2011ஆம் ஆண்டிலிருந்து சிறுவர்கள் குறித்தான உலகசினிமாவை உதவியுடன் தொடர்புள்ள சிறுவர்களிடம் கொண்டு செல்கின்றோம். பார்த்த படங்கள பற்றி தமது கருத்துகளை கதைப்பது, எழுதுவது மூலமாக பிள்ளைகள் பகிர்ந்துகொள்வதை ஊக்கப்படுத்தி வருகின்றோம். இந்த செயற்பாட்டில் முதலாவதாக தாம் பார்த்த படம் பற்றி பிள்ளைகள் எழுதியவை இங்கே.Long Walk Home / Rabbit-Proof Fence Directed by: Phillip Noyce Produced by: Phillip Noyce, Christine Olsen, John Winter Written by: Doris Pilkington (book), Christine Olsen Starring: Everlyn Sampi, Kenneth Branagh, David Gulpilil Music by: Peter Gabriel Cinematography: Christopher Doyle Editing by: Veronika Jenet, John Scott Distributed by: Miramax Films Release date: 4 February 2002 Running time: 94 minutes Country: Australia
உண்மைக்கதையின் அடிப்படியிலான திரைப்படம்.
உங்களை அரசு கடத்தினால், உங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போக 1500 மைல்கள் நடப்பீர்களா?
உங்கள் பிள்ளைகளை அரசு கடத்தினால், அவர்களைத் திரும்பப் பார்ப்போம் என்று எதிர்பார்க்க மாட்டீர்களா?
உங்கள் குடும்பத்திலிருந்து உங்களை அரசு பிடுங்கி எடுத்துப் பிரித்தால், உங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போக 1500 மைல்கள் நடப்பீர்களா?
உங்கள் மகளை அரசு கடத்தினால்?
1.
வழமையான சினிமாப் படங்களை விடவும் மன உணர்வைத் தூண்டும் படமாக இப் படம் அமைந்துள்ளது. சமூகப் பிரச்சினையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த கருவியாக இயக்குனர் இப் படத்தினைக் கையாண்டுள்ளார். பொதுவாக சினிமாப் படங்களில் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளும், பின்னோக்கிய சிந்தனைகளும் காணப்படுகின்ற வேளையில், அந்த தொன்மத்தை உடைத்து சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினையை இப் படம் வெளிப்படுத்தியுள்ளது. சிந்தனையை விரிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது
குறிப்பாக இப் படத்தின் பெயரும், மையக் கருவும் பொருத்தமானதாகவே அமைந்துள்ளன. சமுகங்களில் பொருளாதாரம், நிறம், குலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே உயர்ந்தவர்கள் - தாழ்ந்தவர்கள் என்ற பேதம் ஏற்படுகின்றது. உயர்ந்தவர்கள் ஆள்பவர்களாக இருக்க தாழ்ந்தவர்கள் ஆளப்படுபவர்களாகின்றனர். இப் படமும் ஆளும் வர்க்கமான வெள்ளையர்களால் கறுப்பின பழங்குடி மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதனை வெளிப்படுத்துகின்றது. ஆதிக்க வர்க்கத்தின் அழிக்கும் வெறியும் அழிக்கப்படும் இனம் படுகின்ற அவலமும் துன்பத்தின் இழையாய் வெளிப்பட்டு மனதைப் பாதிக்கின்றது.
சிறுவர்கள் மனதிலும் இலட்சியம் உண்டு. அவர்களும் தைரியம் உடையவர்கள் என கூறுவதுடன் அன்பு, கருணை, அரவணைப்பு என்பவற்றையும் இப்படம் எடுத்தாளுகின்றது. கறுப்பு நிறக் குழந்தைகளை வெள்ளையர்கள் அவர்கள் குடும்பத்தினரிடமிருந்து இழுத்துச் செல்லும்போது அக் குடும்பத்தினர் படும் வேதனை, வலி என்பவற்றின் மூலம் தாயின் அன்பும், இப் பிள்ளைகள் தப்பிவரும் வழியில் பல மானிடர்கள் காட்டும் கருணையும், நடப்பதற்கு கஷ்ரப்படும் தங்கையை தன் தோழில் சுமந்து வரும் அக்கா மூலம் சகோதர பாசமும் இப் படத்தின் உணர்வை மெருகூட்டுகின்றன எனலாம்.
சிறுவர் மீதான அடக்குமுறை, ஆள்பவர்களின் அதிகாரம், அடக்குமுறைக்கு உட்படும் மக்கள் படும் அவலம் முதலான சமூகப் பிரச்சினைகளை இப் படம் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் அதிகாரத்தின் வன்முறையை இப் படம் தெளிவாக காட்டியுள்ளது.
அவுஸ்திரேலிய நாட்டில் இடம் பெற்ற நிஜத்திற்கு நிழலாய் அமைந்துள்ள இப் படமானது என்னைப் போன்ற பலருக்கு அங்குள்ள பிரச்சினையையும் அதன் தன்மையையும் அறிந்து கொள்ள உதவும் அதேவேளை பல கேள்விகளையும், எமது அனுபவங்களினுடனான ஒப்பிடுதலுக்கும் அடியாய் அமைந்துள்ளது. இப்படமானது ஏனைய மக்களும் தாம் அனுபவிக்கும் துன்பங்களை பிறருக்கு வெளிப்படுத்துவதற்கு உந்துதலை வழங்குவதாகவும் உள்ளது.
