கடிதங்கள் 2003 அச்சிடுக மின்னஞ்சல்
உங்கள் நல்ல செயற்பாடடைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் இணையம் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
- எஸ்.கருணலிங்கம், changetheirlife.org, (இங்கிலாந்து), 11.12.03

உங்கள் செயற்பாட்டினால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். உங்களுடன் இணைந்து எனது குறைந்த நேரத்தையும், நிதியையும் பயன்படுத்த விரும்புகின்றேன். எனக்குத் தேவைப்படும் தகவல்களையும், விபரங்களையும் அனுப்பி வையுங்கள்
- ஜெயதேவா, (இங்கிலாந்து), 04.12.03


அறவாளி இல்லத்துப் பிள்ளைகளின் நிலைமைகள் சில மாதங்களுக்கு முன்னர் அறிந்து அந்தப் பிள்ளைகளுக்கு உதவி புரியவேண்டும் என்கின்ற அக்கறையிலும் அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது நடந்துவிடப் போகின்றதோ என்கின்ற துடிப்பிலும், உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டுமென்கின்ற பொறுப்பிலும் பெண்கள் அமைப்பான சூரியாவிடம் சென்று உதவி கோரும்படி உதவியில் எழுதியிருந்தேன். உதவி நண்பரின் சூரியா பற்றிய தகவல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிற்று. அதுமட்டுமன்றி செப்ரம்பர் மாதம் மட்டக்களப்புக்குச் சென்றிருந்த நேரம், உதவி நண்பர் குறிப்பிட்ட சூரியாவில் பணிபுரியும் பெண்ணிடம் தனியாகவும் நண்பர் முன்னிலையிலும் இதுபற்றிக் கேட்டபோது அவரிடமிருந்து பொறுப்பான பதில் கிடைக்கவில்லை. மாறாக உதவி என்பவர்கள் யார் என்று தமக்கு சரியாகத் தெரியாது, எல்லாப் பிரச்சனைகளிலும் சூரியா தலையிடமுடியாது, அந்தப் பிள்ளைகளுக்கு ஒன்றும் பாரதூரமாக நடக்கவில்லைத்தானே, அத்துடன் தான் சூரியாவின் மேலிடம் கலந்துகொள்ளும் சந்திப்பின்போதும் ஒருமுறை இதுபற்றிக் கதைத்ததாகவும் அங்கு இதுபற்றிய நடவடிக்கை எடுப்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை என்றும் கூறினார். பிள்ளைகளுக்கு ஏதாவது பாரதூரமாக நடந்த பின்னர்தான் சூரியா தலையிடுமா? தலையிட்டிருக்குமா? இதுவரை நடந்தவைகள் போதாதா? என்று நான் கேட்டதற்கும் எந்தவொரு பொறுப்பான பதிலும் இல்லை.

சூரியா ஒரு பெண்கள் அமைப்பு. சிறுமிகளின் நிலை அறிந்து உதவ முன்வரும் என்றே நினைத்தேன். ஆனால் உதவாதது மட்டுமின்றி இந்தப் பிரச்சனை பற்றி முற்றாக உதாசீனம் செய்துவிட்டது என்னை வேதனைப்படுத்தியது.
- நிருபா, (ஜேர்மனி), 28.11.03


உதவி இணையத்திலிருந்து உதவிகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் இல்லங்களிலுள்ள குழந்தைகளை ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களை மனம்விட்டு மற்றவர்களுடன் அன்பாகப் பழகிப் பேசி உறவாட வைக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்ட சுற்றுலா நிகழ்வானது (26.10.2003) உண்மையிலேயே எதிர்பார்த்த உரிய இலக்கை அடைந்தமையை நினைக்கும்போது எமதுள்ளம் பூரிப்பால் நிறைவடைகின்றது.

பல்வேறு அனர்த்தங்களின் வடுக்களைச் சுமந்து வாழும் எமது குழந்தைகளை எமது இல்ல நடைமுறைகள் எவ்வளவு மாற்றினாலும் இவ்வாறான சுற்றுலா, ஒன்றுகூடல்கள் அடிக்கடி இடம்பெறுதல் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் எனத் திடமாக நம்புகின்றோம். ஏனெனில் எமது குழந்தைகள் காட்டிய மகிழ்ச்யை யசியின் புகைப்படங்கள் புலப்படுத்தும் என நம்புகின்றோம்.

