14.12.2002: கிழக்கு மகாணத்திலுள்ள கொக்கட்டிச்சோலை "கதிரொளி இல்லம்" சென்றோம்.
35 ஆண், பெண் சிறுவர்கள் இங்கே தங்கியிருக்கிறார்கள்.
இங்குள்ள பிள்ளைகளின் பெற்றோர் அல்லது தாய் அல்லது தந்தை இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்களால் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு முடியாதவர்கள் (தொழிலின்மை, பணமின்மை) தங்கள் பிள்ளைகளையும் இப்படியான இல்லங்களில் விடுகிறார்கள்.
நாங்கள் இங்கே போனபொழுது 35 பிள்ளைகளும் படுக்க 3 பாய்கள் மட்டும்தான் இருந்தன.
காலில் போட்டுக்கொள்ள எதுவுமில்லை. இல்லம் உள்ள இடத்தைச் சுற்றி மழை வெள்ளம்.
பள்ளிக்கூடத்திற்கு புத்தகங்கள், கொப்பிகள் கொண்டுபோக ஒரு பை கூட இல்லை. புத்தகங்கள், பேனைகள், கொப்பிகளும் போதுமானதாக இல்லை.
ஒருநாள் சாப்பாட்டிற்கே போதிய நிதியில்லாமல் துன்பப்படுகிறார்கள். 35 பிள்ளைகளும் ஒரு கறியுடனாவது சாப்பிடுவதற்கு ஒரு மாதம் தேவைப்படும் நிதி 500,-யூறோ.
யார் தருவார்....?
இங்குள்ள பிள்ளைகள் தங்களுடன் தாங்களே விளையாடி, அழும்போது தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லி....
நாங்கள் போனபோது மத்தியானச் சாப்பாடு சோறும், அப்பளமும், பருப்பும்தான். இந்தப் போசாக்கில்லாத உணவு கிடைப்பதற்கே பிள்ளைகளுக்கு நிரந்தரமான வழியொன்றுமில்லை. படிக்கின்ற பிள்ளைகள் சத்தான உணவின்றி....
என்ன குற்றம் இவர்கள் செய்தார்கள்?
இந்த இல்லத்தைப் பராமரிக்கும் எல்லோரும் சேவையுள்ளத்துடன் தொண்டாற்றி வருகிறார்கள்.
ஒரு பெண் இந்த இல்லத்திலேயே எப்போதும் தங்கியிருந்து இருப்பதைக் கொண்டு பிள்ளைகளுக்குச் சமைத்துத் தருகிறார்.
இந்த இல்லத்திற்கு உடனடியாகத் தேவைப்படுவையென பொறுப்பாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தவை அனைத்தையும் இந்தப் பிள்ளைகளையே கடைகளுக்குக் கூட்டிப் போய் மட்டக்களப்பு உதவி நண்பர் வாங்கிக் கொடுத்தார். (மேலதிக தகவல்கள் நிதி விபரத்தில்)
தங்களுக்கு பணமாகத்தான் தரவேண்டுமென்றில்லை, பிள்ளைகளை நீங்களே கூட்டிச் சென்று அவர்களுக்கு தேவையானவற்றை நீங்களே வாங்கிக் கொடுங்கள் என்று பொறுப்பபாரளர்கள் எமக்குச் சொல்லியிருந்தனர்.
வெளி உலகத்துடன் தொடர்பில்லாத வெறுமை... பெற்றோர், உற்றார் இல்லாத தனிமை... தங்களது நிலமையை எண்ணி அந்தக் குழந்தைகள் அடிக்கடி அழும்போது தானும் அவர்களுடன் சேர்ந்து அழுவதாக பொறுப்பாளர்களில் ஒருவரான தயானந்த ரவி சொன்னார். தொடர்ந்து இந்த இல்லத்தில்தானா இவர்களது வாழ்க்கை.....?
இவர்களது எதிர்காலம் என்ன...?
15.12.2002: சத்துருக்கொண்டானிலுள்ள "அறவாழி இல்லம்" சென்றோம்.
இந்த இல்லம் அமைந்துள்ள இடத்திற்குப் பக்கத்திலேயே 02.09.1990 இல் அரசபடைகளால் 186 தமிழ்மக்கள் கோரமாகப் படுகொலை செய்யப்படனர்.
இந்த இல்லத்தில் 20 பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இங்குள்ள பிள்ளைகளின் பெற்றோர் அல்லது தாய் அல்லது தந்தை இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
தங்களால் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு முடியாதவர்கள் (தொழிலின்மை, பணமின்மை) தங்கள் பிள்ளைகளையும் இப்படியான இல்லங்களில் விடுகிறார்கள்.
நாங்கள் முதல் நாள் இங்குபோனபோது பொறுப்பாக யாருமில்லாமல் இந்தப் பெண்பிள்ளைகள் தனியாகவே இல்லத்தில் இருந்தார்கள். இல்லம் திறந்தபடியே இருந்தது.
இந்த இல்லத்திலுள்ள பெண்பிள்ளைகள் பெண்கள் என்ற ரீதியல் ஆண் சிறுவர்களைவிட மேலதிக தேவைகளுள்ளவர்களாக இருந்தும் அவை நிவர்த்தி செய்யப்படவில்லை.
நாங்கள் இங்கே போனபொழுது இவர்களுக்கு படுக்கை வசதிகள் இல்லை. பாடசாலைக்கு புத்தகங்கள், கொப்பிகள் கொண்டுபோக பைகள் இல்லை. சப்பாத்துகள் இல்லை. இவர்களது உடுப்புகளை வைக்க இல்லத்தில் எந்த ஒரு அலுமாரியோ, தட்டுகளோ இல்லை.
