|
இல்லங்கள் - சில குறிப்புகள் (3) |
|
|
இம்மாதம் 8ந் திகதி மாணிக்கவாசகர், யோகர் சுவாமிகள், கதிரொளி, சக்தி, விபுலானந்தா இல்லங்களுக்கு சென்றிருந்தேன்.
பொதுவாக எல்லா இல்லங்களிலும் பிள்ளைகள் குறைவாகவே காணப்பட்டார்கள். பாடசாலை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்குச் சென்றவர்கள் இன்னமும் திரும்பாமையே இதற்கு காரணம்.
மாணிக்கவாசகர், விபுலானந்தா இல்லங்களத் தவிர்ந்த ஏனைய இல்லங்களில் பொறுப்பாக பதில் சொல்லக்கூடியவர்கள் (முடிவெடுக்க கூடியவர்கள்) இல்லை என்பதும் முக்கியமானதொன்றாகும். இதனால் குறிப்பிட்ட ஒரு வேலையை முடிப்பதென்றால் இரண்டு மூன்று தடைவ சம்பந்தப்பட்ட இடத்துக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.
இந்த நிலமையை யோகர் சுவாமிகள் இல்லத்தில் என்னால் அனுபவிக்க முடிந்தது. இவர்களுடைய நடவடிக்கையைப் பொறுத்தவரையில் வலிந்து போய் நாங்கள் உதவி செய்வதைப் போன்ற ஒரு மனநிலயே எனக்கு தோன்றுகின்றது.
கடந்த மாத உணவுக்கான காசுக்கான பற்றுச்சீட்டு 5-12-2004 க்கு முதல் தேவை என்பதனால், 2, 3 ந் திகதிகளில் விபுலானந்தா இல்லத்த சேர்ந்த பிரபா என்பவர் யோகர் சுவாமி இல்லத்துக்கு சென்றும் பொறுப்பானவர்கள சந்திக்கமுடியாததால் எமக்கு சிக்கலாக இருந்தது. இருந்தும் அந்தப் பணத்தை எம்மிடமிருந்து பெறுவதற்கு எம்முடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கங்கள் கொடுக்கப்பட்டும் இன்னமும் அவர்கள் தொடர்பு கொள்ளவில்லை என்பது எமக்கும் அவர்களுக்கும் உள்ள உறவிலுள்ள இடைவெளியையே காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் இம்மாதம் 8,9 ந் திகதிகளில் இந் நிலமைகள் தொடர்பாக கதைப்பதற்காகச் சென்றிருந்தேன். இருந்தும் அவர்களை சந்திக்கமுடியவில்லை என்பதால் என்னுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்து என்னுடன் தொடர்பு கொள்ளும் படி கேட்டிருந்தேன். இக்கடிதம் எழுதும் வரை என்னுடன் அவர்கள் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
கதிரொளி இல்லத்திற்கு சென்றிருந்த போது அங்கும் பொறுப்பானவர்கள் இருக்கவில்லை. உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்த பிள்ளைகள் எல்லோரும் வந்திருக்கவில்லை. இருந்த பிள்ளைகளோடு கதைக்கக்கூடியதாக இருந்தது. பிள்ளைகள் தங்களுடைய அடிப்படைத் தேவைகள் பாடசாலை கொப்பிகள் தொடக்கம் படுக்கும் பாய் தலையணை வரை தேவையென குறிப்பிடுகின்றார்கள். இது பொதுவாக மாணிக்கவாசகர், சக்தி, விபுலானந்தா இல்லங்களிலும் குறிப்பிடுகின்றனர்.
இல்லங்கள் பற்றிய பல்வேறுபட்டவர்களுடைய எண்ணப்பாடுகளை தொகுத்து தருகின்றேன்.
ஆதரவற்ற அல்லது வசதிகுறைந்த பிள்ளைகளை ஒன்றாகக் கூட்டி பாதுகாப்பதுதான் இல்லங்கள் நடத்துவதென்று பலர் நம்பிக்கொண்டே இல்லங்களை நடத்துகின்றனர். எல்லாப் பிள்ளைகளும் ஒன்றாகக் கூடி நின்று விளையாடுகின்ற போது எங்களுக்கு வீட்டைவிட இங்குதான் சந்தோசம், நல்லது என்று கூறுவது சிறு பராயத்தில் எல்லாருடைய வழமையும். அதையே நாங்கள் தாரக மந்திரமாக வைத்துக் கொண்டு இல்லத்தில் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கின்றார்கள் என்று சொல்வது எம் போன்றவர்கள் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கு என்பதற்கு ஒரு சான்றாகும்.
அனாதகள் இல்லம் என்று பெயர் பலகையிடுவது, ஒவ்வொரு இல்லத்துக்குமான தனிப்பட்ட சீருடைகள், கட்டாயம் திருநீறு பூசவேணும் அல்லது ஜெபம் செய்ய வேண்டும் என்பது போன்ற பலதரப்பட்ட செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் குழந்தைகளை தான் வாழும் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுடைய மனதிலும் தான் அனாதை, வசதியற்றவன்/ள் என்ற எண்ணம் ஆழப்பதிந்துவிடும்.
சில இல்லங்களில் எட்டுவயது பையனுக்கு பன்னிரண்டு வயதுடைய பையன் போடும் சேட்டும் காற்சட்டையும் போடப்பட்டிருக்கும். நமது கிராமங்களிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள் ஆள்பாதி ஆடைபாதி என்று. ஆளுக்கேற்ற உடுப்பு போடுதலும் அவனு/ளுடைய அழகையும் தோற்றத்தையும் எடுத்துக்காட்டும். அவனு/ள்க்கு வீட்டில் உடுப்புப் போடும் வசதியிருந்தால் அல்லது அதனை வேண்டிக்கொடுக்க ஆளிருந்தால் இப்படி வேண்டிக் கொடுப்பார்களா? நமது பிள்ளைகளுக்கு அப்படியான உடுப்புக்களை வேண்டிக் கொடுப்போமா? இல்லத்திலிருப்பவர்கள்தானே எது போட்டால்தான் என்ன என்ற மனநிலை ஒரு போதும் எமக்கு வந்து விடக்கூடாது? அப்படி வந்து விட்டதா என்று நாம் ஒவ்வருதரும் பார்க்க வேண்டியுள்ளது.
கட்டுப்பாடு என்பது அவசியம்தான். கட்டுப்பாடுகள் இருக்கவேண்டும் அதற்குள் சுதந்திரமும் இருக்கவேண்டும். அந்தக் கட்டுப்பாடுகளே பிள்ளைகளை மனதளவில் ஒடுக்கி கேள்வி கேட்க முடியாத சமூகத்தை உருவாக்கிவிடக்கூடாது. கட்டுப்பாடு எனற கோட்டை போட்டுவிட்டு பிள்ளைகளை மற்றவர்களுடன் பேசவோ பழகவோ முடியாதபடியும் இல்லம்தான் தங்களுடைய உலகம் என்ற நிலமையையும் உருவாக்கிவிடக்கூடாது என்பதுதான் எம்முடைய விருப்பமும் கூட.
- யசிகரன் (இலங்கை) 12.01.2005
Trackback(0)
 |