வெறுமனே படிப்பென்ற வலைக்குள் அல்லாது பல்வேறு துறைகளிலும் எமது குழந்தைகளை ஈடுபடுத்தும் போது எமது நோக்கத்தை, இலக்கை அடைய முடியும். இம் முயற்சிகளுக்கு உதவும் அனைவருக்கும் எமது நன்றிகள்.
- விபுலானந்த இல்லம், (இலங்கை), 15.11.03


எமது இல்லத்தில் நாங்கள் எந்தவிதத் தேவையையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாமல் அல்லலுற்றபோது, இந்தக் கஷ்ர நிலமையைப் புரிந்துகொண்டு, அடிப்படைத் தேவையாகிய உணவையேனும் சீராக வழங்குவதற்கான அடித்தளத்தையிட்டுத் தந்து இதற்காக நீங்கள் தொடர்ந்து உதவிக் கொண்டிருப்பதையிட்டு நாங்களும் பிள்ளைகளும் நிம்மதியடைகின்றோம்.

எமது பிள்ளைகளின் உளவியல் ரீதியான பாதிப்புகளைப் புரிந்துகொண்டு அவர்களின் சோகச் சுமைகளை இறக்கி வைப்பதற்கு தங்கள் இணையத்தை தளமாகத் தருவதினால் எமது பிள்ளைகளின் ஆக்கங்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கின்றோம்.

எமது பிள்ளைகள் சிறந்த திறமையுடையவர்கள். அவர்களின் அறிவு, திறமை, ஆற்றலை வளர்ப்பதற்காக எமதில்லத்திற்கு கணணி தேவைப்படுகிறது. அத்துடன் எமது பிள்ளைகள் வெளிநிகழ்வுகள், உலக நடப்புகளை அறிவதற்கான எந்தவொரு சாதனங்களும் எம்மிடம் இல்லை. அதனால் முடியுமானால் தொலைக்காட்சி சாதனமொன்றையும் பிள்ளைகள் சார்பாக வேண்டுகிறோம்.
- மாணிக்கவாசகர் இல்லம், (இலங்கை), 27.10.03


தற்போது இல்லத்துக்கு கிடைக்கின்ற நிதி மிகக் குறைவடைந்து உள்ளது. காரணம் எமது ஈழத் திருநபாட்டில் உதவுவோர் பொருளாதாரச் சுமைகளினால் நலிந்துவிட்டார்கள். எனவே தங்களைப் போன்றவர்களின் உதவியால்தான் இவைகளை ஈடுசெய்ய முடியும் என்பதைக் கூறி எங்கள் அத்தியாவசியத் தேவையான மாதாந்த உதவியிலும் உங்கள் கவனம் அமைய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
- யோகசுவாமி இல்லம், (இலங்கை), 25.10.03


எமது தேச விடுதலையை நோக்கமாக கொண்ட போராட்டத்தில் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதற்கு பொறுப்பாளராக இருந்திருக்கின்றோம் இருந்து வருகின்றோம். ஆகவே இந்த போராட்டத்தினால் வரும் விளைவுகளுக்கும் நாமே பொறுப்பாளர்கள் என்பதையும் உணர வேண்டும். குறிப்பாக போராட்டத்தினால் வரும் நன்மை, தீமையான பக்கங்களுக்கும் நாமே உரிமையுடையவர்களாகின்றோம். இதனை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் தீமையான பக்கங்கள் என்பது பற்றி எடுத்துக் கொள்கின்ற போது நேரடியான தனிபட்ட துயரங்களை எம்மால் உணரமுடிகின்றது. அதற்கு அப்பாற் சென்று பார்த்தால் யுத்தகாலத்தில் பெற்றோர்களையும், உறவினர்களையும், சமூதாய சிக்கல்களினால் உறவுகளையும் இழந்து சிறுவர்கள் ஆதரவற்றவர்களாக ஆக்கப்படுகின்ற கொடுமையான நிலமைகளுக்கு நாமும் காரணமாக இருக்கின்றோம் என்பதை உணர மறந்து விடுகின்றோம். எமக்கு என்று இவ்வாறு நிலமைகள் உருவாகும் போதுதானா நாம் சிலவற்றை சிந்தித்து பார்ப்பதற்கு முன்வருவோம்? இந்த மனோபவத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு அந்த சிறுவர்களுக்காக நாம் சிறு ஆதரவையும், நிதியையும் வழங்குவோம். அவர்ளை தன்மானம் உள்ளவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் உருவாக்குவது நமது கடமை, பொறுப்பு என்பதை புரிந்து கொள்ள முன்வருவோம். இந்த சிறுவர்கள் அவர்கள் வாழ்தலுக்கான ஆதரவையும்,  நிதியுதவியை எம்மிடம் இருந்து எதிர்பார்ப்பதற்கும், கோருவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதையும் கருத்திற் கொள்வோம். பெற்றோர்களாகிய நாம் எமது குழந்தைகள் குறித்து சிந்திக்கின்ற போது இந்த சிறுவர்கள் குறித்து சில நிமிடங்கள் சிந்தித்து பார்த்து செயற்பட முன்வருவோம். இந்த உதவியை குறைந்த பட்ச மனிதநேய நோக்கிற் கொண்டு செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முன்வருவோம்.

