சிறுதுளி பெரு வெள்ளம் அச்சிடுக மின்னஞ்சல்
உதவி- இணையத் தளத்தினூடாக ஆதரவளிக்கும் இல்லங்களிற்கு என்னாலான ஒரு சிறு பங்கினையும் செய்து வருகின்றேன். இந்த மாதம் இலங்கைக்குச் சென்றிருந்தபோது மட்டக்களப்பு சென்று இல்லங்களைப் பார்வையிடுவதும் எனது நோக்காக இருந்தது. இந்த வகையில் செப்டம்பர் மாதம் 7, 8, 9, 10 ம் திகதிகளில் விபுலானந்தா, மாணிக்கவாசகர், யோகசுவாமிகள், கதிரொளி சிறுவர் இல்லங்களையும் மேலும் அறவாளி இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கதிரொளி இல்லத்தின் பெண்கள் பிரிவான சக்தி இல்லத்துடன் இணைக்கப்பட்ட சக்தி பெண் பிள்ளைகளையும் நேரில் சென்று சந்தித்தேன்.

வயல்வெளிகள், ஏராளமான கறையான் புற்றுக்கள், கடல், நீர்ப்பரப்புக்கள், கொக்கட்டிச்சோலை மற்றும் காத்தான்குடி படுகொலைநினைவுகள், விடுதலைப்புலிகளின் வடிவாக எழுப்பப்பட்டுள்ள நினைவுச் சிலைகள், அழகாகவும் வசதியாகவும் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்கான இல்லங்கள், பெரிய பெரிய வீடுகள் தாண்டி கரடுமுரடான வீதிகளினூடே இந்த இல்லங்களுக்குச் சென்றோம். நாம் சென்றிருந்த சமயம் இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தமையினால் எல்லாப் பிள்ளைகளையும் சந்திக்கமுடியவில்லை.

பிள்ளைகளை நேரில் கண்டு சந்தித்தது ஒருவகையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதாவது ஒரு முறை அங்கு யாராவது அவர்களைப் பாரக்கச் செல்வார்களாம். இந்தவகையில் உதவி- நண்பர்களுடன் அங்கு சென்றது பிள்ளைகளையும் மகிழ்வித்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் கூச்ச மனோபாவத்தில் இருந்து பின் அந் நிலை மாறி தமது திறமைகளை பாடல்களைப் பாடியும், தாமே எழுதிய கவிதைகளை வாசித்துக் காட்டியும், கூத்து வசனங்களை சொல்லிக் காண்பித்தும், நடனங்கள் ஆடியும் வெளிக் காட்டினார்கள். கேட்டுக் கொண்டதற்கிணங்க உதவி- இணையத்தில் பிரசுரிப்பதற்காக தாம் மேலும் கவிதைகளும் கதைகளும் எழுதித்தருவதாக வாக்களித்தனர்.

இந்தச் சந்தோசம் முழுமையானதல்ல. பிள்ளைகள் வாழும் இடங்களைப் பார்வையிட்ட பின்னரும் அவர்களது கதைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னரும் இருந்த சிறிது சந்தோசமும் ஓடிமறைந்துவிடும்.

ஓரு நாள் சாப்பாட்டிற்கே மிகவும் கஸ்ரமான நிலையில் இருந்த இல்லங்களுக்கு உதவி-யின் ஆதரவு இந்த வருடத்திலிருந்து கிடைக்கின்றது. ஆனால் அவர்களது மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மத்தியில் உதவி-யிடமிருந்து கிடைக்கப்பெறும் உதவிப் பணம் மிக மிகக் குறைந்த தொகையே. அதைக் கொண்டு அவர்களால் சில வேலைகளையும் தேவைகளையும் கூட நிவர்த்தி செய்ய திண்டாடுகின்றனர்.

