சிறுவர் இல்லங்கள் 2003 - 2005 அச்சிடுக மின்னஞ்சல்
ஆவணி மாதம் 21-22 ம் திகதி மீண்டும் மட்டக்களப்பில் உள்ள ஐந்து சிறுவர் இல்லங்களுக்குச் சென்றோம். இம்முறை என்னுடம் உதவி நண்பர்கள் மட்டுமன்றி கனடாவைச் சேர்ந்த நண்பரும் அவரது சகோதரி, சகோதரியின் 5 பிள்ளைகளும் (18 வயது முதல் 8 வரையானவர்கள்) வந்திருந்தனர். மேலும் யாழ்ப்பணத்தில் வசிக்கும் மூன்று வயதுமுதிர்ந்த பெண்களும் எம்முடன் இணைந்து கொண்டனர். இவர்களில் எண்பது வயதுடைய பாட்டி நடப்பதற்குச் சிரமப்பட்டபோதும் „நானும் பிள்ளைகளைப் பார்க்க வருவேன்' என்று உறுதியாக நின்று சலிக்காமல் இரு நாட்களும் ஐந்து இல்லங்களுக்கும் கூடவே வந்தார்.

இரண்டாவது நாளன்று இரு இல்லப் பிள்ளைகளைப் பார்க்க ஜேர்மன் பெண் ஒருவரும் (தற்சமயம் மட்டக்களப்பில் வசிப்பவர்) வந்திருந்தார்.

முதல் நாள் ஒரு பொழுதுபடும் நேரம் விபுலானந்த இல்லத்திற்கும் மறுநாள் காலையிலிருந்து மாலைவரை சக்தி, மாணிக்கவாசகர்,யோகசுவாமி, கதிரொளி இல்லங்களுக்கும் சென்றோம்.


உறவும் மகிழ்வும் :
தம்மைப் பார்க்கவரும் விருந்தினர்களைக் கண்டதும் பிள்ளைகள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்பது எமக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்தானே. இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர்களை முதன்முதலில் பார்த்ததால் அவர்களில் பலர் தெரிந்தவர்களாக இருந்தனர். குறிப்பாக சக்தி மற்றும் யோகசுவாமி இல்லத்துப் பெண்பிள்ளைகளில் சிலர் எனது பெயரை ஞாபகம் வைத்திருந்தது மட்டுமின்றி மீண்டும் சந்தித்த சந்தோசத்தில் திளைத்தார்கள். பொதுவாகவே ஏனைய இல்லத்து இளைஞர்களைவிடவும் பெண்பிள்ளைகள் எம்முடன் உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் திறந்த மனத்துடனும் கூச்சசுபாவம் குறைந்தவர்களாகவும் இருந்தார்கள் என்று சொல்லலாம். சுனாமி அனர்த்தத்தின் பின் உறவுகளை இழந்து இங்கு சேர்க்கப்பட்ட பல புதிய முகங்களும் இருந்தன.

தொடர்ந்தும் பிள்ளைகளைப் பார்க்க யாராவது செல்வதால் ஏற்பட்ட மாற்றமா அல்லது எம்மில் பல வயதுடையவர்கள் (எட்டிலிருந்து எண்பதுவரை) இருந்ததுதான் காரணமா என்பது சரியாகத் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் அனேகமாக சிறுவர்கள், வயது வந்தவர்கள், வயதுபோனவர்கள் என்று பல வயதுடையவர்கள் இருப்பது வழக்கம்தானே. அந்த சாதாரண நிலைமை அவர்கள் பழகும் தன்மையை இலகுபடுத்தியிருக்கலாம்.

இங்கு குறிப்பாக அவதானிக்கமுடிந்த ஒரு விடயம் எம்மில் இளம்வயதினர் அதாவது பிள்ளைகளின் வயதையொட்டியவர்கள் வந்திருந்ததால் சிலர் கூச்சப்பட்ட அதேவேளை சிலர், அவர்களுடனேயே நிறைய நேரத்தினை செலவழித்தனர். பிள்ளைகள் நடனம் பாடல்கள் கவிதை வாசித்தல் போன்றவற்றை செய்து காட்டினர். குறிப்பாக யோகசுவாமிப் பெண்பிள்ளைகள் இரண்டுவருடங்களக்கு முன்னர் பார்த்ததிலும் மேலும் ஆர்முடன் திறமைகளுடனும் இருக்கின்றனர்.