நாம் இந்த சிறுவர்களுக்காக காட்டுகின்ற -ஆதரவு- -நிதி உதவி- அவர்களை சென்றடைக்கின்றதா? அவர்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கு அப்பாற் சென்று அவர்களிடம் எமது கருத்தியல் சிந்தனைகளை நோக்கங்களை கோருவதை விட்டு விடுவோம். அவர்கள் தமது அடிப்படை வசதி வாய்ப்புகளேயின்றி இருப்பதை உதவி இணையப்பக்கத்தில் இருந்து அறிந்து கொள்கின்றோம். அவ்வாறு இருக்கும் போது இதில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து நாம் கோருவதோ அல்லது எதிர்பார்ப்பதோ மனிதநேய பண்புக்கு முரணானது என்பதை கருத்திற் கொள்வோம். கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதை மனதில் நிறுத்துவோம்.

சமூக அக்கறையிருந்தும் அனேகமானோர் இந்த சிறுவர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்குகின்றார்கள். அதாவது தாம் கொடுக்கும் நிதி அவர்களை சென்றடைகின்றதா? அவர்களது தேவைகள் உண்மையிலே நிறைவேற்றப்படுகின்றனவா? என்ற தயக்கங்கள் பலரிடம் இருக்கின்றது. இது அவர்கள் பக்கத்தில் நியாயமானதும் கூட. இன்றும் குழுக்கள், நிறுவனங்களின் செயற்பாடுகள் தவறான முறையில் செயற்பட்டுக் கொண்டு இருப்பது இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கும் இல்லை. நிதி பங்களிப்பு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல், உதவியை ஏனையவர்களுக்கு அறிமுகப்படுத்துதல், மொழிபெயர்ப்பு செய்தல்... என நாம் ஒவ்வொருவரும் உதவியில் ஏதோ ஒரு வழியில் இணைந்து கொள்கிறோம். ஆக உதவி என்பது எங்கள் எல்லோரினதும் இணையம் என்றாகிறது. இந்த செயற்பாடானது தவறானதாக அல்லாதும், செயற்பாடுகளில் தவறுகள் ஏற்படாதவண்ணமும் இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் என்பதையும் கவனத்திற் கொள்வோம். நாம் இதில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்ற உணர்வை தள்ளி வைத்துவிடுவோம். நிதியுதவி சிறுவர் இல்லங்களுக்கு கிடைக்கின்றதா? அவர்களது அடிப்படை வசதிகள் அந்த நிதியினால் நிறைவேற்றப்படுகின்றதா என்பதை ஒவ்வொரு தடவையும் உறுதிப்படுத்திக் கொள்வோம்.

உதவி இணையத்தைப் பார்க்கின்ற போது அதில் சிறுவர் இல்லங்களின் தங்கியிருக்கும் சிறுவர்களின் நிலமைகள், விபரங்கள், அடிப்படை தேவைகள்ää இல்லங்களிடம் இருந்து வந்த கடிதங்கள், படங்கள், ஆக்கங்கள்,  கட்டுரைகள் நிதி தொடர்பான அறிக்கை,  இவை மூலமும் அவர்களது வாழ் நிலமைகளை அறியக்கூடியதாக இருக்கின்றது. இது சிறு வழி முறைதான். நேரே போய் பார்க்கின்ற போதுதான் உண்மையான ஏனைய பக்கங்கள் எமக்கு தெரியும் என்பது வேறு. அங்குள்ள நிலமைகளை வெளிப்படுத்துவதற்கான படிமங்களாக இவற்றை கருத்திற் கொள்வோம். இந்த படிமங்களை வெளிப்படுத்துவதனூடாக உதவி இணையம் நாமே நேரடியாக அவர்களுடன் தொடர்பு கொள்வதும், பங்களிப்பு செய்வதுமான உணர்வை எனக்கு ஏற்படுத்துகின்றது.
- வளர்மதி, (சுவிஸ்), 15.10.03