விபுலானந்தா சிறுவர் இல்லத்து வளவு மண்ணிட்டு நிரப்ப பணம் தேவையென்று உதவி- இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வளவினைப் பார்த்தேன். தற்சமயம் பிள்ளைகள் வாழும் இல்லம் வேறு ஒருவருக்குச் சொந்தமான வீடு என்பதுவும் அங்கிருந்து இவர்களை எழும்ப உத்தரவு வழங்கப்பட்ட நிலையும் நாம் உதவி-யினு}டாக அறிந்ததுதான். இதனால் மேடு பள்ளமான காணி ஒன்றிற்குள் வேறு நிறுவனத்தின் உதவியுடன் பிள்ளைகள் தங்குவற்கான ஒரு வீடு கட்டப்பட்டுவிட்டது. வழமையாக இலங்கையில் ஒரு நடுத்தரவர்க்கக் குடும்பமென்றால் ஐந்தாறு பேர்கள் தங்கக் கூடிய அளவான ஒரு வீடுதான் இது. இந்த வீட்டில் 48 பிள்ளைகளும் வசிப்பதற்கு ஆவலாக நாட்களை எண்ணியபடியுள்ளனர். ஓரு குடிசையோ கொட்டிலோ எமக்கென்று சொந்தமானதெனில் நிம்மதிதானே. யாரும் தமது வசதிக்கேற்றபடி விரட்டியடிக்கமாட்டார்கள். ஆனால் பள்ளக் காணியாயிருக்கும் இந்த வீட்டில் பள்ளம் நிரப்பப்படும் வரையில் குடியேற முடியாது. இந்தக் காணியில் சேறும் சகதியுமாக இருந்த ஒரு இடத்தில் எருமை மாடுகள் நின்றிருந்தன. வீட்டைச் சுற்றி மதில் இல்லை. சகதியும் சேறும், எருமை மாடும், வெள்ளமும், வருத்தங்களும் காசு கொடுக்காமலேயே வந்து குடியேறும். ஆனால் சுற்று மதிலும், வீடும், தட்டையான நிலமும் வேண்டுமென்றால் பணம் அள்ளித்தான் கொடுக்கவேண்டும். பள்ளத்தை நிரப்ப மட்டும் தேவைப்படும் பணம் 4 இலட்சம் ரூபாய்கள்(சுமார் 4000 யூறோ) என்று இந்த இல்லப் பொறுப்பாளர்கள் கூறினார்கள். ஆனால் உதவி- நண்பர்களில் ஒருவர் கூறும்போது இது குறைந்த பட்ச மதிப்பீடுதான். வேலைசெய்து முடிந்தால் இன்னும் அதிகமாகச் செலவாகும் என்றார்.

யாழ்ப்பாணத்திலும் இலங்கையில் வேறு பகுதிகளிலும் தெருவிற்குத் தெரு நின்றபடி பெண்களை கேலி செய்தும், நொட்டைக் கதைகள் கூறியும் தொந்தரவு செய்யும் இளைஞர்கள் மத்தியில் தாம் தமது வாழ்நாளுக்காக உழைத்துக் கொண்டும் அதே நேரம் இந்த இல்லத்தையும் பார்த்துக் கொண்டும் இருக்கும் இந்த இளைஞர்களினதும் ஏனைய இல்லத்துப் பொறுப்பாளர்களினதும் சமூக அக்கறை மிகவும் பாராட்டத்தக்கது. இவர்கள் இந்தக் குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்று அக்கறையாக உள்ளனர். ஆனால் இவற்றிற்கு தற்சமயம் தடையாக உள்ளது பணம் ஒன்றுதான்.

அந்த புதிய தாழ்ந்த காணிக்குள், தமக்கென எதிர்காலத்தில் சொந்தம் கொண்டாடக்கூடிய காணிக்குள், மட்டமாக இருக்கும் ஒரு பக்கத்தில் இல்லத்துப் பிள்ளைகள் பெருமையுடன் கத்தரிக்காய் போன்ற பயிர்களை நட்டிருந்தார்கள். மதில் இல்லாததால் வேலியைப் பிய்த்துக் கொண்டு வந்து மாடுகள் ஒன்றும் விடாமல் நன்றாக செழித்து வளர்ந்திருந்த பயிர்களை மொட்டையாக்கியிருந்ததனையும் பிள்ளைகள் கவலையுடன் காண்பித்தார்கள்.

ஊர் ஊராக எத்தனையோ திருமணச் சடங்குகள், திருவிழாக்கள் பல லட்சம் செலவு செய்து கொண்டாடப்படுகின்றது. ஆனால் சாப்பாட்டிற்கு அடுத்த மாதம் என்ன செய்வது என்பதே இவர்களது யோசனை. எப்பவாவது சில வேளைகளில் சடங்குகள், கொண்டாட்டங்களின்போது எமது பிள்ளைகளுக்கு சாப்பாடு வரும் என்று பொறுப்பாளர்கள் கூறியபோது அழுகையே வந்துவிடும்போல் இருந்தது.

