பாடசாலை விடுமுறையென்பதால் சாவகாசமாக படுக்கையைவிட்டு எழுந்தேன். நேரம் எட்டு மணிக்கு மேலிருக்கலாம். குளிர்நீரால் எனக்கு ஒரு அபிசேகம் செய்து, வழமையான காலைக் கடன்களையும் முடித்துக்கொண்டபோது வழமைக்கு மாறாக தெருவில் பெரிய சத்தம் கேட்டது. பலர் விழுந்தடிக்க ஓடுவதும், சதம் போடுவதுமாய் ஒரே அல்லோலகல்லோலமாக இருந்தது.
என்னவென்று பார்க்க தெருவுக்கு வந்தேன். 'கடல் வருகுது', 'கடல் வருகுது' என்று ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்லியபடி எல்லோரும் ஓடிக் கொண்டிருந்தார்கள். இப்போது உழவுயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோக்கள், சைக்கிள்கள் எல்லாவற்றிலும் ஆட்கள் நிரம்பிவழிய, தெருவே அடைத்துப் போனது. எல்லோரிலும் பயபீதி தெரிந்தது.
நான் திரும்ப இல்லத்திற்குள் ஓடினேன். எல்லோரும் அவசர அவசமாக கையில் அகப்பட்ட அத்தியாவசியமான பொருட்களைச் சேகரித்தோம். என்னவென்று முழு விபரம் தெரியாமலே எல்லோரும் பயந்து போனோம். நாம் ஓடத் தயாரானபோது ஒரு அண்ணா வந்து, எங்கள் இடத்திற்கு கடல் வரச் சாத்தியமில்லையென்ற பின்தான் போன உயிர் திரும்பி வந்தது. எங்களை நாங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது அருகாமையில் பெருத்த அழுகுரல் கேட்டது.
தெருவைப் பாரத்தேன். ஒரு கையில் குழந்தையுடனும், மறுகையால் சேலையை உயர்த்திப் பிடித்தபடியும் ஒரு தாய் அழுதபடி உள்ளத்தை உருக்கும் வகையில் ஓடி வந்துகொண்டிருந்தாள். இனி ஒரு அடி எடுத்துவைக்கக்கூடிய வலுவின்றி எங்கள் இல்லத்தின் வாசலில் துவண்டு விழப்போகும் நிலையில் அவளைப் பாரத்ததும் ஓடிப்போய் அவளின் கையிலிருந்த குழந்தையை ஒரு கையால் தூக்கி எடுத்துக்கொண்டு மறுகையால் அவளைத் தாங்கிப் பிடித்தபடி இல்லத்திற்குள் வந்தேன். அவளைச் சுவரோடு சாய்ந்து உட்கார வைத்து, குளிந்த நீர் குடிக்கக் கொடுத்தேன். அழவேண்டாம் என ஆறுதல் சொன்னேன். தனது அழுகையை நிறுத்தாமலே அவள் ஆரம்பித்தாள்.
'கடல் ஊருக்குள் வந்தபோது நானும், எனது கணவரும் மூன்று பிள்ளைகளுடன் வீட்டில் இருந்தோம். சனங்களின் சத்தத்தையும், ஆரவாரங்களையும் கேட்டு பதறியடித்து கையில் அகப்பட்ட இரண்டு குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினேன். கணவர் மூன்றாவது பிள்ளையைத் தூக்க ஓடினார். என்னால் நம்பவே முடியவில்லை. பனை உயரத்திற்கு அலை பயங்கரமாக மேலே எழுந்தது. கடல் நீர் வேகமாக எங்களைத் துரத்திக்கொண்டு வந்தது. கடலின் வேகத்திற்கு எங்களால் ஓட முடியாது என்று தெரிந்தது. வழியில் அகப்பட்ட ஒரு மரத்தை குழந்தைகளுடன் சேர்த்துக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். அரக்கன் போல் பாய்ந்து வந்த கடல் எங்களை நெருங்கியது. பயத்துடன் கண்களை மூடிக் கொண்டேன். கடல் எங்களை முட்டி மோதி மூடிச் சென்றது. கடலின் அழுத்தம் என்னை நிற்கவிடாமல் முரட்டுத்தனமாகத் தள்ளியது. மூச்சு முட்டியது. எனது பலமெல்லாம் இழந்துவிட்டேன். இதோ சாகப்போகிறேன் என்ற பயத்தில் இருந்த கடைசிப் பலத்தையெல்லாம் ஒன்று கூட்டி மரத்தை பிடித்தபடியே நின்றேன். கடல் வந்த வழியே திரும்பிப் போனது. இப்போதுதான் தெரிந்தது. எனது கையில் ஒரு குழந்தை மட்டும்தான். நான் பலம் கொண்ட மட்டும் கத்தி அழுதேன். அங்குமிங்கும் தேடினேன். எங்கே கண்டு பிடிப்பது? வெள்ளத்தில் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. என்னால் பிள்ளையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எனது பிள்ளை இல்லாமல் என்னால் அந்த இடத்தைவிட்டுப் போக முடியவில்லை. அப்போது மறுபடியும் எல்லோரும் பயத்துடன் அலறியபடி திரும்ப அங்குமிங்கும் ஓடினார்கள். திரும்ப அலை வருவதாக கத்தினார்கள். தூரத்தில் அலையின் பேரிரைச்சல் கேட்டது. இப்போது என்ன செய்வது? காணாமல் போன பிள்ளையைத் தேடுவதா? கணவரையும் மற்றப் பிள்ளையையும் தேடுவதா? கையில் இருக்கும் பிள்ளையைக் காப்பாற்றுவதா? எந்த ஒரு தாய்க்கும் இப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலை வரவே கூடாது. இது மிகவும் கொடுமையானது. நின்று யோசிக்க நேரமில்லை. கையிலிருக்கும் பிள்ளையைக் காப்பாற்ற வேண்டியது எனது கடமை. அதனால் எனது கடைசிப் பலத்தையெல்லாம் ஒன்று சேர்த்து ஓடி வருகிறேன்'
அவள் பலமிழந்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்கும், பக்கத்திலிருந்தவர்களுக்கும் கண்ணீர் வருகிறது. அவள் கையிலிரந்த குழந்தையும் வீரிட்டு அழுகிறது.
எனக்கு ஏனோ எனது கதை ஞாபகம் வருகிறது. அப்பாவையும், அண்ணாவையும் இராணுவம் சுட்டுக் கொன்றபோது அம்மா என்னை அணைத்தபடி அழுது குளறிய காட்சி இத்தனை காலமாகியும் என்னை விட்டு மறையவில்லை. அப்போது யுத்தம், இப்போது இயற்கை. இரண்டுக்குமே உறவுகளின் வலி தெரியவில்லை.
அவளின் குழந்தை வீரிட்டு அழுகிறது.
அந்தக் குழந்தைக்கும், தாய்க்கும், ஏற்கெனவே எங்களது இல்லத்திற்கு வந்துவிட்டவர்களுக்கும் உணவு கொடுப்பதற்கான வேலையில் நானும், இல்லத்திலிருந்த ஏனையோரும் இறங்கினோம்.
- சிறீகாந்தன் (வகுப்பு 9, விபுலானந்தா சிறுவர் இல்லம்) 01/2005
Trackback(0)
 |