இந்தப் பிள்ளைகளை இவர்கள் வயதுடைய வெளியில் வாழும் பிள்ளைகளுடன் பழகவேண்டும். நட்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். பொறுப்பாளர்கள் கண்காணிப்பற்று சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் பகிர்ந்துகொள்ள வசதிசெய்து கொடுக்கவேண்டும். ஒன்றாக விளையாடுதல், வேறு சிறு வேலைகளை கூட்டாகச் செய்தல், கலைநிகழ்வுகளையும் இணைந்து செய்வதன் மூலம் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கலைத்திறனுக்குத்தான் இவர்களுக்குக் குறைவே இல்லையே!

அதேவேளை பல வயதுடையவர்களுடன் பழகவிடவேண்டும். ஒரு குடும்பத்தில் சிறுவர்கள் முதற்கொண்டு வயதுமுதிர்ந்தவர்கள்வரை இருப்பார்கள். அவர்கள் குடும்பத்தில் இல்லாவிடினும் குறைந்தது அயலிலாவது இருப்பது வழமையானது. இவர்கள் பெரும்பாலும் பாடசாலைகளிலும் மிகுதிநேரங்களை தமது வயதையொத்த பெண்கள் பெண்களுடனும் ஆண்கள் ஆண்களுடனுமே கழித்துவருகின்றர். இந்த வாழ்க்கையானது ஒரு அசாதாரண நிலையாகும். இது மாற்றப்படவேண்டியது அவசியமாகும்.

முக்கியமான விடயமாக இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் நட்பை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் இவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டும். இறுக்கமான உறவுகளை ஏற்படுத்த முயலவேண்டாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் இதனைச் சாத்தியப்படுத்துவது முடியாதது. அங்கு இருப்பவர்களாற்தான் இதுசாத்தியமாகும். பெண்பிள்ளைகளின் இலலங்களுக்கும் பிரதான பொறுப்பாளர்கள் ஆண்களாகவே இருப்பதனால் பெண் பொறுப்பாளர்களும் நியமிக்கபப்படல் வேண்டும். இது சாத்தியமற்றவேளை குறைந்தபட்சம் அவர்களது நிலைமையைக் கவனித்துவருதல் நன்று.


இன்றும் தீரவில்லையே துன்பம்!
சென்ற முறை பிள்ளைகளின் பாடல்களில் முகங்களில் கதைகளில் தெரிந்தது யுத்தத்தின் கோரம். உறவுகளின் பிரிவுத் துன்பம். இந்த நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. பெரும் யுத்தம் சற்று ஓய்ந்து இருக்கிறது என்று எண்ணிச் சிறிது ஆறுதலடைந்திருந்த பிள்ளைகளை மிகவும் பாதித்தது கொடிய சுனாமி. சுனாமியால் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் மட்டக்களப்பும் ஒன்று என்பது நாம் அறிந்ததே. பிள்ளைகளில் சிலர் நேரடியாகவும் சிலர் மறைமுகமாகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நண்பர்களை இழந்தவர்கள், உறவுகளையும் நட்புக்களையும் பறிகொடுத்த நண்பர்கள், அயலவர்கள், தெரிந்தவர்கள் என்று சுனாமி பற்றியே அவர்கள் உணர்கின்றனர். அறிகின்றனர். மனதில் உள்ள துன்பத்தினை பாடல்களாகப் பாடிக்காண்பித்தனர். தாம் இயற்றிய கவிதைகளை உணர்வுபூர்வமாகச் சோகம் நிறைந்த முகங்களுடனும் மனங்களுடனும் சொன்னார்கள். அவை கேட்டு எம்மில் பலர் கண்கலங்கினர்.

ஜேர்மனியைப் பொறுத்தவரையில் மன அதிர்விற்கு (என்ன காரணமாக இருந்தபோதும்) உள்ளாகிய பிள்ளையை உளவியற் சிகிச்சைக்காக அனுப்புவர். மருத்துவச் செலவுகூட பிரத்தியேகமாக இல்லை. பல தடவைகள் பலவிதமாக மன அதிர்வுகளை சந்தித்தும் எந்த ஒரு உளவியற் சிகிச்சையும் பெறாமல் இருப்பவர்கள்தான் இந்தப் பிள்ளைகள். குறைந்தபட்சம் எந்தளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என்றுகூட சோதித்துப் பார்க்கப்படாத நிலைதான் தொடர்கிறது. இதுவரை உதவிக்குக் கிடைத்துவந்த நிதி பிள்ளைகளுக்குச் சாப்பாட்டிற்குத் தேவைப்படுகின்ற பணத்தில் ஐந்தில் ஒரு பகுதியும் மேலும் சில அத்தியாவசியமான விடயங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதற்குமேல் உளவியல் நிபுணர்களை ஒழுங்குசெய்வது சிகிச்சை அளிப்பது என்பது இப்போது நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு விடயமாகவே உள்ளது. உளவியலில் எற்படும் தாக்கம் உடலிலும் எற்படுவதற்கு அதிகம் சாத்தியம் உள்ளது மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் இந்தப் பிள்ளைகளுக்கு எப்போது சாத்தியப்படுத்துவது?

