இளமையும், முதுமையும் மனிதருக்கு மட்டுமல்ல பொருட்களுக்கும்தான் என்று எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
இரவில் நான் படித்துக் கொண்டிருந்தேன்.
திடீரென ஏதோ சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தேன்.
அலுமாரிக்கு மேலிருந்த குடை கீழே விழுந்திருந்தது. நான் பார்ப்பதை அறிந்ததும் பேசவாரம்பித்தது.
திரும்பிப் பார்த்தேன்.
அலுமாரிக்கு மேலிருந்த குடை கீழே விழுந்திருந்தது. நான் பார்ப்பதை அறிந்ததும் பேசவாரம்பித்தது.
'நான் பிறந்த இடம் தாய்லாந்து. பல வறிய பெண்களின் இரவு பகலான உழைப்பின் பின் நாங்கள் உருவானோம். எங்களில் பலர் பல்வேறு நாடுகளுக்கும் அனுபப்பட, நான் இலங்கைக்கு இறக்குமதியானேன். அங்கு இங்கு என்று அலைந்து கடைசியாக கொழும்பில் ஒரு கடையில் தொங்கினேன். ஆனந்தமாகக் காற்றில் ஆடி அசைந்தபடி தெருவால் வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
ஒருநாள் உன் அம்மாவும், தங்கையும் கடைக்கு வந்தார்கள். உன் தங்கைக்கு என்னைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விட்டது. பேரம் பேசி கடைசியில் 100 ரூபாவுக்கு உன் அம்மா என்னை வாங்கினார்.
அன்று முதல் நான் உன் குடும்பத்தை வெயிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாத்து வந்தேன். ஆள் மாற்றி மாற்றி என்னைத் தூக்கிக்கொண்டு போவார்கள்.
காலப்போக்கில் நான் பழசாகிப் போனேன். இப்போது கடைகளில் என்னைவிட அழகான, பல வர்ண, சிறிய குடைகள் தொங்கத் தொடங்கின. பார்ப்பதற்கு அவை மிக கவர்ச்சியாகவும் இருந்தன. அவற்றை விரிப்பதற்கு கூட புதிய முறைகள் வந்துவிட்டன.
எனது நாள் நெருங்கிவிட்டது என நான் அறிந்து கொண்டேன். மிகவும் வேதனையடைந்தேன்.
நான் பயந்ததைப் போலவே ஒருநாள் என்னை இந்த அலுமாரிக்கு மேல் தூக்கிப்போட்டுவிட்டார்கள். எனக்குப் பதிலாக இளமை ததும்பும் புதிய குடையை கடையிலிருந்து கொண்டு வந்து விட்டார்கள்.
என்னைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் வளைந்துவிட்டன. என்னை தூசு மூடத் தொடங்கிவிட்டது.
இன்றோ நாளையோ என்னைத் தூக்கிக் குப்பையில் வீசப் போகிறார்கள். எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து சேர்ந்து தொண்டு செய்த நான் எந்த அடையாளமுமின்றி மண்ணிற்குள் போகப் போகிறேன்."
குடையின் சோகக் கதையைக் கேட்ட பின் எனக்கும் கவலை வந்தது. யாருக்காவது நாங்கள் தேவைப்படும்வரையில்தான் எங்களை நன்றாகக் கவனிப்பார்கள். எப்போது எங்களிமிருந்து மற்றவர்களால் எதிர்பார்க்கப்படும் பயன் கிடைக்காமல் போகிறதோ அப்போது எங்களைத் தூக்கியெறிந்துவிடுவார்கள் என்பதை குடையின் கதை மூலம் தெரிந்து கொண்டேன்.
- உதயகலா (வகுப்பு 11, யோகசுவாமி சிறுவர் இல்லம்) 07/2005
Trackback(0)
 |