|
பிள்ளைகளுடன்... - 04.03.2005 |
|
|
மட்டக்களப்பு பழுகாமம் விபுலானந்தர் சிறுவர் இல்லத்தில் தொலைக்காட்சி விபரணப் படப்பிடிப்பிற்கான கடந்த வாரம் சென்றிருந்தேன்.
சிறுவர் இல்லம் அமைந்துள்ள இடம் மிகவும் அமைதியான, ரம்மியமான சூழலில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
சிறுவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், சாந்தமாகவும், இருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அவர்கள் தாங்கள் வாழும் சூழலை தமக்கே உரிய வகையில் அழகாகவும் சுத்தமாகவும் பேணியதை பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய கடமைகளை (சுத்தம் செய்தல், தோட்டம் அமைத்தல், சமையல் வேலை) செவ்வென செய்து கொள்வார்கள்.
அத்துடன் நேரம் தவறாமை, படிப்பு போன்றவற்றை முறையாக பின்பற்றினர். இதை அவதானிக்கும் போது வீடுகளில் தாய் தந்தையரின் அரவணைப்பில் வாழும் பிள்ளைகள் இப்படியான முறைகளை பின்பற்றுவார்கள் என்பது சந்தேகம் தான்.
மற்றும் இதை நடத்தும் நிர்வகத்தினரின் பங்கு இதற்கு மிக முக்கியமாக இருந்ததை பார்க்க கூடியதாக இருத்தது. அவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாடு, சிறுவர்களை பராமரிக்கும் முறைகள் மிகவும் திறமையாக இருந்தது.
அவர்கள் சிறுவர்களுடன் பழகும் முறை சிறுவர்களின் குறைகளை கேட்டு அதற்குரிய முயற்சிகளை எடுத்த விதம் நிர்வாகத்தினரின் திறமைக்கு ஒரு சபாஷ்.
சில குறைகளையும் காணக்கூடியதாக இருந்தது. அதாவது சில சிறுவர்கள் முகத்தில் ஒருவித சோகம் இழையோடிருந்தததை காணக்கூடியதாக இருந்தது. இதற்கு காரணம் என்னவென்பதை என்னால் சரியாக புரியமுடியவில்லை. இதை நிர்வாகத்தினர் இனம் கண்டு அவர்களுக்குரிய பிரச்சினைகள் என்ன என்பதை அறிந்து அதை நிவர்த்தி செய்தால், சிறுவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நினைக்கின்றேன். சிறுவர்கள் மத்தியில் வேற்றுமை மனப்பான்மைக்கு இடம் கொடுக்ககூடாது.
மற்றும் இடவசதி சரியாக இருந்தது. ஆனால் அவர்கள் படிக்கும் இடம் இரவில் வெளிச்சம் காணாது. இதை நான் இரவில் ஒளிப்பதிவு செய்யத போது உணர்ந்தேன். சிறுவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு படித்ததை பார்த்த போது மிகவும் கவலையாக இருந்தது. இவர்கள் படித்த இடத்தில் இருந்த வெளிச்சம் இவர்கள் கண்களை பாதிக்கும் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமில்லை. வெளிச்சம் போதாமையால் அவர்கள் புத்தகங்களை கண்களுக்கு கிட்டவைத்து படித்ததைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.
தண்ணீர் வசதி இருந்தும் குளிப்பது மலசலகூடங்களுக்கு பாவிப்பது தவிர்ந்து குடிப்பதற்கு தனியார் வீடுகளில் இருந்து தண்ணீரை பயன்படுத்துகின்றனர். இவர்கள் ஓரு கிணற்றை சுற்றி நின்று குளிப்பதை பார்த்தேன். இக் கிணறு சில சமயம் பாதுகாப்பாக இல்லாமல் இருப்பதையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
மலசலகூடப் பகுதி அமைந்துள்ள இடம் சரியாக இருந்தது. ஆனால் சிறுநீர் கழிக்கும் இடம் சுகாதாரமாக இல்லை. திறந்தவெளியில் சுற்றி தகரம் அடைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் சிறுநீர் வெளியில் கழிப்பதனால் சுகாதாரத்திற்கு கேடு. எனவே அவர்களுக்கு சிறுநீர் கழிப்பதற்கு சுகாதார முறையில் ஓர் இடத்தை அமைத்துக் கொடுக்கலாம். அத்துடன் இரவில் இப்பகுதியில் வெளிச்ச வசதி இல்லாமலே இருந்தது. இங்கு சின்னபிள்ளைகளும் சென்றுவருவதனால் இல்ல நிருவாகம் கவனமெடுக்க வேண்டும். எனவே இக்குறைகளை நிவர்த்தி செய்தால் நன்றாக இருக்கும்.
ஒரு நாள் மதியம் சிறுவர்களுடன் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் ஏனோ ஓர் குறை தெரிகிறது. இச் சாப்பாட்டு விடயத்தில் கொஞ்சம் கவனம் எடுத்தால் இக்குறையை தீர்க்கலாம் என நினைக்கிறேன். (என்னவென்று குறிப்பிடமுடியாதுள்ளது)
எல்லாவற்றுக்கும் மேலாக நிர்வாகத்தினர் இடையிடையே சிறுவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கினால் சிறுவர்கள் தமது எதிர்காலததில் நல்ல ஓர் வாழ்க்கைக்கு அத்திவாரம் இடமுடியும். நிர்வாகத்தினர் இருக்கும் வளங்களை பயன்படுத்தி இச் சிறுவர்களை மிகவும் திறமையாக நடத்துவதை பார்த்த போது அதிசயமாக இருந்தது. தாரளமான வளம் இருந்தால் இதைவிட இப் பிள்ளைகளைக் கொண்டு வழிநடத்துவார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
எனவே வளங்கள் யாவும் தாரளமாக கிடைப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முயற்சி செய்யவேண்டும்.
விமலன் (இலங்கை) 04.03.2005
Trackback(0)
 |