேண்டி இருந்தது.

"பிரத்தியேக சீருடைகளுக்கான கோரிக்கைக்கான காரணம், வெளிஆக்கள், இல்லச் சிறுவர்கள் குற்றங்களுக்கும் முரட்டுச்செயல்களுக்கும் இடங்கொடுப்பார்கள் எனப் பயந்ததே  - இது, இத் துர்ப்பாக்கியமிகு சிறுவர்களுக்கு எதிராய் இச் சமூகம் எத்தகைய பாரபட்சமான சிந்தனையைக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது" என்கிறார் யசிகரன்.

இந்த ஐந்து இல்லங்களது பெயர்களும் இந்து கலாச்சாரத்துடன் தொடர்புடையதாக இருக்கின்ற போதும், சகல மத நம்பிக்கையை உடைய சிறுவர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இல்லங்களுள் யாரயும் மதமாற்றம் செய்யும் எந்த முயற்சியும் கிடையாது ஆதலால் சிறுவர்கள் அனைவரும் தாம் வளர்க்கப்பட்ட மதநம்பிக்கைகளைத் தொடரலாம். "மதங்களின் வழி வந்த சடங்குகளை வலியுறுத்துவதைவிட, படிப்படியாக சிறுவர்களிடம் சிறந்த நெறிகளை வளர்க்கும் அறக் கல்வியைப் புகுத்துவதே அத்தியாவசியமானது" என்றார் யசிகரன்.

எனினும், சிறுவர்களுக்கு வாசிக்க இருக்கிற நூல்கள் பெரும்பாலும் மதரீதியானவை என்பது ஒரு குறைபாடு ஆகும். சமூகத்தைப் பற்றி, அரசியலைப் பற்றி, சுற்றுச்சூழல் பற்றி, மதசார்பற்ற முறையினில் எழுதப்பட்ட புத்தகங்களை படிக்கிற வாய்ப்பும் இப் பிள்ளைகளுக்கு இருக்க வேண்டுமென யசிகரன் நம்புகிறார். ஆனால் ஒரு நூலகத்தை வழங்கவும் பணம் தேவை.

இல்லங்கள் தொண்டர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றன. அனேகமானவர்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள சமூகப் பொறுப்புடைய மனிதர்கள். இருப்பினும், பிள்ளைகளை பார்ப்பதில் தேர்ந்த அறிவையுடையவர்கள் அல்லர். பலரும் இல்லங்களின் நிர்வாகத் தேவைகளைக் கவனிப்பதற்கான நேரமுடையவர்களாகவே உள்ளார்கள், அதுக்கு மேல் இல்லை. உணவு பெரியவர்களால் தயாரிக்கப்படுகிறபோதும், பிற சகல வேலைகளும் இல்லப் பிள்ளைகளாலேயே செய்யப்படுகின்றன. மண்பிரண்ட இல்லத்தின் ஆகச் சிறிய வயதுப் பிள்ளைகளின் உடுப்புக்களை பெரிய வயதுச் சிறுவர்களே தோய்க்கிறார்கள்.

உதவி அனுபவம் வாய்ந்த அலுவலகர்களைப் பணியமர்த்தவே விரும்புகிறது: வீட்டுப்பணிகளைச் செய்பவர்கள், அத்துடன், இல்லக் குழந்தைகளின் கல்வித் தேவைகள், சமூக - உளவியற் தேவைகள், மற்றும் மருத்துவத் தேவைகளை கவனிக்கத் தேவையான பயிற்சிகளைத் தரவல்ல நிபுணர்கள். மேலும், "இக் குழந்தைகளுக்கு குடும்பங்கள் கிடையாது. அதை பதிலீடு செய்ய நாங்கள் எங்களால் முடிந்தளவு முயல வேண்டும்" என்றார் யசிகரன்.

