சிறுவர்களாகிய எங்களுக்குப் பல பிரச்சினைகள் உண்டு. அவைகள் பாலியல் வல்லுறவு, கல்வியின்மை, பாதுகாப்பின்மை, வீட்டுவேலைகளுக்கு அனுப்புதல், உணவின்மை, உடையின்மை, வெளிநாடுகளுக்கு விற்றல்.... என்று பலவகைப்படும்.
கல்வியின்மையை எடுத்துக் கொண்டால், மாணவர்களுக்கு பாடசாலைக்கு கொண்டு செல்வதற்குரிய உபகரணங்கள் வாங்குதவற்கு வசதிகள் இல்லை. கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால் அங்கே அநேகமானோர் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். இதில் கிடைக்கும் வருமானம் உணவிற்கே போதுமானதாக இல்லாதபோது படிப்புக்கு எங்கே போவது? இதனால் சிறுவர்களின் கல்விதான் பாதிக்கப்படுகிறது.
பாதுகாப்பின்மையை எடுத்துக்கொண்டால், வாகன விபத்துகளில் அகப்படுபவர்கள் அதிகம்பேர் சிறுவர்கள்தான். கிராமங்களில் வீதிப் போக்குவரத்துக்கான சமிக்ஞை விளக்குகளோ வேறு விதமான ஒழுங்குகளோ இல்லை. வாகனமோட்டுபவரும் அதிகம் கவனம் எடுப்பதில்லை. பாலியல் வல்லுறவு, பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களின் நிலமையோ இன்னும் கொடுமையானது. இத்தகைய கொடுமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க இங்கு எந்த நிறுவனங்களுமே இல்லை.
படிக்கும் வயதில் சிறுவர்கள் வீட்டு வேலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால் கல்வியைச் சீராகத் தொடரவோ, கல்வியில் கவனத்தைச் செலுத்தவோ முடியாது போகிறது. இன்னும் சிலர் சிறுவர்களை வெளிநாட்டுக்கும் வேலைகளுக்கு அனுப்புகிறார்கள். அல்லது விற்றுவிடுகிறார்கள். இதனால் சிறுவர்களின் எதிர்காலம் முளையிலேயே கிள்ளி எறியப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட எல்லா சிறார்களுக்கும் பொதுவான பிரச்சினைகளுடன் தாய், தந்தை உறவை இழந்து வாடும் எமக்கு இன்னும் மேலதிக பிரச்சினைகள் உண்டு. வாழ்வதற்கென்று எமக்கு நிரந்தர இடமில்லை. தற்காலிகமாக கிடைக்கும் இடங்களில் சூழல் சுத்தமில்லை. இதனால் நாம் நோய்வாய்ப்படுகின்றோம். கிணற்றுத்தவளைகள் எங்கள் இல்லங்களிலேயே இருக்கின்றோம்.
இவை தவிர எங்களுக்கு இன்னும் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றிற்கு ஒரு பதில் எங்களுக்கு கிடைக்குமா?
- வினோதினி (வகுப்பு 8, யோகசுவாமி சிறுவர் இல்லம்) 10/2004
Trackback(0)
 |