தமிழ் சமூகத்தில் உதவியின் செயல் முக்கியமானதாகும். உதவியைக் காப்பாற்றுவது எமது கடமையாகும்.
- ப.வி.சிறீரங்கன், (ஜேர்மனி), 12.10.03


தங்களது பணி சிறக்க வாழ்த்துவதுடன், நாங்கள் எழுதும் இரண்டாவது மடல். மேலும் தங்கள் முயற்சி தொடர்பாக எங்களது ஆலோசனைகளை இதில் தெரிவிக்க முனைகிறோம்.

1. சிறுவர் பராமரிப்பு முயற்சி என்பது மிகப் பெரிய தொண்டு. இத்தொண்டு குறுகிய கால, நீண்ட கால செயற்திட்டங்களை உள்ளடக்கியதாக அமையப்பெறும்.

1.1 குறுகிய காலச் செயற்;திட்டம்:-
பொதுவான பராமரிப்புச் செயற்திட்டமாக இது இருக்கும். அதாவது அவர்களது பௌதிக இருத்தலையும், அத்ததியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறும் அமைவுபெறும்.

1.2 நீண்ட காலச் செயற்திட்டம்:-
இது தீவிரமான பொது வளர்ச்சித் திட்டத்துடன் தொலைநோக்கு எண்ணங்கொண்ட பொது உளவியல் கருத்துக்களை உள்ளடக்கிய திட்டமாகும். அதாவது அநாதை என்ற சொல்லை மட்டும் பயன்படுத்தாது விடுவதன் ஊடாக தற்காலிகமாக தப்பித்துக் கொள்ளும் எண்ணப்பாடுகளிலிருந்து விடுபட்டதாய்- இந்த உளவியல் பிரச்சினைக்கான நிரந்திரத் தீர்வை எட்டும் செயற் திட்டங்களை வரவு செய்யும் திட்டமாகும்.
சமூகப் பிரக்ஞை கொண்ட அறிவுஜீவிகள் மட்டத்தினரிடமிருந்தும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் பட்டறிவாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட பல்வேறு கருத்துக்களைப் பொதுமைப்படுத்தியவாறு சூழல்களுக்கேற்ப தயாரித்து நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும்.

..... சிறார்களை நீண்ட காலத்தில் தன்னம்பிக்கை மிக்கவர்களாக, ஆற்றலாளர்களாக, சமூக ஈடுபாட்டாளர்களாக, கூட்டுச் செயற்திட்ட திறமையாளர்களாக உருவாக்கக் கூடிய வாய்ப்பை கொண்டிருக்கும்.

..... இச் செயற்பாடுகள் முறைசார் கல்வி நிறுவனங்களுக்கூடாக வழங்கப்பெறும் அறிவூட்டல் முயற்சிகளிலிருந்து கிடைக்கப் பெறாது. இவை இவர்கள் தங்கி வாழ்ந்து வளர்ந்து வரும் - அதாவது இவர்களைப் பராமரித்து வரும் - அந்த நிறுவனங்களினூடாக நடைமுறைப் படுத்தப்படும் முறைசாரா அறிவூட்டல் முயற்சிகளினூடாகவே முழுமைபெறும்.

..... கூட்டாக வளர்ந்து வரும் அரிய வாய்ப்பைப் பெற்ற இச் சிறுவர்களின் வளர்ச்சிக்கு வெறுமனேயே நடாத்தப்படும் கூட்டுப் பிராத்தனைகளால் எவ்வகையிலும் பயன்கள் கிடைக்கப்பெறாது.