பூப்பனித நீராட்டு விழாவிற்காக வெளிநாடுகளிலிருந்து இலங்கை சென்று பல இலட்சக்கணக்காக செலவிட்டு கொண்டாடிய பலரைச் சந்திக்கமுடிந்தது. இதில் ஒரு பகுதியையாவது இப்படியான பிள்ளைகளுக்காக செலவழிக்கவேண்டும் என்று ஏன் அவர்களுக்குத் தோன்றவில்லை?

இம்முறையும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று எமது கண்முன்னே நிகழ்ந்தது:

சக்தி இல்லத்தை விட்டு நாம் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தோம். அவ்வேளை அங்கு வசிக்கும் யுவதியும் ஒரு வயது முதிர்ந்த பெண்ணும் வந்தனர். வயதுமுதிர்ந்த பெண் மீண்டும் இல்லத்தைவிட்டு வெளியே செல்லமுயலும்போது அவருக்குப் பின்னால் அந்த யுவதி அழுதவண்ணம் பின்தொடர்வதும் அதைப் பார்த்த முதிர்ந்தபெண் அவரைக் கட்டாயமாக மீண்டும் இல்லத்துக்கு அழைத்துச் செல்வதுமான காட்சி.

நாம் விசாரித்தபோது லீவில் உறவினரிடம் சென்றிருந்த பிள்ளையை மீண்டும் இல்லத்தில் விட்டுவிட்டுச் செல்ல முனைய, தான் கூடவே மீண்டும் வீட்டிற்கு வருவதாக அடம்பிடிப்பதாக அந்த வயதுவந்த பெண் எமக்குக் கூறினார். தமது வீட்டில் அவளைத் தொடர்ந்து வைத்திருக்கும் நிலைமை இல்லையென்றும் தமது வீட்டில் நாள் முழுக்கத் தொலைக்காட்சி பார்த்து ருசி கண்டதனால்த்தான் அவள் மீண்டும் வீடு வர விரும்புகிறாள் என்றும் சொன்னார். நாம் அந்தப் யுவதியின் அழுகையை நிறுத்தி ஆறுதல் கூறமுயன்றோம். வயது முதிர்ந்தவர் எதிர்காலத்தில் விடுமுறைக்கு அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போவதில்லை என்று கூறிப் புறப்பட்டார். எமக்கு முன்னிலையில் அழுகையை நிறுத்திக்கொண்டு இல்லத்தினுள் சென்றாள் யுவதி. ஒரு வீட்டில் சாதரண வாழ்க்கை வாழும் ஏக்கத்திலிருந்து வெடித்தது அவளின் அழுகை! வெளியில் அழுகையை நிறுத்திக்கொண்டாள். அவள் உள்ளம் அழுததனை யார் அறிவார்? இவர்கள் விருப்பங்களும் ஆதரவற்றனவா?