இதேபோல் மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்து நிலமைகளும் உள்ளன. உதவி- இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கும் இல்ல நிலைமையிலிருந்து (இவர்களுக்கு உதவி-யின் சிறு நிதி உதவி கிடைப்பதைத்தவிர) வேறு மாற்றங்களின்றி அதிக தேவைகளுடன் இருக்கின்றனர். ஏனைய பிள்ளைகள் போலவே இவர்களிடமும் திறமைகளும் சமூகத்தில் மற்றப் பிள்ளைகளைப்போல் சமமாக தாமும் வாழவேண்டும் என்கின்ற துடிப்பும் உள்ளது. ஆனால் இவர்களது மிக அத்தியாவசியமான தேவைகள்கூட நிவர்த்திசெய்யப்பாடாமல் இருக்கும் பட்சத்தில் மிகுதி விடயங்கள் பற்றி நினத்துக் கூடப் பார்க்க முடியாமல் இருக்கிறது. அத்துடன் பிள்ளைகளின் வருகை முற்றுப் பெறவில்லை. தொடர்ந்தும் பிள்ளைகள் கொண்டுவந்து விடப்படுகின்றனர். இங்கு நாம் செல்வதற்கு ஒரு கிழமைகளுக்கு முன்னர் ஒரு சிறுவன் கொண்டுவரப்பட்டிருந்தான். உறவுகளை விட்டுப் பிரிந்த சோகமும் முற்றாகப் புதிதான சூழலும் ஏனைய பிள்ளைகளுடம் ஒன்ற முடியாமல் இருந்தான். ஏனைய குழந்தைகளிடமிருந்து விலகி இருந்தது மட்டுமல்லாமல் அழுதவண்ணமும் இருந்தான். இது போன்ற தருணத்தில் இந்தப் பிள்ளையின் மனோநிலையைக் கவனத்தில் எடுத்து அன்பு காட்டிப் பாரமரிக்க ஒரு தனி ஆள் தேவை. நிதி நெருக்கடி இல்லாத வேறு இல்லங்களில், அல்லது  யேர்மனி போன்ற வேறு இடங்களில் இருக்கும் இல்லங்களிலென்றால் உளவியல் துறை சம்பந்தப்பட்டவர்கள், மேலும் இதுபோன்ற பிள்ளைகளை நேரமெடுத்துப் பராமரிப்பவர்கள் என்று இருப்பர். ஆனால் இந்த இல்லங்களுக்குப் பொறுப்பானவர்கள் ஒருவரோ இருவரோதான். இவர்களேதான் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கவேண்டும். இந்நிலையில் ஒரு பிள்ளைக்கென்று நேரமெடுப்பது சாத்தியமல்ல. வேறு ஒருவரை நியமிப்பதென்றால் யார் அதற்கான பணத்தைக் கொடுப்பது?

யோகசுவாமி இல்லத்தில் ஒரு பால் மணமே மாறாத ஒரு பச்சிழங் குழந்தை புதிதாக தாயாரினால் அழைத்துவந்து விடப்பட்டிருந்தது. தனது சொந்தப் பிள்ளையைப் பராமரிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அந்தத் தாயும் தனது தாயினைப் பிரிந்து வாழவேண்டிய கொடுமையான நிலையில் பிள்ளையும்! அந்தப் பிள்ளையின் மனோநிலையை நினைத்துப் பார்த்தேன். தாயினதும் தனது ஏனைய உறவுகளினதும் பிரிவினை இந்தப் பிள்ளை எப்படித் தாங்கியிருக்குமோ? இந்த வேதனை இந்தப் பிள்ளையுடன் மட்டுமே நின்றுவிடப் போவதில்லையே! நடனம் பழகுகிறீர்களா என்று கேட்டதற்கு ஆடிக் காண்பிக்கப்பட்டது மாத்திரமில்லாமல் நீண்ட ஒரு வில்லுப் பாட்டும் நிகழ்த்திக் காட்டினார்கள். நாங்கள் போதும் என்று கூறும்வரையில் பலவகையான நிகழ்ச்சிகளைச் செய்து காட்டினார்கள். ஆட்களைப் பார்த்த மகிழ்ச்சியும் தமது திறமைகளை வெளிப்படுத்தவேண்டும் என்கின்ற ஆர்வமும் கொண்டுள்ளனர். பணம் மட்டுமே இவர்களது திறமைகளை இந்த இல்லங்களுக்குள்ளேயே முடக்கிப் போட்டுவிடக் காரணமாகிவிடுமா? ஏனெனெனில் எதிர்காலத்தில் மேலதிக சங்கீத நடன வகுப்புகள் அதற்கான உபகரணங்கள் தேவைப்படுமல்லவா!

