உங்கள் உதவி PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஒரு குழந்தையின் வளர்ப்பு எவ்வளவு பொறுப்பானதும், கடினமானதும் என்று ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தெரியும். அருகில் இருந்து கவனிப்பவர்களும் இதனைப் புரிந்து கொள்ள கூடும். தாய்மை அன்பும், குடும்ப அரவணைப்பும் இன்றி, குழந்தைப் பருவத்திற்கேயுரிய ஆனந்தம் இன்றி, அடுத்த நேரத்திற்கு என்ன சாப்பிடக் கிடைக்கும் என்பது தெரியாமல் இல்லங்களில் அடங்கிப் போயிருக்கும் இந்தக் குழந்தைகளை ஒரு நிமிடமேனும் மனக்கண்ணில் நிறுத்திப் பாருங்கள்.
அள்ளி அணைத்து முத்தமிட அம்மா இல்லை. ஓடிப் பிடித்து விளையாட அப்பா இல்லை. சண்டை பிடிக்கச் சகோதரர்கள் இல்லை. சுகம் விசாரிக்க உறவினர் இல்லை. நிரந்தரமாகத் தங்க வீடு இல்லை. மகிழ்ச்சி இல்லை. குதுகாலம் இல்லை. எவ்வளவு கொடுமை....

குழந்தைகளின் இந்தத் துயர நிலமைக்கு காரணங்கள் நிறைய. யுத்தம், அரசு, பொருளாதாரம், சமூகம், உலகம், நாங்கள்.....

தம் குழந்தைகளாக சக குழந்தைகளையும் நேசிப்பவர்களையும், சமூகப் பொறுப்புள்ளவர்களையும் இந்தக் குழந்தைகளின் வாழ்தலை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

குழந்தைச் செல்வத்திற்கு ஏங்கி ஆனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது வருந்தும் பெற்றோர்கள் இந்தக் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் ஆகலாம்.

இந்தக் குழந்தைகளையும் சொந்தப் பிள்ளைகளாகவே கருதி இங்கிருந்தே அவர்கள் அங்கு வாழ்வதற்கான உதவிகளைச் செய்யலாம்.

குழந்தைகள் வளர்ந்து தமது சொந்தக் காலில் நிற்கும் பலம் வரும்வரை அவர்கள் கல்விக்கான பொறுப்பெடுக்கலாம்.

அந்தக் குழந்தைகளின் பசியை எமது பசியாக எடுத்து அவர்களின் உணவுக்கு உதவலாம்.

பெற்றோர், சுற்றம், குடும்பம், பாதுகாவலர் எதுவுமின்றி திடீரென்று தன்னந்தனியாக விடப்பட்ட பிள்ளைகளுக்கு உதவ உளவியல் பயிற்சியாளர்களை நியமிக்கலாம்.

குழந்தைகள் தங்க, படுக்க... அடிப்படை வசதிகளைக் கொண்ட கட்டடிங்கள் அமைத்துக் கொடுக்கலாம்.

சிறையாகிவிட்ட இல்லங்களிலிருந்து வெளியே போய் வெளியுலகத்தையும் பார்த்துவர உதவலாம்.

உதவுவதற்கு வழிகள் பல.

தனியே மனிதாபிமானத்துடன் வழங்கும் உதவிகள் அல்ல இவை. இந்தக் குழந்தைகள் அடிமைகளும் அல்ல. நன்றி சொல்லியே தாழ்ந்து போக வேண்டியவர்களும் அல்லர். இந்த மண்ணில் வாழும் மனிதருக்குரிய அனைத்து உரிமைகளும் இந்தக் குழந்தைகளுக்கும் உண்டு.

தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் அர்த்தமான வாழ்வை இந்தக் குழந்தைகள் வாழ்வது எமதும் பொறுப்புத்தான்.

உதவுங்கள்.
 


பேசும் படம்

0409.jpg

பேசும் படம்...

3109.jpg