2. தங்களால் முதலாவது செயற்திட்டம் நடைமுறையாவது வெளிப்படையாகத் தெரிகிறது. இரண்டாவது நடைமுறை பற்றி தாங்கள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டுமென்பது எங்களது தாழ்மையான எண்ணம். இதனை நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் எல்லா நிறுவனங்களுக்கும் எடுத்த எடுப்பிலேயே நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியப்படமாட்டாது. ஆக இந்த இல்லங்களிலிருந்து ஒரு இல்லத்தை முழுமையாகப் பொறுப்பேற்று, அதற்குத் தகுந்த பல்துறை அறிவுகொண்ட ஒருவரை பொறுப்பாளராக நியமித்து, செயற்திட்டங்களை செவ்வனே நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு ஆசிரியரையும் நியமிப்பதினூடாக ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவ தென்பது இழுக்கு

3. நீண்ட போராட்டத்தின் பக்கவிளைவுகளில் புரையோடிப்போன பல்வேறு குறைபாடுகளில் ஒன்றாக கையேந்தி வாழும்; மனோபாவங் கொண்ட மக்கள் கூட்டமொன்று எமது சமுதாயத்தில் காணப்படுவதைப் புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இது உழைப்புக்கும் மனித வாழ்வுக்குமிடையிலான உறவு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவென சமூக ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்படுகிறது. இதனை பல்வேறு செயல்திட்டங்களுக்கூடாக மாற்றியமைத்து சொந்தக்கால் - சொந்தப்பலத்தில் வாழும் மக்களாக உருவாக்கும் கடுமையான பணி எம் முன் இருக்கிறது.

ஆனால் பிசிறில்லாத வெள்ளை மனம் கொண்ட, பராமரிப்பு இல்லங்களில் வளரும் சிறார்களுக்கு இவ்வகை எண்ணம் வராதவாறு இலகுவான முறையில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தக்கூடியதாக இந்த இரண்டாவது திட்டம் அமையும்.

மேற்படியாக எமது எண்ணக் கருவை நகல் வரைபாக எழுதியுள்ளோம். தங்கள் பரிசீலனைகளின் பின் இவ்வகையான முயற்சியொன்றைத் தொடர்வீர்களானால் அதற்கான தார்மீக ஒத்துழைப்புகளை வழங்குவோம் என்று கூறி விடைபெறுகிறோம்.
- முகிலன், அருந்தா, இளவேனில், இலக்கியன், (பிரான்ஸ்), 27.08.03


நலன்புரிச் சங்கங்களையோ, உதவி நிறுவனங்களையோ அல்லது இப்படி இயங்கும் எதையும் நான் நம்பியதேயில்லை. தவறான நிறுவனங்களே இதற்கு காரணமாயிருக்கலாம். ஆனால் கதிரொளி... விபுலானந்தா என்று இல்லங்களையும், குழந்தைகளின் படங்களையும் பார்த்தபோது அவை என்னை மிகவும் பாதித்துள்ளன. உலகில் மனிதர்களும், குழந்தைகளும் இப்படியான நிலமையில் வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மிகவும் கவலையாயிருக்கிறது. உங்களால் உதவி செய்யப்படும் இல்லக் கட்டிடங்களும், கிணறுகளும் தொடர்ந்துமிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனால் திரும்ப யுத்தம் தொடங்கினால்... என்னால் நம்பிக்கையீனமாகச் சிந்திப்பதை நிறுத்த முடியவில்லை. ஆனாலும் எங்களால் இந்த நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை நாம் செய்தேயாகவேண்டும் என்பதையும் விளங்கிக் கொள்கின்றேன். சொல்வதை விட செய்வது கஷ்ரம். இந்தக் குழந்தைகளின் முகங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன. அதிகமானோர் உதவியுடன் இணைந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.
- பிரதீபா, (கனடா), 07.08.03


29.01.1993 தொடக்கம் இன்றுவரை பெரும்பாலும் வன்செயலால் பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற 25 சிறார்களை வைத்து பல கஷ்ரங்களின் மத்தியில் பல கடன் தொல்லைகளுடன் பராமரித்துவரும் வேளையிலும், சாப்பாட்டிற்கு வழியில்லாமலிருந்தபோதும் உதவி இணையத்தினூடாக உதவி கிடைத்தது.

தற்போது இச் சிறார்களுக்கு உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம் மற்றும் சகல அடிப்படை வசதிகளையும் வழங்குவதில் பல சிரமங்களை எதிர்கொண்டுதான் நடத்தி வருகின்றோம்.

