| எமது சுற்றுலா. 1 |
|
|
கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென்ற நீண்டநாளாக உங்களுக்கு ஆசை. 27.04.03 அன்றுதான் அந்தக் கனவு நனவாகியது. கொழும்பு மாநகரிலுள்ள முக்கிய இடங்களையும், சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் இன்னும் பல வடயங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டுமென திட்டமிடப்பட்டு பேரூந்து தயார் செய்யப்பட்டது. அன்று அதிகாலையில் எழுந்து வழக்கம் போல கடமைகளை முடித்துவிட்டு மிகவும் ஆனந்தக் களிப்புடன் சுற்றுலா செல்வதற்கான தற்காலிகமான ஏற்பாடுகளுடன் இல்ல நிர்வாகிகள், பேரூந்து உதவியாளர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனைவருடனும் நாங்கள் பேரூந்தில் ஏறினோம். 6.20 மணியளவில் பேரூந்து புறப்பட்டது. பட்டிருப்பு சோதனை நிலையத்தில் இலங்கை இராணுவம் எங்களைச் சோதனை செய்து எங்கள் பயணம் தொடர அனுமதித்தது. மட்டக்களப்பினூடாக சென்று கிரான் என்ற இடத்தை அடைந்தபோது காலை ஆகாரத்திற்கு நேரமாகியது. பேரூந்து நிறுத்தப்பட்டது. எல்லோரும் பசியாறிவிட்டு மீண்டும் பயணம் தொடர்ந்தோம். நிர்வாகிகள், பிள்ளைகள் என்ற பேதத்தை மறந்து எல்லோரும் ஒன்றாக ஆனந்தப் பாடல்களுடனும், அதற்கேற்ப ஆடல்களுடனும் இயற்கைக் காட்சிகளை பார்த்த வண்ணம் நாங்கள் பயணித்தோம். சூரியன் உச்சத்தைத் தாண்டிச் செல்ல முயற்சித்தான். நாங்கள் குருநாகல் மாவட்டத்தைத் தாண்ட முயற்சித்தோம். ஓங்கி வளர்ந்த மரச்செறிவைக் கொண்ட ஒரு பாதை ஓரமாக மதிய உணவுக்காக பேரூந்து நிறுத்தப்பட்டது. உணவுக்கடையில் எடுக்கப்பட்ட உணவுப் பொதிகளை எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டோம். பசிக் கொடுமையால் அங்குமிங்கும் தாவித் திரிந்த குரங்குகளுக்கு மீதி உணவை கொடுத்துவிட்டு மனப் பக்குவத்துடன் பேரூந்தில் ஏறி அமர்ந்தோம். பேரூந்து குருநாகல் ஊடாக கொழும்பை நோக்கி விரைந்தது. பேரூந்தின் வேகத்திலும், வீசிய காற்றிலும் பாதி உறக்க நிலையிலிருந்தபோது பேரூந்திற்குள் சிற்றுண்டி வியாபாரங்கள் செய்வதைப் போன்ற சத்தங்கள் கேட்டன. நாங்கள் விழித்தபோது அது கொழும்புச் சத்தம் என்று தெரிந்தது. கொழும்பு மாநகரை அடைந்து தெகிவளை மிருகக் காட்சிச்சாலையை நோக்கி வீறுநடை போட்டோம். உள்நுழைந்ததும் திகைத்துப் போனோம். வரிக்குதிரை வாலை வீசி வரவேற்றது. அங்கே நாம் இதுவரை காணாத மிருகங்கள், பறவைகளைப் பார்த்தோம். அழகான கிளிகளைப் பார்த்தபோதுதான் தெரிந்தது கிளிகளில் இத்தனை வகைகள் என்று. குரங்குகள் எங்களைப் பார்த்து தங்களுக்குள் கேலி செய்து விளையாடின. மாவிலைகளைக் கூட்டிக் கட்டியது போன்று ஒரு கிடங்கு. அதற்குள் மான் கூட்டம். தங்களுக்கு தரப்பட்ட மரக்கிளைகளில் தேவையானதை மட்டும் உரித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன. தனது கிடங்கிற்குள் சுற்றிக் கொண்டிருந்தது ஒரு வகை நாய். பதுங்கிக் கொண்டிருந்து கறுப்புக் கரடி. நேரான மரங்களைப் பழித்தது ஒட்டகத்தின் கழுத்துகள். நோய் வாய்ப்பட்ட யானையொன்றுக்கு வைத்தியர் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்ததோ ஏராளம்... ஏராளம்... குறிப்பிட்டுக் கூறுவதென்றால் இங்கு இடம் போதாது. விட்டுப் போக மனம் இன்றி மிருகக்காட்சிச்சாலையைவிட்டு வெளியே வந்தோம். மீண்டும் பேரூந்தில் ஏறி அவித்தெடுத்த சோளக் குலைகளை எல்லோரும் பதம் பார்த்துவிட்டு காலிமுகத்திடல் கடற்கரையை நோக்கினோம். எங்குமே காணாதளவு மனிதர்களையும், கடல் அன்னையின் மடியிலே மின்விளக்குகளுடன் தவழ்ந்து கொண்டிருந்த கப்பல்கள் பலவற்றையும் கண்ணுற்றோம். கடற்கரை உப்புத் தென்றல் எங்களை தொட்டுக்கொண்டு சென்றது. ஜஸ்கிறீம் சுவைத்துக்கொண்டு எங்களுக்குள்ளேயே அக் காட்சிகளைப் பற்றி கலந்துரையாடியது மிகவும் இன்பத்தைத் தந்தது. பின்பு அன்றிரவுப் பொழுதைக் கழிப்பதற்காக கப்பியாவத்தை யாத்திரியார் மடத்திற்குச் சென்று சுமைகளை இறக்கிவிட்டு சிறிது இளைப்பாறிய பின் இரவுச் சாப்பாடாக இடியப்பமும், சாம்பாரும் பரிமாறப்பட்டது. அதன் பின் விரிக்கைகளை எடுத்துக் கொண்டு இரவைக் கழிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். மறுநாள் காலைக்கடன்களை முடித்துவிட்டு வருகையில் பால் தேநீர் தயாரானது. அதனை அருந்திவிட்டு வெற்றிடமாக இருந்த பேரூந்தை நிறைத்தோம். இலங்கையிலேயே புகழ்பூத்த ஆலயமான பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தைச் சென்று தரிசிக்கவும், அங்கு வியக்கத்தக்க ஓவியங்கள் கருங்கற்களில் பொழியப்பட்டிருப்பதை பார்வையிடவும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிற்பாடு காலை ஆகாரமாக பாண் சாப்பிட்டுவிட்டு இலங்கையிலேயே மிக உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தகமையக் கட்டிடத்தைச் சென்று பார்வையிட்டோம். 38 மாடிகளைக் கொண்ட அக் கட்டிடத்தில் 33வது மாடிக்கு மின்தூக்கியில் சென்றோம். நாங்கள் மின்தூக்கியில் ஏறிய முதல் தடவை இதுவேயாகும். அந்த உயரமான கட்டிடத்திலிருந்துகொண்டு கொழும்பு நகரின் ஒரு பகுதியை பூரணமாகப் பார்க்க முடிந்ததது. கொழும்புத் துறைமுகம், பழைய பாராளுமன்றக் கட்டிடம், சனாதிபதியின் வீடு முதலான விடயங்களுடன் வாகனங்கள் செல்கின்ற காட்சிகளையும், சாலைகளையும், பெரும் பரப்பான கடற்கரையையும் காண முடிந்தது. இந்த இடத்தில் சூரியன் எவ்.எம். வானொலியைச் சேர்ந்த அறிவிப்பாளர்களான காண்டீபன் அண்ணா, குமுதினி அக்காவைச் சந்தித்தோம். அவர்கள் எங்களது இல்லத்தைப் பற்றிக் கேட்டார்கள். எமது நிர்வாகம் அவர்களுக்குப் பூரணமான விளக்கத்தைக் கொடுத்தது. அவர்களது சூரியா எவ்.எம். வானொலி நிலையத்தை நாங்கள் பார்க்க முடியுமா என்று எமது நிர்வாகம் அவர்களைக் கேட்டது. அதற்கு அவர்கள் தற்போது பார்வையிட முடியாது, நீங்கள் சிறந்த நிகழ்ச்சிகளைத் தந்தால் நாங்கள் ஒலிபரப்புச் செய்வோம் என உறுதி கூறினர். அதன் பின்பு அதே அமைப்பைக் கொண்ட கட்டிடமான இலங்கை மத்திய வங்கிக் கட்டிடத்தைப் பார்வையிடச் சென்றோம். மின்தூக்கியின் உதவியுடன் 28வது மாடிக்கச் சென்று அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் அந்த வங்கி சம்பந்தமான சில தகவல்களையும் கேட்டறிந்துவிட்டு, இலங்கையில் புராதன