ரூபாய்கள் அதிகம் சத்து உணவிற்கு :
எவ்வளவு ருசி ருசியான, வகை வகையான உணவுகளை நாளாந்தம் உண்கின்றோம். மிஞ்சியது என்று வீசுகின்றோம். நாம் சென்ற தருணம் இரண்டு இல்லங்களில் உணவு உண்ணும் நேரமாக இருந்தது. என்ன உணவினை உண்கிறார்கள் பிள்ளைகள் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் தவிர்க்க முடியாததே. விசாரித்தோம். அல்லது தட்டுக்களில் பார்த்தோம். கதிரொளி இல்லப் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். அன்று சோறும் கறியுடன் முட்டையும் சேர்த்து உண்டுகொண்டிருந்தனர். இது புதிய சேர்ப்புத்தான் என்று பொறுப்பாளர்கள் சொன்னர். இதுதான் இவர்கள் உண்ணும் விசேடமான உணவு. பிள்ளைகளின் வளர்ச்சிக்கு மேலும் ஓடி விளையாடுவதற்கும் நிறையப் புரதச் சத்துத் தேவைப்படுகின்றது. மீன் முட்டை சேர்த்து உண்பது அவசியமாகின்றது. பருப்பும் வேறு ஏதாவது மரக்கறியும் உண்டுவந்த இவர்கள் இப்போதுதான் சிறிது மீன் முட்டை எப்பவாவது சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதுவும் எல்லா இல்லங்களிலும் நிதி நிலைமைகாரணமாக இதனைச் சாத்தியப்படுத்த முடியவில்லை. சக்தி இல்லப் பிள்ளைகள் தாம் சமையல் செய்யும் பெண்ணின் உதவியுடன் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டாக வேண்டும் என்று மிகவும் விரும்பிக்கேட்டபடியால் ஒரு தட்டில் உணவை எடுத்து நாம் எல்லோரும் சாப்பிட்டுப்பார்த்தோம். மிகவும் ருசியாக இருந்தது. பருப்பு, கோவா, பீற்றூட். சத்துள்ள உணவுதான். ஆனால் தொடரந்தும் இதேவகையான சாப்பாடு என்ற கூறினார்கள். இறைச்சி-மீன் ருசித்துப் பார்க்கவேண்டும் என்று இவர்களுக்குமட்டும் ஆசையிருக்காதா?

பொதுவான சில அவதானிப்புக்கள் :
பிள்ளைகளின் வாழும் வீடு, இல்லக் கட்டிடங்களில் சிறிது முன்னெற்றம் தென்படுவதனை அவதானித்தேன். உதாரணமாக விபுலானந்த இல்லத்துப் பிள்ளைகள் 2003இல் வாடகை வீட்டில் இருந்தனர். இப்போது இடவசதி கூடிய சொந்த வீட்டில் வாழ்கின்றனர். இந்த நிலைமை மாயமாக வந்ததல்ல. மாறாக பள்ளக்காணியை பொறுப்பாளர்களும் பிள்ளைகளும் மிகுந்த உழைப்புடன் மேம்படுத்தி இங்கு குடியமர்ந்துள்ளர். இதனைப் பார்த்தபோது சந்சோதமாக இருந்தது. பள்ளக் காணி பல இலட்சம் செலவழிக்கப்பட்டு உயர்த்தப்பட்டு உள்ளது. ஆகவே மழைவெள்ளத்தில் சிரமப்படாமல் இருக்கமுடியும். ஆயினும் அவர்களுக்கென்று கொடுக்கப்பட்ட பள்ளம் உயர்த்தப்படாத பாதிக் காணி இன்னும் சகதியுடன் இருக்கிறது. அந்த எருமை மாடுகளும் சகதிக்குள் நிற்கின்றன. மேலும் நிதியுதவி கிடைத்தால் அவற்றை உயர்த்தி விளையாட்டு மைதானங்களையும் மேலும் பிள்ளைகளுக்கு உபயோகமாக கட்டிடங்களையும், வசதிகளையும் செய்து கொடுக்கமுடியும் என்று பொறுப்பாளர்கள் சொன்னார்கள்.

யோகசுவாமி இல்லத்தில் அரைகுறையாகக் கட்டப்பட்டிருந்த சமையலறை கட்டி முடிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் இவர்களது அடிப்படைத் தேவைக்காக பொருட்களும் விடயங்களும் இன்னுமும் நிறைவு செய்யப்படவில்லைத்தானே. போதிய உணவு இல்லை. உடுப்பு, புத்தகங்கள் போன்ற நாளாந்த தேவைப் பொருட்கள் வைக்கத் தளபாடங்கள் இல்லை. போதிய வாழ்விடங்கள் (கட்டிடங்கள்) இல்லை. இவற்றுடன் பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கேற்ற அளவிலான புதிய உடுப்புகள், பாடசாலைக்கான பாதணிகள் வாங்கப் பணம் இல்லை. (ஒரு சில உடுப்புகளே வைத்திருப்பதால் விரைவில் பழுதடைந்துவிடுகின்றது.) இந்த நிலைமைகளை நேரடியாவே பார்க்கவும் அவர்களுடனான உரையாடலிலிருந்து புரிந்துகொள்ளவும் முடிந்தது.