ப.பிறியாந்தி (கலைப்பிரிவு மாணவி அரசடித்தீவு விக்னேஷ்வரா மகாவித்தியாலயம்) #
 2.அன்பு, அரவணைப்பு, கருணை, பிரிவு, சோகம், மகிழ்ச்சி என்ற உணர்வுகளின் கலவையாய் அமைந்த இத் திரைப்படம் 1931ம் ஆண்டில் மேற்கு அவுஷ்திரேலியாவில் வாழ்ந்த அவ்ரோஜீனல் பழங்குடி மக்களின் வாழ்வினைக் கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. இம் மக்களை முற்றாக அழித்துவிட வேண்டும் என எண்ணிய அப்போதைய அரசு அதனை எவ்விதமாக மேற்கொண்டனர் என்பதை இப் படம் காட்டுகின்றது.
அன்பும், அரவணைப்பும் பெற்று இன்பமாக வாழ்ந்த அவ்ரோஜினல் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமியர்கள் அரசின் இத்திட்டமிட்ட அழித்தொழிப்பில் இழுத்துச் செல்லப்படுகின்றனர். புத்திசாதுரியம் மிக்க இச் சிறுமிகள் அவர்களிடமிருந்து தப்பித்து கிட்டத்தட்ட ஆயிரம் மைல் தூரத்தை கால் நடையாக கடந்து தமது தாயை வந்தடைகின்றனர்.
அரசின் (தடுப்பு) முகாம்களில் உணவு, உடை, உறையுள் என யாவும் கிடைத்த போதும் அதிலுள்ள பொய்மையை அறிந்து அங்கிருந்து தப்பிவரும் சிறுமிகளின் தைரியம் வியப்பானது. வழியில் ஏற்படும் தடைகள், துன்பங்கள், தளர்வுகள் கண்டு மனம் தளராது தமது இலக்கை நோக்கித் தொடரும் இவர்கள் பயணம் எமக்குள்ளும் துணிவை வரவழைப்பதாய் இருந்தது. அரசு செய்பவற்றுக்கெல்லாம் அவர்களோடு சேர்ந்த மக்களும் உடந்தையாக இருக்கமாட்டார்கள் என்பதற்கு இப்படத்தில் அச் சிறுமியருக்கு உதவும் வெள்ளை நிற மனிதர்கள் சாட்சியாயுள்ளனர். அதேநேரம் அவர்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவரே அவர்களைப் பிடித்துக் கொடுக்கத் தேடுபவராக இருக்கின்றார். ஒரே இனம் என்ற காரணம் மட்டுமே மனிதாபினத்தைக் கொண்டுவந்துவிடாது.
இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கையில் சிறுமி ஒருவரிடம் ஏற்பட்ட குழப்பம் அவரை மீண்டும் அரச் அதிகாரிகளிடம் சிக்கவைக்கின்றது. இப் பிரிவு மற்றய இரு சிறுமியரையும் பாதித்த போதிலும் அதனையும் மீறி தமது இலக்கை நோக்கி பயணிக்கின்றனர். இது அவர்களின் விடாப்பிடியான விருப்பத்தைக் காட்டுகிறது. அந்த விருப்பமே அவர்களை சோர்வடையாமல் தொடர்ந்தும் பயணிக்க வைக்கின்றது. இதேபோல் தான் அரச அதிகாரிகளிடம் மீண்டும் சிக்கிய போதிலும் தனது சகோதரிகளைக் காட்டிக் கொடுக்காது செல்லும் அச் சிறுமியின் செயல் எமக்கு முன் மாதிரியாய் படிப்பினையாய் அமைந்திருந்தது .
அதிகாரிகள் திட்டமிட்டு தேடியும் அவர்களிடம் அகப்படாமல் சமயோசிதமாக தப்பித்துச் செல்லுகின்றனர். ஒரு செயலில் எமக்கு உள்ள விருப்பமும், தன்னம்பிக்கையுமே அச் செயலில் எம்மை வெற்றியடையச் செய்யும் என்பதே இங்கே கிடைத்த செய்தியாகும்.
எத்தனை காலம்தான் அடிமையாக வாழ்வது? ஒரு முறையேனும் நம்மை எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டாமா? என எண்ணுகின்றார் போல அந்தத் தாய். தன் பிள்ளைகளைக் காணும் ஆர்வம் அவரின் பயத்தை விரட்டுகின்றது. தன் பிள்ளைகளைத் தேடும் அதிகாரிகளை எதிர்நோக்கி செல்கின்றார். தோளில் நீண்ட தடியுடன் தன்னை எதிர்கொள்ளும் தாயைக் கண்டு அதிகாரி பின்னோக்கி நகர்கின்றான். இக் காட்சி சுவாரஷ்யாமாக இருந்த போதிலும் எதிர்ப்பை வெளிப்படுத்தாத வரைக்கும்தான் அடக்குபவர்கள் பலமானவர்கள் என்ற ஆழமான கருத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
இப் படமானது குறிப்பிட்ட ஒரு இனத்தவர்கள் அழிக்கப் படுவதை வெளிப்படுத்துவதாக உள்ளபோதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் அழிக்கப் படுவதையே காட்டுகின்றது. அதேபோல் அச் சிறுமிகளின் குடும்பத்திலும் பெண்களையே கட்டுகின்றனர் . அழித்தலை செய்பவர்களாக ஆண்கள் காட்டப்பட்டுள்ளனர்.
