| கடிதங்கள் - 2004 |
|
|
எமது இல்லத்தின் கடந்த 13 ஆண்டுகளில் தொடராக உதவி வருவது உதவி இணையமே. ஒரு காலகட்டம் வரை படிப்புக்குப் பாடசாலை, இருப்புக்கு இல்லம் என நடமாடிய எமது குழந்தைகளை வெளியுலகிற்கு சுற்றுலா மூலமாகக் கொண்டு வந்ததும் உதவி இணையமே. கடந்த ஆண்டில் எமது இல்லக் குழந்தைகளுக்கு மட்டுமாக கொழும்பு மாநகரைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. இவ்வருடப் பாடசாலை விடுமுறை நாளில் உதவி இணையத்தினால் உதவி பெறும் 5 இல்லங்களையும் சேர்ந்து ஏறக்குறைய 200 குழந்தைகளை ஒன்றிணைத்து ஒருநாள் சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. இதன் மூலம் அறிவு விருத்தி மட்டுமல்ல உளவிருத்தியும் ஏற்படுகின்றது. குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டுப் பேசி அந்நியோன்னியமாகின்றனர். சந்தோசமடைகின்றனர். இனிவரும் காலங்களில் இச் சுற்றுலாக்கள் குறைந்தது 3-6 நாட்கள் கொண்டதாக அமைய வேண்டும் எனும் அன்பான வேண்டுகோளை முன் வைக்கின்றோம். - விபுலானந்த இல்லம், (இலங்கை), 25.05.04 23.04.2004இல் நீங்கள் உதவி செய்யும் இல்லங்களைச் சேர்ந்த 200 மேற்பட்ட குழந்தைகளுடன் நீங்கள் ஒழுங்கு செய்த சுற்றுலாவை காலை 7.30 மணிக்கு ஆரம்பித்து மாலை 8.00 மணிக்கு மிகவும் பிள்ளைகளின் சந்தோசத்துடனும், சுற்றுலா பற்றிய அவர்களது 3 நாட்களுக்கு மேற்பட்ட பயண விருப்புடனும் முடித்துக் கொண்டோம். எமது பிள்ளைகளுக்காக அமைக்கப்படப்போகும் கட்டிடத்திற்கான செலவு மதிப்பீட்டை அனுப்புகின்றோம். பிள்ளைகளின் அத்தியாவசிய நலன் கருதி இதனை விரைவில் அமைக்க உதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம். - மாணிக்கவாசகர் இல்லம், (இலங்கை), 26.04.04 தற்போது இல்லத்தில் 34 பிள்ளைகள் உள்ளனர். அவர்களது சகல தேவைகளும் இல்லத்தினாலேயே பூர்த்தி செய்யப்படுகின்றது. இவற்றை நிவர்த்தி செய்வதற்கு எம்மிடம் போதிய நிதியில்லை. பொருளாதாரச் சுமை காரணமாக இல்லத்திற்கு உதவி செய்பவர்களது எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒரு பிள்ளைக்கு ஒருநாள் செலவாக சராசரி 100,00 ரூபா தேவைப்படுகின்றது. 34 பிள்ளைகளுக்கும் ஒரு மாதத்திற்கு 102000,00 ரூபா செலவாகின்றது. இச் செலவை நீங்கள் கருத்தில் கொண்டு உங்களால் மாதாந்தம் தரப்படும் நிதியைக் கூட்டித் தருமாறு வேண்டுகின்றோம். - யோகசுவாமி இல்லம், (இலங்கை), 18.04.04 வணக்கம். நீண்ட நாளாகியும் தங்கள் முயற்சிக்கு எம்மால் முடிந்த பங்களிப்பை நல்குவோமென்றால் முடியாதிருக்கிறது! தங்கள் இணையத்திற்கு வரும்போதெல்லாம் ஒரு இனம் புரிந்த குற்றவுணர் மேலிடுகிறது, 'ஒரு நாளுக்கு 1 யூரோ பெரிய காசா?' எம்மை ஓங்கியோங்கி அறைகிறது. என்றபோதும் ஓட்டை விழுந்த கப்பல் போன்ற எமது நிதிநிலை எதையும் இலேசாக எடுக்கப் பழகிவிடுகிறது, என்ற போதும் கூடியவிரைவில் எம்மால் முடிந்ததைச் செய்கிறோம். கூகூகூகூடிடிடிடியயய ஒவ்வொரெழுத்துக்கும் ஒவ்வொரு மாசமென எண்ணவேண்டாம். நாம் வன்னிக் காட்டுக்குள் அகதியாகி அலையும் அன்னையையும், கண்ணிழந்த சகோதரி குடும்பம், சுயமா இரண்டைப் பெத்துப்போட்டு ... எல்லாத்துக்கும் 1050,-யூரோ தாம் ஆதாராம். என்ற போதும் இவ்வுதவி; செய்வது எமது கடமை. அதை நிச்சயம் செய்கிறோம். - ப.வி.சிறீரங்கன், (ஜேர்மனி), 01.03.04 தங்களின் உதவியினால் சமையல் அறையில்லாப் பெருங்குறை எமக்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சமையல் அறையில் இருந்து உணவு உண்டு மகிழ்கின்றார்கள். அதோடு தாங்கள் குழந்தைகளின் உணவுத் தேவையில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் முகமாக மாதாந்தம் அனுப்புகின்ற பணத்தொகைகள்; அனைத்தும் சீராக குழந்தைகளின் பராமரிப்புச் செலவில் செலவிடப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத் தருகின்றோம். 28.01.2004 அன்று ரூபாய் 20,000 (இருபதாயிரம் மட்டும்.) பழுகாமம் விபுலானந்தர் சிறுவர் இல்ல செயலாளர் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றோம். அவரிடம் அத்தொகைக்குரிய பற்றுச் சீட்டினையும் கொடுத்துள்ளோம். இவ்வாறு தங்கள் உதவி மூலம் கிடைக்கப் படும் பணத்தொகை பயனுள்ள செலவுகளுக்கே செலவிடப்படுகின்றது. - யோகசுவாமி இல்லம், (இலங்கை), 10.02.04 கடந்த புதுவருடத்தை முன்னிட்டு நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சிறுவர்களின் சந்தோசத்திற்காக ஒரு கொண்டாட்டம் நடாத்தினோம். அதில் உதவிக்கு எல்லோராலும் இயன்றளவு நிதி கொடுக்கும்படி சொல்லிவிட்டு, இரு சிறுவர்களிடம் நிதி சேகரிக்கும் பொறுப்பைக் கொடுத்தோம். அவர்கள் எதை விளங்கிக் கொண்டார்களோ தெரியவில்லை. ஆனாலும் இந்தப் பணம் ஊரிலுள்ள சிறுவர்களுக்குத்தான் என்று சொன்னதும் சந்தோசமாக நிதியைச் சேர்த்தார்கள். (350,- சுவிஸ் பிராங்குகள்) - செ.தேவி (சுவிஸ்), 27.01.04 |