இருமுறையும் பொழுது மங்கிய நேரத்திலேயே யோகசுவாமிகள் இல்லத்திற்குச் சென்றதாலா அல்லது அவர்கள் இல்லம் கட்டப்பட்டுள்ள அமைப்புக் காரணமாகவா தெரியவில்லை ஒரு இருண்ட இட்டுமுட்டான இருப்பிடமாக இருந்தது. அவர்கள் பகலிலும் வெளியில் (வளவில்) விளையாடுகிறார்களா அல்லது வேறு செயற்பாடுகளைச் செய்கிறார்களா என்பது ஐயமாக இருந்தது. பெண்பிள்ளைகள் என்பதால் ஏதோ கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களாக இருப்பதான உணர்வு தெரிந்தது. அங்குள்ள பொறுப்பாளரும் பிள்ளைகளின் மாற்றங்களில் அவ்வளவு அக்கறை அற்றவராக திறந்த மனதுடன் எம்முடன் பேசாதவராகக் காணப்பட்டார். (இது என்னுடைய தனிப்பட்ட அபிப்பிரயமாகும். இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை)

கட்டிட நிலைமையைப் பொறுத்தவரை மாணிக்கவாசக இல்லமும் இதே நிலைமைதான்.

மாறாக விபுலாந்த இல்லத்துப் பொறுப்பாளர்கள் முன்னர் போலவே திறந்த மனத்துடன் பல விடயங்களை நீண்ட நேரமாக விவாதித்தார்கள். பகிர்ந்துகொண்டனர். பல புதிய பொறுப்பாளர்கள் இணைந்திருப்பதனையும் இவர்களுக்கென்று தனியே அலுவலகமும் உருவாக்கியிருப்பதனையும் பாரத்தபோது அவர்களது நிர்வாகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது எனலாம். கதிரொளி இல்லத்திலும் நாம் சென்றிருந்த சமயம் பொறுப்பாளர்கள் - வேறு செயற்பாட்டாளருக்கிடையில் தனியான ஒரு அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இவர்கள் வதியும் கட்டிட விடயத்திலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பொறுப்பாளர்கள் சிலரின் உரையாடலிலிருந்து தெரியவந்தது அவர்கள் சில இக்கட்டான நிலைமையில் இருக்கின்றனர் என்பதுதான். உதாரணமாக உதவி தவிர்ந்த வேறு சில நிறுவனங்களும், வெளிநாட்டில் உள்ள ஆலயங்களும் சில சிறு உதவிகளை வளங்கிவிட்டு தாமே இல்லங்களைப் பொறுப்பாக நடத்துவதாக பலகை அடித்து கொழுவவேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். விபுலானந்த இல்லத்தில் அப்படியொரு பலகை மாட்டப்பட்டுள்ளது. இதுவரைக்கும் அங்குள்ள 22 பிள்ளைகளுக்கு படிப்புச்செலவு ஏற்றதுதான் இலண்டன் ஆலயம் ஒன்று. அவர்களிடம் உதவி பெற்றபடியால் மறுக்கமுடியாமல் அவர்கள் பெயரிடப்பட்ட பலகையைத் தாம் மாட்டிவிட்டதாகச் சொன்னார்கள்.

பெயரை எதிர்பார்க்காமற் செய்வதே உதவி.

உதவி இணையத்தினூடாக மூன்று வருடகாலங்களாக பல நன்மைகளைப் பெற்றிருக்கின்றனர் பிள்ளைகள். இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிதி ஒரு றேடியோ அல்லது தொலைக்காட்சி அறிவித்தலினூடாக தொகையாகக் கிடைத்ததல்ல. பலரின் பல நாள் உழைப்பு. அதில் தமிழர்கள் மட்டுமின்றி பல நாட்டு நபர்கள் இணைந்த கூட்டுச் செயற்பாடாகும். இவைபற்றி உதவி இணையத்தினைப் தொடர்ந்து பார்ப்பவர்களுக்குப் புரியும். உதவியின் பெயர் பொறித்த எந்த ஒரு பெயர்ப்பலகையும் இல்லங்களில் இல்லாவிட்டாலும், பிள்ளைகளும் பொறுப்பாளர்களும் உதவியின் செயற்பாடு பற்றி நன்கு அறிந்துள்ளர்.

- நிருபா
(ஜேர்மனி)
10/2005
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

0609.jpg

பேசும் படம்...

3009.jpg