எமது இல்லத்துக்குப் பல தேவைகள் காணப்படுகின்றது. அவற்றைப் பட்டியலிட்டு தபாலில் அனுப்பி வைக்கின்றோம். எமது இல்ல மாணவர்களில் சிலர் இணையத்திற்கு எழுதிய கடிதங்களையும் தபாலில் அனுப்பி வைக்கின்றோம்.
- மாணிக்கவாசகர் இல்லம், (இலங்கை), 01.08.03


ஈழத்திருநாட்டில் ஏற்பட்ட வன்செயல் கொடுர அனர்தங்களால் பெற்றோர்களை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் சுபிட்சமாக அமைய வேண்டுமென ஈழத்தில் தோற்றம் பெற்று இயங்கிக் கொண்டுவரும் எம் போன்ற இல்லக்குழந்தைகளின் துயரில் உதவியும் பங்கெடுத்துள்ளது.

எங்கள் இல்லத்தில் பிள்ளைகளுக்குச் சமைப்பதற்குரிய சமையல் அறை இல்லாக் குறையினை ஈடுசெய்து தரும் நோக்கில் உதவி எங்களுக்கு 22000 ரூபாயினை முற்பணமாகத் தந்துதவியது. அதைக்கொண்டு நாம் குறிப்பிட்ட வேலைகளை முடித்துவிட்டோம். மீதி உதவியினையும் எதிர்பார்த்திருக்கின்றோம்.
- யோகசுவாமி இல்லம், (இலங்கை), 14.07.03


அன்புடன் பேரின்பம், அருட்குமார்,  பிரபா, மதி, தினகரன், சிவப்பிரியன், நந்தேஸ்வரன், சபேஸ்குமார், குலேந்திரராசா, நவேந்திரன், செல்வப்பிரகாசம், பிரசாத் !

உங்களுடைய சுற்றுலா அனுபவக் கட்டுரை உதவி வெப்பில் வாசித்தேன். நன்றாக இருந்தது. நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்துமுறை உதாரணமாக "நேரான மரங்களைப் பழித்தது ஒட்டகத்தின் கழுத்துக்கள்", "சூரியன் உச்சத்தைத் தாண்டிச் செல்ல முயற்சித்தான். நாங்கள் குருநாகல் மாவட்டத்தைத் தாண்ட முயற்சித்தோம்" வாசிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருந்தது. இன்னும் உங்களின் எழுத்துக்களை வாசிக்க ஆவலாக இருக்கின்றேன். நேரமும் விருப்பமும் இருக்கும்போது உங்கள் வாழ்வு, கற்பனைகள், மற்றும் உங்களுக்குப் பிடித்தமான எந்த ஒரு விடயத்தைப்பற்றியும் எழுதுங்களேன்.
- நிருபா, (ஜேர்மனி), 13.07.03


உங்களைப் போல உதவுபவர்களால்தான் எம் போன்றவர்களால் எமது சமூகத்தில் அநாதரவாக விடப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பணியினைச் செவ்வனே நிறைவேற்ற முடிகின்றது என்பதனை முதலில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மிகவும் வறுமை நிலையில் இயங்கிக் கொண்டிருந்த எமது இல்லத்தினை தூக்கி நிறுத்தி ஓரளவேனும் தலையை நிமிர்த்த உதவியதுஉதவி இணையம். புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகளாகிய நீங்கள் ஆற்றுகின்ற இந்த உன்னத பணியினை நினைக்கும் தோறும் எமது உள்ளங்கள் பூரிப்பால் நிறைவு கொள்கின்றது. இதனால் எமது இல்ல நிருவாகத்தினரும், எமது குழந்தைகளும் என்றும் உதவி இணைய ஏற்பாட்டாளர்களையும், உதவும் உள்ளங்களையும், இணைந்து செயலாற்றும் நண்பர் குழாத்தினையும் மறக்க மாட்டார்கள் என்பதனையும் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றோம்.

