இல்லங்களிலிருக்கும் நாங்கள் கிணற்றுத் தவளைகள் போல் இருக்கக்கூடாது என்பதற்காக உதவி இணையத்தால் 23.04.2004 இல் ஒருநாள் சுற்றுலா ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது.
அதிகாலையே நாங்கள் எல்லோரும் எழுந்து பேருந்து எப்போது வருமென பார்த்துக் கொண்டிருந்தோம். 7.20 இற்கு பேருந்து வந்தது. எல்லோரும் மகிழ்ச்சியாக ஓடிப் போய் ஏறினோம். எங்களுடன் எமதில்லத்தின் மேற்பார்வையாளரும், சமைக்கும் அம்மாவும் வந்தார்கள்.
வழியில் சித்தாண்டியில் யோகசுவாமிகள் இல்லத்தில் பேருந்து நிற்க, அங்கிருந்த பெண்களும் ஏறி வந்தனர். எல்லோரும் மகிழ்ச்சியாக பாட்டுகள் பாடினோம்.
மீண்டும் வழியில் பழுகாமம் விபுலானந்தா இல்லத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு அங்கிருந்தவர்களும் ஏறினர். எங்களுக்குப் பின்னால் வந்த பேருந்தில் கதிரொளி, சக்தி இல்லத்தவர்களும் வந்தனர்.
போகும்வழியில் யானைகள், மான்கள், மயில்கள் என்பவற்றைப் பார்த்துப் போனோம்.
பிற்பகல் 12.30 மணியளிவல் உகந்தை மலையை அடைந்தோம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு மலையிலுள்ள கோயிலைப் பார்த்தோம்.
14.30 மணியளவில் உல்லையை நோக்கிச் சென்றோம். போகும் வழியில் யானை ஒன்று உணவு உண்பதையும், மயில் அழகாகத் தோகையை விரித்து ஆடுவதையும் கண்டோம். உல்லை கடலுக்கு வந்தோம். கடலில் சந்தோசமாகக் குளித்தோம்.
16.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 20.00 மணிக்கு எமதில்லத்திற்கு வந்து சேர்ந்தோம்.
இப்படியான சுற்றுலாக்கள் எங்களுக்குத் தெரியாத இடங்களைப் பார்ப்பதற்கு மட்டும் என்றில்லை. மலையும், அங்கிருந்து பார்க்கும்போது தெரியும் இயற்கைக் காட்சிகளும் மனதைக் கவர்கின்றன. நீலக் கடல் எங்களது மனதிற்கு ஆறுதல் தந்தது.
இந்தச் சுற்றுலா போல மீண்டும் ஒரு சுற்றுலா செல்ல எங்களுக்கு மிகவும் விருப்பமாக இருக்கிறது. இனிவரும் காலங்களில் கொழும்பு, கண்டி, நுவரெலியா போன்ற தூர இடங்களையும் நாம் போய் பார்த்து வர உதவும்படி உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
- குகேந்திரன், சசிதரன், கரிகாலன், தினேந்திரன், குமாரசிவம், டோதரன், சிறிதரன் (மாணிக்கவாசகர் இல்லம்)
6/2004
Trackback(0)
 |