பிள்ளைகளின் சுத்தத்தில் பொறுப்பாளர் போதிய கவனம் இல்லாமலிருப்பது தெரிந்தது.
இந்த இல்லத்திற்குப் பொறுப்பாக இருக்கும் பல்கலைக்கழக மாணவரான பங்கையற்செல்வன் தனது படிப்பு முடிய சைக்கிளில் வீடுவீடாகச் சென்று நிதி திரட்டி இந்தப் பிள்ளைகளைக் கவனித்து வருகிறார். இவர் ஒருவரே இல்லத்திற்குப் பொறுப்பாக இருப்பதால் நிர்வாகமுறைகளைத் தெரியாது இருக்கிறார். ஒரு நிர்வாகத்தை உருவாக்கவும் தயங்குகிறார். இதன் விளைவுகள் பற்றி அவருக்குச் சொல்லப்பட்டது.
ஒரு பெண் இந்த இல்லத்திலேயே தங்கியிருந்து இருப்பதைக்கொண்டு பிள்ளைகளுக்குச் சமைத்துத் தருகிறார்.
மதிய உணவாக சோறும், இலைவறையும், அப்பளமும்தான். போசாக்கில்லாத இந்த உணவுக்கே இந்த இல்லத்திற்கு நிரந்தர உதவியில்லை.
இந்த இல்லத்திற்கும் மாதாந்தம் ஆகக் குறைந்தது 500 யூறோக்களாவது வேண்டும்.
யார் தருவார்.....?
இந்த வீட்டை 5000யூறோ வந்து வாங்கும்படியும், இல்லையென்றால் விரைவில் வெளியேற வேண்டும் என்றும் வீட்டின் சொந்தக்காரரால் சொல்லப்பட்டுள்ளது. நாளாந்த சாப்பாட்டுக்கே நிரந்தர வழியில்லாத நிலையில் வீட்டை எப்படி இவர்கள் வாங்குவார்கள்? இந்த இல்லத்தின் முன்னால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பல ஏக்கர் கோயில் காணியிலும் இவர்களுக்கு அனுமதியில்லை.
இந்த இல்லத்திற்கு உடனடியாகத் தேவைப்படுவையென பொறுப்பாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தவை அனைத்தையும் இந்தப் பிள்ளைகளையே கடைகளுக்குக் கூட்டிப் போய் மட்டக்களப்பு உதவி நண்பர் வாங்கிக் கொடுத்தார். (மேலதிக தகவல்கள் நிதி விபரத்தில்)
திருப்பழுகாமத்திலுள்ள "விபுலானந்த இல்லம்" மட்டக்களப்பு உதவி நண்பர் சென்றபோது 48 பிள்ளைகள் அங்கே இருந்தனர்.
48 பிள்ளைகளுக்கும் ஒரே ஒரு மலசலகூடம். பள்ளிக்கூடம் போகின்ற பிள்ளைகள் இந்த ஒரு காரணத்திற்காகவே மணித்தியாலக்கணக்கில் அதிகாலையே எழும்ப வேண்டும்.
தமது படிபுக்காக நீண்ட தூரம் நடந்து சென்றே பிள்ளைகள் படித்து வருகின்றனர்.
இந்த இல்லத்தின் பொறுப்பாளர்கள் சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர்.
ஏனைய இல்லங்கள் போலவே இந்த இல்லமும் நாளாந்த உணவை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த இல்லத்திற்கு உடனடியாகத் தேவைப்படுவையென பொறுப்பாளர்கள் எங்களிடம் கேட்டிருந்தவை அனைத்தையும் இந்தப் பிள்ளைகளையே கடைகளுக்குக் கூட்டிப் போய் எமது உதவி- நண்பர் வாங்கிக் கொடுத்தார். (மேலதிக தகவல்கள் நிதிவிபரத்தில்)
இங்கே படங்களாகக் காட்டப்படாத மூதூர் சிறுவர் இல்லத்தில் 25 பிள்ளைகள் இருப்பதாகவும், நாளாந்த சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில் இல்லம் பூட்டப்படும் துயரத்தில் இருப்பதாகவும் மட்டக்களப்பு உதவி- நண்பர் தெரிவித்தார்.
இதே போல் இங்கே படங்களாகக் காட்டப்படாத சித்தாண்டியிலுள்ள சிறுவர் இல்லமும் நாளாந்த உணவை பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கே வழியில்லாத நிலையிலுள்ளனர்.
தொடர்ந்து மாதாமாதம் உதவி-க்கு குறிப்பிட்ட நிதி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இதுவரை கிடைக்காததால் சிறுவர் இல்லங்களுக்கு எந்த உறுதியும் வழங்க முடியவில்லை.
ஒரு சிறுவர் இல்லத்திற்கு ஆகக் குறைந்த 500 யூறோ அத்தியாசியத் தேவைகளுக்காகத் தேவைப்படுகிறது.
இதுவரை 5 சிறுவர் இல்லங்களைப் போய்ப் பார்த்து இவர்களுக்கு உதவி கிடைக்கச் செய்யக்கூடிய ஒழுங்குகள் செய்ய நண்பர்கள் கிழக்கு மாகாணத்தில் முன்வந்துள்ளனர்.
ஆனால் நிதி ? ? ?
- உதவி.நண்பர்கள்
01/2003
Trackback(0)
 |