தமக்கு தரப்படுகிற எதையும் உண்ணுவதை இச் சிறுவர்களிடையே ஒரு குணமாக யசிகரன் காண்கிறார். அக் குணத்திற்கான காரணமாக, தாங்கள் பிடிக்காத உணவு குறித்து முறையிட்டால் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற பயத்தையே, யசிகரன் உணர்கிறார். இதனால் நிர்வாகிகளுக்கும் பிள்ளைகளுக்குமிடையில் இன்னும் இனியமுறையிலான அணுகுமுறையை ஏற்படுத்த விரும்புகிறார். அந்த வகையில், அவர்கள் ஒழுங்குமுறைக்கு கண்டிக்கபடுகிற அதேவேளை, அச்சம் அவர்களது வாழ்வை ஆள்வதை அவர்கள் தடுக்க முடியும்.

பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு அடுத்ததாக, இந்தக் குழந்தைகள் நம்பிக்கையுடன் நகருவதுக்கு ஏதுவான எதிர்காலம் குறித்த கேள்வி எழுகிறது. யசிகரன் சொல்கிறார், இல்லத்திலுள்ள சில பிள்ளைகள் இப்போது 'சிறுவர்கள்' இல்லை, அவர்கள் 20 வயது வரையான வளரிளம் பருவத்தினர்கள் ஆவர். சில சிறுவர்கள் பல்கலைக்கழகத்துக்கு செல்லக்கூடிய தகைமை உடையவர்களாக உள்ளார்கள். எனினும் ஏனைய பிள்ளைகளுக்கு எதிர்காலத்துக்கான தகுதிகளை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அது எவ்வாறு என்பதே எம்முன் உள்ள கேள்வியாகும்.

ui309தாய்தகப்பனற்ற ஆதரவற்ற வறிய பிள்ளைகளுக்கு துணைவர்களை கண்டடைவதில் இலங்கை சமூகத்தின் தடைகள் இடையூறாக இருப்பினும், பெண்களுக்கு எதிர்காலமென மரபான திருமணம் என்கிற 'தேர்வொன்று' உள்ளது. சுயமாகத் தம்மைத் தாங்க விரும்புகிறவர்களுக்கான தயார் பதிலாக - பெண்களுக்கு தையற் பயிற்சியும், ஆண்களுக்கு தச்சுவேலைப் பயிற்சியும் இருக்கிறது.

"தச்சுவேலையும் தையலுமே வருவாய்க்கானதான திட்டமாக அனேகமான இடங்களில் முன்வைக்கப்பட்டிருக்கிறபோதும், வாழ்வதற்கான ஊதியத்தை அவை தருமா என்பது கேள்விக்குரியது" என்கிறார் யசிகரன். தச்சர்களாலும் தையற்காரர்களாலும் நிறைந்த ஒரு கிராமம் இவர்களுக்கு வலுவான வாழ்நிலையை தருவதுக்கு (எதிர்காலத்துக்கு) உதவ முடியாது.

இச்சிறுவர்கள் பெரியவர்களாகிறபோது எதிர்கொள்ளப் போகிற, வேலைவாய்ப்பின்மை, சமூகத்தின் பார்வையில் அந்தஸ்த்தில் தாழ்ந்திருப்பதால் அவர்களால் ஒதுக்கி வைக்கப்பதல் மற்றும் அவர்கள் கடந்துவந்த யுத்த அகோரங்களால் அவர்களது வளரிளம் பருவத்தில் அவர்கள் எதிர்கொள்ளக் கூடிய உளவியல் தழும்புகள் என்பன கவலைக்குரியன ஆகும்.

இத்தகைய விசயங்கள் அழிவுக்கே இட்டுச் செல்லும். இந் நிலையை மாற்ற, ஒரு பயன்மிகு தீர்வு தரப்படாத பட்சத்தில், எதிர்காலத்தில், இது ஒரு சமூக பிரச்சினையாக மாறும்" எச்சரிக்கிறார் யசிகரன்.

உதவ விரும்புகிறவர்கள், மற்றம் உதவியைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் எமது இணையத்தளத்தைப் பார்வையிடலாம்: uthawi.net

 

- யசிகரன்
(உதவி.நெற்/இலங்கை)

மூலம்: Northeastern Monthly - April, 2005

யசிகரனும் அவரது வாழ்க்கைத்துணையும் 06.03.2008 இல் கைது செய்யப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, 26.10.2009இல் விடுதலை செய்ய்ப்பட்டனர்.

Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

2509.jpg

பேசும் படம்...

1209.jpg