சக்தி இல்லத்தில் வசிக்கும் ஒரு சிறுமி சுருதிப்பெட்டியை தானாக இசைத்தபடி பாட்டும் பாடிக் காண்பித்தாள். இந்தத் திறமைகள் ஊக்குவிக்கப்படவேண்டியவை. உறவுகளை இழந்து அல்லது பிரிந்து உறவுகள் அல்லாத புதிய சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டும், மனதில் எத்தiயோ வேதனைகளையும் தாங்கியபடி ஆனால் நாளாந்த வாழ்வில் சோகமான சிரிப்புகளை உதிர்த்தபடி தமது வாழ்நாட்களைக் கழித்தபடி வாழும் இப் பிள்ளைகளின் எதிர்காலம் பணம் என்கின்ற ஒரு காரணத்தால் தேங்கிச் சீரழியுமானால் அதற்கு நாம் எல்லோரும் பொறுப்பாளிகளாவோம்.

யோகசுவாமி இல்லப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டு முழுமையடையாத சமையல் அறையையும் குளியல் அறையையும் பார்த்தோம். ஓரு அறையில் து}ங்கி இரண்டு கழிப்பறையையே இந்தனை பிள்ளைகளும் பாவித்து வாழ வேண்டிய வாழ்க்கை. அது கூட சரியாக இல்லை. சமையலறை வேலைகள் இன்னும் கொஞ்சம்தான் உள்ளது. அதற்கான நிதி உதவியையும் செய்துவிட்டால் தாம் ஓரளவு வசதியாக அந்த சமையல் அறையில் பிள்ளைகளுக்குச் சமைக்க முடியும் என்றார்கள் பொறுப்பாளரும் சமைப்பதற்குப் பொறுப்பாக உள்ள பெண்ணும். இதுவரையில் இங்கு வாழும் பெண்பிள்ளைகள் கிணற்றடியில்தான் குளித்துவருகின்றனர் ஆனால் மூடப்பட்ட குளியலறை இவர்களுக்கு மேலும் பாதுகாப்பைத் தருவது. குளியல் அறை நிதியில்லாத காரணத்தனால் முழுமை பெறாமல் உள்ளது.

கதிரொளி சிறுவர் இல்லப் பிள்ளைகள் தங்குவதற்கு ஒரே ஒரு கட்டிடம்தான் உள்ளது. இதில் தான் படிப்பு, படுக்கை எல்லாம். கதவுகள் இல்லாத தட்டுகளில் தமது உடுப்புகளை அழகாக அடுக்கி வைத்திருந்தனர். இது இவர்களுக்குச் சொந்தமான கட்டம் அல்ல. சமையலறை அரசாங்கச் சொத்து என்றபடியால் பறிபோகும் நிலையில் உள்ளது. சில கிலோ மீற்றர்கள் து}ரத்திலேயே சக்தி என்கின்ற பெயருடன் கதிரொளியின் பெண் பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள. ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் குறிப்பிட்ட ஒரு து}ர அளவில் வசிக்கவேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையிலேயே பல மாதங்களுக்கு முன்னர் வேறு ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அறவாளி இல்லப் பெண் பிள்ளைகளும் சேர்க்கப்பட்டுள்ளனர். சின்னச் சின்ன அறைகளையும் சமையல் வசதிகள் போதாத நிலையிலும் உள்ள இந்த வீட்டிற்கு 10000 ரூபாய்கள் வாடகை கேட்கப்பட்டு 6500 ரூபாய்களே(சுமார் 65 யூறோ) வாடகை கொடுக்கின்றார்களாம். ஏனைய இல்லங்களைப் போலவே இந்த வீடும் உள்ளே இருட்டாக இருந்தது.

மேற்குறிப்பிட்ட ஆண்பிள்ளைகள் வதியும் கட்டிடத்திலிருந்து எப்போது எழுப்புவார்கள் என்று கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். கட்டிடத்திற்குப் பின் வளவில் ஒரு கிணறு கட்டப்பட்டு உள்ளது. ஆனால் மிகுதி வேலைகள் முடிக்கப்படாததால் தண்ணீர் அள்ள முடியாமல் உள்ளது. இவர்களுக்கு இவ்விடத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு காணி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நிதி உதவியும் இல்லை.