மேலும் எமது குழந்தைகளின் தேவைகள் பல. இதுவரையில் எமது குழந்தைகளுக்காக உதவி இணையத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல பாடசாலைப்பாதணிகள், பாடசாலைப்பைகள், குழந்தைகளுக்கான போர்வைகள்ää சைக்கிள்கள், சாரங்கள், வளவினை மண்ணிட்டு நிரப்ப நிதி, கல்விச்சுற்றுலாவுக்கான முழுச் செலவு என்ற உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. எமக்கின்னுமிருக்கும் உடனடித் தேவைகளை உதவியூடாக மிக அவசரமாக நிறைவுசெய்து தருமாறு மீண்டும் அன்பாக வேண்டி நிற்பதுடன் அவை நிறைவு செய்து தரப்படும் என உறுதியாக நம்புகின்றோம்.
- விபுலானந்த இல்லம், (இலங்கை), 10.07.03

முகமறியா நம் சிறார்களுக்காக தாங்கள் தொடங்கியுள்ள பணி பாராட்டுதலுக்குரியது. இது தொhடரப்படவேண்டிய ஒரு தொண்டு. புலம் பெயர்ந்த பின்பும் தம் இலாபத் தேடலில் திருப்தி அடையாமல் மன உளைச்சல்களுடன் அலையுறும் மக்களிலிருந்து வேறுபட்டவர்களாகி ஒரு நற்பணியை ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாராட்டுகள். மதபீடங்களின் வலைக்குள் சிக்குண்டு நாம் வந்த தடங்களை மறக்கும் எம்மவர்களிடமிருந்து இப் பணி தொடர்பாக ஆதரவு தேடல் என்பது மிகக் கடினமான விடயம். உங்களுக்கு தார்மீக ஆதரவை நாம் வளங்குவோம்.
- முகுந்தன், அருந்தா, இளவேனில், இலக்கியன், (பிரான்ஸ்), 25.06.03


நீங்கள் செய்த நன்மைகளையும், உதவிகளையும் நினைத்து எம் மனம் மகிழ்கின்றது. உங்களுடைய முகங்கள் எங்களுக்குத் தெரியாது. எங்கள் முகங்களும் உங்களுக்குத் தெரியாது. எங்களைப் பார்க்க எங்கள் இல்லத்திற்கு வருவீர்களா?
(கதிரொளி சிறுவர் இல்லத்திலிருந்து தேவசுதன், நகுலேஸ்வரன், சதீஸ்காந்தன், ரஜனி, ஞானசவுந்தரி, டெனிஸ்காந்தன், கிரிதரன், யோகேஸ், பிரசன்னா, கயாழினி, விஷ்ணுபிள்ளை, வசந்தகுமார், லவன் ஜேர்மனி தமிழர் கலையக மாணவர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து...)
- கதிரொளி இல்லம், (இலங்கை), 20.05.03


எமது இல்லம் கடந்தகாலங்களில் ஏற்பட்ட வன்செயல் காணரமாக தாய், தந்தையை இழந்த 62 குழந்தைகளை வைத்து பராமரித்து வருகின்றது. இவர்களுக்கு பல தேவைகள் இருந்தது. இதில் அவர்களுக்கு நேரடியாகப் பயன்படக்கூடிய தேவைகளான பாதணி, பாடசாலைப்பைகள், உடைகள், துவிச்சக்கரவண்டிகள் போன்ற உதவிகளை பெருமனதோடு நிறைவேற்றி தந்தமைக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். எமக்கு பல தேவைகள் இருக்கின்றன. இதனை உதவி இணையத்தினூடாக இன்னும் பல தேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். எமது தேவைகள் சிலவற்றை பட்டியலிட்டு அனுப்பியுள்ளோம். இத் தேவைகள் உதவி இணையத்தினூடாக கிடைக்கும் என நம்புகின்றோம்.
- விபுலானந்த இல்லம், (இலங்கை), 11.05.03


உதவி வெப்பில் அறவாளி இல்லத்துப் பிள்ளைகளின் நிலமை பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்தேன். உதவியின் பயணக் கட்டுரையில் இந்த இல்லத்தில் 20 பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே உதவியில் செய்தியில் வெளியிடப்பட்ட தகவலும், மட்டக்களப்பில் பாதுகாப்பில்லாமல் இருந்து துன்பத்திற்குள்ளான சில சிறுமிகளின் நிலமையும் இன்று இந்த இல்லத்துப் பிள்ளைகளின் பாதுகாப்பற்ற நிலமையும் மிக அவசரமாக இவர்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்பதை எடுத்துக் காட்டுகிறது. மட்டக்களப்பில் "சூரியா" என்கின்ற பெண்கள் அமைப்பு பெண்கள், சிறுமிகள் விடயத்தில் மக்கள் மத்தியில் நன்றாகச் செயற்பட்டு வருவதாக அறிந்திருக்கின்றேன். அவர்களுடன் தொடர்புகொண்டு ஆலோசனை அல்லது உதவி பெற்றுக்கொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயமாகும்.
- நிருபா, (ஜேர்மனி), 09.05.03


கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு "கதிரொளி" சிறுவர் இல்லத்தின் விபரங்களை உதவி இணையத் தளத்தில் வெளியிட்டு உதவும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். எமது இல்லம் சம்பந்தமான விடயங்களை உதவி இணையத்தளத்தில் வெளியிடுவதில் எவ்வித ஆட்சேபணைகளும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.
- கதிரொளி இல்லம், (இலங்கை), 07.05.03


மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்தினை உதவி இணையத்தளத்தில் இணைத்துக் கொள்வதற்கு நிறைவேற்றுக் குழுவினர் பூரண சம்மதத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
- மாணிக்கவாசகர் இல்லம், (இலங்கை), 06.05.03


இத்துடன் 200 கனடிய டொலரும், சிறுவர் இல்லப்பிள்ளைகளுக்கு கடிதமும் அனுப்பியுள்ளேன். தயவு செய்து அதனை அவர்களுக்குச் சேர்ப்பித்துவிடுங்கள்.
- கவி, (கனடா), 22.04.03


உங்கள் சுகத்தை அறிய ஆவலாய் காத்திருக்கின்றோம். உங்கள் துன்பங்களையும், கஷ்ரங்களையும் படங்கள் மூலம் பார்த்து மிகவும் கவலைப்பட்டோம். நாங்கள் இருக்கின்றோம். கவலைப்படாதீர்கள். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். எங்கள் பாடசாலை வகுப்பில் நாங்கள் உங்களுக்காக நிதி சேர்க்கின்றோம். நன்றாகப் படியுங்கள்.
(தமிழர் கலையகத்திலிருந்து மிலானி, அனுசிலா, மெலானி, கேசவன், சின்னத்துரை, சாஜீறூபன், செந்தூரன், நிதர்ஷன், டினேஸ், ஆரணிக்கா, பிரியங்கா, சசிகரன், கௌதம், ஆர்த்தியா, சுபாந்தி, சுதன்யா, டினேஸ்குமார், இராகுலன், உமையாள், சங்கீதா, துசாரா, விபித்தா, ஷோபிகா, தீபனா "அறவாழி சிறுவர் பராமரிப்பு இல்ல" சிறுவர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து. இக்கடிதங்கள் அறவாழி இல்ல நிர்வாகிகளால் அங்குள்ள பிள்ளைகளுக்கு நேரடியாக கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டதால் ஏனைய இல்லங்களுக்கு கொடுக்கப்பட்டது.)
- தமிழர் கலையகம், (ஜேர்மனி), 15.02.03


உங்கள் சுகத்தை அறிய ஆவலாய் காத்திருக்கின்றோம். உங்கள் துன்பங்களையும், கஷ்ரங்களையும் படங்கள் மூலம் பார்த்து மிகவும் கவலைப்பட்டோம். நாங்கள் இருக்கின்றோம். கவலைப்படாதீர்கள். எங்களால் முடிந்த உதவிகளைச் செய்வோம். எங்கள் பாடசாலை வகுப்பில் நாங்கள் உங்களுக்காக நிதி சேர்க்கின்றோம். நன்றாகப் படியுங்கள்.
(தமிழர் கலையகத்திலிருந்து மிலானி, அனுசிலா, மெலானி, கேசவன், சின்னத்துரை, சாஜீறூபன், செந்தூரன், நிதர்ஷன், டினேஸ், ஆரணிக்கா, பிரியங்கா, சசிகரன், கௌதம், ஆர்த்தியா, சுபாந்தி, சுதன்யா, டினேஸ்குமார், இராகுலன், உமையாள், சங்கீதா, துசாரா, விபித்தா, ஷோபிகா, தீபனா "அறவாழி சிறுவர் பராமரிப்பு இல்ல" சிறுவர்களுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து. இக்கடிதங்கள் அறவாழி இல்ல நிர்வாகிகளால் அங்குள்ள பிள்ளைகளுக்கு நேரடியாக கொடுக்கவிடாமல் தடுக்கப்பட்டதால் ஏனைய இல்லங்களுக்கு கொடுக்கப்பட்டது.)
- தமிழர் கலையகம், (ஜேர்மனி), 15.02.03
 

பேசும் படம்

2109.jpg

பேசும் படம்...

2609.jpg