இசையும் உடைகளும் அக்கால மக்களின் வாழ்வினை அறிய உதவுகின்றது .
முடிவு சந்தோஷமாக அமைந்த போதும் மனதில் துன்பமே எஞ்சி நிற்கின்றது. மீண்டும் ஒரு சிறுமி இராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டது மற்றய இரு சிறுமிகளும் தாயை அடைந்த சந்தோஷத்தை தொலைத்துவிடுகிறது.
இதனால் 1931 இல் மேற்கு அவுஷ்திரேலியாவில் அவ்ரோஜினல் பழங்குடி மக்களுக்கு நடந்த கொடுமையை எடுதுக்காட்டும் இப் படமானது கண்களில் கண்ணீரையும் மனங்களுக்கு சுமையையுமே தந்துநிற்கின்றது .
கே. விறிகங்கா ( கலைப்பிரிவு மாணவி அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயம்) #
 3.
இத் திரைப்படத்தைப் பார்க்கும் போது சொல்ல முடியாத ஒரு உணர்வு என் மனதைக் குடைகிறது. ஆரம்பம் முதல் முடிவு வரை உணர்வு பூர்வமானதாகக் காணப்படும் இப் படத்தினைப் பார்க்கையில் எனக்கு எங்கள் பிரதேசத்தில் நடந்த சம்பவமே கண்முன் தோன்றுகின்றது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் அடித்தட்டு மக்களை எவ்வாறு பார்க்கின்றனர் என்பதற்கு இப் படம் சான்றாக உள்ளது. 1931 இல் அவ்ரோஜினல் பழங்குடி மக்கள் எதிர் கொண்ட பாரிய பிரச்சினையை என்னால் உணரமுடிந்தது. இவ் இனத்தை அழிக்கும் நோக்குடன் சிறுவர்களை அழித்து வரும் ஆட்சியாளர்களால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் இழுத்துச் செல்லப் படுகின்றனர். சிறுவர்களோ அவர்களிடம் இருந்து தப்பி பல்வேறுபட்ட துன்பஙகளை அனுபவித்து, தங்களில் ஒருவரை மீண்டும் அவர்களிடம் பறிகொடுத்து ,பல மைல் துரத்தினை கால் நடையாகக் கடந்து தம் குடும்பத்தினரிடம் வந்து சேர்கின்றனர்.
இது போன்றே எமது தேசத்திலும் பிளைளைகள் பிடிக்கப்பட்டார்கள். போரில் கொல்லப்பட்டார்கள். இன்றும் கணாமற் போகின்றார்கள். இனந்தெரியாதோரால் கடத்தப்படுகின்றார்கள். முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கல்.
அவுஷ்திரேலியாவிலும் அவ்ரோஜினல் இனத்தவரை அழிக்க வேண்டும், அவர்களுக்கான உரிமைகள் பரிக்கப்பட வேண்டும், தமது இனம் மட்டுமே வாழ வேண்டும் என்பதே ஆளும் வர்க்கத்தினாரின் நோக்கமாக உள்ளது .
இரு இடங்களிலும் இன அழிப்பே அடிப்படையான நோக்கமாக உள்ளது. இதனாலோ என்னவோ இப்படத்தில் பிள்ளைகளும், பிள்ளைகளை இழந்த குடும்பத்தினரும் படும் துன்பங்கள் எமது பிரதேசத்தில் நாம் பட்ட துன்பங்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் பட்ட வேதனை என்பவற்றை நினைவுபடுத்தியது .
நாம் அடைந்த துன்பம் போன்று, எமக்குள்ள பிரச்சினைகள் போன்று வேறு இடங்களிலும் இருந்துள்ளது என்பதை இப் படம் மூலமாக அறிந்து கொள்ள முடிகின்றது.
இப் பிரச்சினைகளை இல்லாமற் செய்ய வேண்டுமானால் அடக்குமுறை ஆட்சி முற்றாக அழிய வேண்டும். அனைவரும் சம நோக்குடன் மதிக்கப் படல் வேண்டும். இன, மத, மொழி, சாதி பேதங்கள் அழிந்து எல்லோரும் சம உரிமைகளுடன் இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ச.லோஜினி (தரம்-11 அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயம் )
திரைப்படம் பற்றிய மேலதிக குறிப்புகளை வாசிக்க.. http://www.imdb.com/title/tt0252444/ http://en.wikipedia.org/wiki/Rabbit-Proof_Fence_%28film%29
Trackback(0)
 |