காலந்தொட்டு இன்றுவரைக்கும் புழக்கத்திலிருந்த நாணய அலகுகளைக் கொண்ட அரும்பொருள் காட்சிக்கூடத்தையும் அவதானித்து அறிந்து கொண்டோம். இவ்வாறு பல பிரமாண்டமான கட்டிடங்கள் வீதியோரக் காட்சிகள் அனைத்தையும் பார்வையிட்டபடி பாராளுமன்றக் கட்டிடத்தை அடைய முன்பு மதிய உணவுக்கு நேரமானது. அதன் பின்பு பாராளுமன்றக் கட்டிடத்தினுள் சென்று அந்தக் கட்டிட அமைப்பையும், அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் முதலானோர் அமரும் ஆசனங்களையும் பார்வையிட்டு கொழும்பு தேசிய அரும்பொருள் காட்சிச்சாலையை அடைந்து அங்கு பல பழமை வாய்ந்த ஆவணங்கள், பண்டைய வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாதாரங்கள் முதலான பல்வேறு விடயங்களையும் பார்வையிட்டுத் திரும்பிய நிலையில் மழைத்துளி எங்களுடன் உறவாட நினைத்தது. அதனை நாங்கள் சந்தோசமாக ஏற்றுக் கொண்டோம். பின்னர் பேரூந்தை விட்டு வெளியிறங்கி சிறுவர் பூங்காவை சுற்றிப் பார்வையிட ஆரம்பித்தோம். எங்களில் பலர் சிறுவர்களாக இருந்தமையினால் அது எங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் அங்கிருந்த ஆகாயவிமானம் போன்ற இராட்டினத்திலும் ஏறி விளையாடியது அளவிட முடியாத ஆனந்தம். மழை பொழிந்தாலும் நாங்கள் களிப்புடன் விளையாடினோம். இராப் பொழுதைக் கழிக்க மீண்டும் முதல் நாளிரவு தங்கிய இடத்திற்கு சென்று இரவைக் கழித்தோம். மறுநாள், அதுவே எங்கள் பயணத்தின் இறுதிநாள். காலைக்கடமைகளை முடித்துவிட்டு எங்களுக்கு இரு இரவுகள் தங்க இடமளித்து நீர் விநியோகம் அனைத்தையும் வழங்கிய அந்தக் கருணையுள்ளங்களுக்கு நன்றி கூறிவிட்டு சிலாபத்தை நோக்கி சென்றோம். சந்தோச மிகுதியால் வாத்தியக்கருவிகளை சிலர் இசைக்க, இன்னும் சிலர் இன்னும் சிலர் பாடல்களைப் பாடிக்கொண்டு கரகோசமிட ஏனையோர் ஆனந்தமாக ஆடினர். முன்னேஸ்வரம் பகுதியை அடைந்ததும் ஆலயத்தை தரிசித்துவிட்டு காலை ஆகாரத்தை முடித்துக்கொண்டு அண்மையிலுள்ள காளி கோவிலையும் பார்வையிட்டோம். பின்னர் தம்புள்ள நோக்கி செல்லும் வழியில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு தம்புள்ள புத்தர் சிலைகளையும், குகை ஓவியங்களையும் கண்ணாறக் கண்டுவிட்டு களைப்பு மிகுதியால் மலையோர மரத்தடியில் இளைப்பாறிவிட்டு மீண்டும் புறப்பட்டோம். அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட எங்கள் பயணம் இடையிலிருந்த பொலநறுவைப் பராக்கிரமபாகு சமுத்திரத்தையும், அதன் அண்மையிலுள்ள ஒரு அரும்பொருட் காட்சிச்சாலையையும் பார்த்துவிட்டு, கபறணை சந்தியிலுள்ள உணவகத்தில் அன்றைய மதிய உணவை உண்டுவிட்டு ஆனந்தப் பாடல்களுடன் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தோம். இச் சுற்றுலாப் பயணத்தையும், இச் சுற்றுலாவுக்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பும், உதவியும் நல்கியவர்களையும் என்றுமே மறக்க முடியாது. - பேரின்பம், அருட்குமார், பிரபா, மதி, தினகரன், சிவப்பிரியன், நந்தேஸ்வரன், சபேஸ்குமார், குலேந்திரராசா, நவேந்திரன், செல்வப்பிரகாசம், பிரசாத் (இலங்கை) 5/2003 |