இல்லங்களில் வாழும் பிள்ளைகள் பாடசாலைகளில் வித்தியாசப்படுத்தப்படாமல் ஏனைய பிள்ளைகளைப்போல் சமமாக நடாத்தப்படவேண்டும் என்றும் அதற்காகவே பாடசாலையில் தேவைப்படும் பொருட்களையும் வாங்கிக் கொடுக்க முயல்வதாகவும், அத்துடன் ஏனைய பிள்ளைகளைப்போல் அவர்களும் பாடசாலையில் அனைத்து விடயங்களில் பங்குபெறவேண்டும் என்றும் தாம் முயல்வதாகவும் அதற்கான வசதிகளைப் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புவதாகவும் ஆனால் அதற்கான நிதி உதவி இல்லை என்றும் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். உதாரணமாக பாடசாலைகளில் கொண்டுவரப்பட்ட புதிய முறையான ஒப்படை முறை வரவேற்கத்தக்கது. இது பிள்ளைகளை சுயமாக பலவிடயங்களை செய்ய பயிற்றுவிக்கும், ஊக்கமூட்டும் முறையாகும். ஆனால் இதற்கான பொருட்கள் வாங்குவதற்கு ஒரு பிள்ளைக்கு ஒரு மாதத்திற்கு 500 ரூபாய்கள்(சுமார் 5 யூறோ) தேவைப்படுகின்றன. இதற்கு நாங்கள் எங்கே போவது? என்றார் கதிரொளி இல்லப் பொறுப்பாளர்.

வெளிநாடுகளில் சிறுவர் இல்லங்களுக்காகவென்றே தமிழ் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருடாவருடம் நிதி சேர்ப்பார்கள். இதில் உங்களுக்கு ஒன்றுமே கிடைப்பதில்லையா? என்று கேட்டதற்கு அப்படியெதுவும் கிடைப்பதில்லை. உதவி- சாப்பாட்டிற்கும் பொருட்கள் வாங்கவும் உதவிகள் செய்தது. தொடர்ந்தும் செய்கின்றது. ஆனால் அது போதாது. பிள்ளைகளின் தேவைகளில் மிகச் சிறிய பகுதியையே உதவி-யின் பணத்தைக்கொண்டு நிறைவேற்ற முடியும். அகில இலங்கை மாமன்றம் 12000 ரூபாய்களை (சுமார் 120 யூறோ) மாதாமாதம் தருகின்றது. அதுவும் நிறுத்தப்படப் போவதாக ஒரு பேச்சுள்ளது. அப்படி நிறுத்தப்பட்டால் பிள்ளைகளின் நிலமை நினைத்துப் பார்க்கமுடியாது என்றார் அறவாளி இல்லப் பொறுப்பாளர்.

அரசில் பதிவு செய்யப்பட்ட இல்லத்துப் பிள்ளைகள் அரசாங்கத்திடமிருந்து அன்பளிப்புகள் பெறலாம் என்கின்ற செய்தி உதவி இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் கிடைப்பதில்லையா என்று கேட்டதற்கு தாம் பல வருடங்களுக்கு முன் பதிந்துகொடுத்தும் எந்த உதவியும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று இல்லப் பொறுப்பாளர்கள் கூறினார்கள்.

மொத்தத்தில் இந்த இல்லங்களைப் பார்வையிட்டதில் இவர்களது நிலமை உதவி- இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதைவிட மேலும் மோசமாக உள்ளதனையே பார்க்கமுடிந்தது. உதவி-யினு}டாக அனுப்பிவைக்கப்படும் நிதி மிக மிகக் குறைந்தது. அதற்கும் மேலாக அவர்களது அடிப்படைத் தேவைகளே இன்னமும் பூர்த்திசெய்யப்படாமல் உள்ளன என்பதுவும் மேலும் பலர் முன்வந்து நிதி உதவி வழங்கினால் மட்டுமே அங்கு வாழும் எமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என்பதும் தெளிவாகிறது.

மாணிக்கவாசகர் இல்லத்துப் பிள்ளை ஒன்றினால் அந்த நாளுக்காக எழுதப்பட்டிருந்த நற்சிந்தனை வசனம்: சிறு துளி பெருவெள்ளம்! இவ்வாக்கியத்தினை பெற்றார்களையும் உறவுகளையும் இழந்தும் பிரிந்தும் மனவேதனைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நிலையில் ஒழுங்கான சாப்பாடு, உறங்க ஒரு இடம, உடை, படிப்பு இருந்தாலே நிம்மதி என்று ஒரு சாதாரண வாழ்விக்காக ஏங்கும் இந்த இல்லப் பிள்ளைகளுக்கும் அர்த்தமானதாக ஆக்குவோமா?

- நிருபா
(ஜேர்மனி)

4/2004
Trackback(0)
Comments (0)Add Comment

Write comment

busy
 

பேசும் படம்

1209.jpg

பேசும் படம்...

0309.jpg